Shadow

“இது தான் சக்சஸ்” – செளந்தர்யா ரஜினிகாந்த் | With Love

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, வித் லவ் (With Love) திரைப்படம் கடந்த 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது. அரங்கம் நிறைந்த காட்சிகளாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் படக்குழு, பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் பேசிய நடிகை அனஸ்வரா, “இரண்டு நாட்களுக்கு முன் ரஜினி சாரைச் சந்தித்த தருணம் வாழ்வில் மறக்க முடியாதது. அவர் படம் பார்த்து சொன்ன ரெஸ்பான்ஸ் எங்களுக்கெல்லாம் ரொம்ப அர்த்தமுள்ளதா இருந்தது” என்றார்.

தயாரிப்பாளர் மகேஷ், “மதன் எனக்கு ரொம்ப நாளா தெரிஞ்ச பையன். லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி படங்களில் அவன் வேலை பற்றி எனக்குத் தெரியும். இந்தக் கதை சொல்லும்போதே, “இந்த படம் ஹிட்” எனத் தோன்றியது. அவன் கண்டிப்பாக அனஸ்வரா வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தான். அனஸ்வரா நடிப்பைப் பார்த்த பிறகு அவர் எவ்வளவு பெரிய பலம் என்று புரிந்தது. அபி எனக்குச் சொந்த தம்பி. அபியை நீங்கள் எல்லாரும் உங்கள் வீட்டுப் பையன் மாதிரிபார்த்துக் கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். ஷான் தான் என் மூன்று படத்திற்கும் இசையமைப்பாளர். இதில் அனீஷா கேரக்டருக்கு அவரின் இசை அற்புதமாக இருந்தது.

சௌந்தர்யா அக்காவுடனான உறவு 10 வருடங்களுக்கு மேலாக இருக்கிறது. அவர் எனக்கு எப்போதும் அக்கா தான். எங்களால் முடியாத பல விஷயங்களை ஒரு ஃபோன் கால்ல அவங்க முடிச்சு கொடுத்து விடுவார்கள். அக்கா, ஒரு பெரிய சப்போர்ட். எங்கள் டீமின்தூண். அவருடன் இன்னும் நிறைய படம் செய்வேன்” என்றார்.

தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்த், “ப்ரீமியர் ஷோவில் அப்பா படம் பார்த்து தான் படத்தை அடுத்த கட்டதிற்கு எடுத்துச் சென்று விட்டார். படம் முடிந்ததும், வீட்டிற்குச் சென்றபோது அப்பா, அம்மா இருவரும் என்னைக் கட்டிப்பிடித்துச் சிரித்தார்கள். அப்போது தான், ‘இதுதான் சக்ஸஸ்’ என்று உணர்ந்தேன். அந்த அப்பாவின் சிரிப்பை நான் வாழ்க்கை முழுக்க மறக்க மாட்டேன். 16–18 ஆண்டுகளாக சினிமா பயணத்தில் இருந்தாலும், இந்தப் படத்தின் மூலமாக தான் ‘வெற்றி’ என்பதன் உண்மையான அர்த்தம் புரிந்தது. இது தான் முதல் சக்சஸ் மீட்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் அனீஷா பாத்திரத்திற்கு மியூசிக் போட்டது பத்து நிமிடத்தில் உருவான இசை என்பது நம்ப முடியாத மாயை. இந்தப் படம் வெறும் ‘நல்ல படம்’ என்ற ஸ்டேட்டஸைத் தாண்டி, மக்கள் தங்கள் படமாகக் கொண்டாடுவது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி” என்றார்.

நடிகர் அபிஷன் ஜீவிந்த், “ரஜினி சார் சொன்ன அந்த ஒரு வார்த்தை தான் என்னை ஹீரோவாக இந்த முடிவை எடுக்கவும், அதில் நம்பிக்கை வைக்கவும் காரணமாயிருந்தது. இப்போ அவரை மீட் பண்ணும்போது, ‘ஹீரோ ஆகிட்டீங்க’ன்னு அவர் திரும்பச் சொன்னது, அந்த சர்கிள் கம்ப்ளீட் ஆன மாதிரி சந்தோஷமாக இருந்தது. சௌந்தர்யா மேம் படம் வெளியான பிறகு, ‘சக்ஸஸ் இப்படித்தான் இருக்குமா?’ என்று அவர் சொன்ன அந்த வார்த்தை எனக்கு ரொம்ப சந்தோஷம் கொடுத்தது. மகேஷ் அண்ணா, சௌந்தர்யா மேம், நான் மூன்று பேரும் இணைந்து அடுத்து ஒரு பெரிய படம் செய்கிறோம்” என்றார்.