திட்டிவாசல் என்றால் பெரிய கதவில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சிறிய திறப்பு அல்லது வாயில் ஆகும். கோயில், கோட்டை முதலியவை அடைத்திருக்கும் போது ஆட்கள் உள்ளே சென்று வருவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பே திட்டிவாசல். படத்தின் தலைப்போ, மத்திய சிறைச்சாலையின் உட்கதவான திட்டிவாசலைக் குறிக்கிறது. படத்தின் டைட்டில் அனிமேஷனே, சிறைச்சாலை திட்டிவாசலில் இருந்து பான்-அவுட் (Pan-Out) ஆகி மத்தியச் சிறைச்சாலையின் முகப்பிற்கு வந்து நிற்பதுதான்.
சிலரின் பகாசூரப் பேராசைக்கு, முள்ளம்பாறை எனும் மலைக்கிராம மக்கள் எப்படி பலியாகின்றனர் என்பதுதான் படத்தின் கதை.
மகேந்திரன், வினோத் கின்னி என இரண்டு நாயகர்கள் படத்தில். அவர்களுக்கு தனு ஷெட்டியும், ஐஸ்வர்யாவும் முறையே ஜோடிகள். இயற்கையைக் கூறு போடும் சுரண்டலைப் பற்றிப் படம் பேசுவதால், பிரதான பாத்திரங்களான இவர்களுக்குக் காதலிப்பதைத் தவிர வேறு வேலையில்லை. என்றாலும், செம்பருத்தியாக நடித்திருக்கும் தனு ஷெட்டி, தனது கிராமத்தின் மீது ஊடக வெளிச்சம் விழ வேண்டும் என்பதற்காகச் செய்யும் காரியம் ஏற்புடையதாக இல்லாவிட்டாலும், வேறென்ன தான் செய்திருக்க முடியுமென்ற அங்கலாய்ப்பும் வருத்தமும் கோபமும் ஒருங்கே எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
படத்தின் முதல் பாகத்து அட்ராக்ஷன் என்றால் அது மூப்பனாக நடித்திருக்கும் நாசரே! அழுத்தமான திரைக்கதையின்மையைப் போக்க நாசர் உதவியிருந்தாலும், மலையும் மலை சார்ந்த வாழ்வையும் நெருக்கமாகக் காட்சிப்படுத்தவில்லை இயக்குநர் பிரதாப் முரளி. படத்தின் இரண்டாம் பாதியில், வாஞ்சிநாதனாகச் சிறையில் அறிமுகமாகிறார் அஜய் ரத்னம். ‘காடு’ படத்தில் சமுத்திரக்கனி ஏற்ற பாத்தித்தை அவர் நினைவுப்படுத்துகிறர். கார்ல் மார்க்சின் புத்தகத்தை அவர் கையில் வைத்துள்ளார். புரட்சி செய்ததால் சிறைக்குள் அடைப்பட்டிருக்கும் அவரைத் தலைவர் என்றே அனைவரும் அழைக்கின்றனர். அவரும் யாரையும் தோழர் என்று விளிப்பதில்லை.
மாவோயிஸ்ட் என முத்திரை குத்தப்படும் முள்ளம்பாறை கிராமத்தினருக்கு அரசியல் அறிவைப் புகட்டுகிறார் வாஞ்சிநாதன். ஆயுதம் ஏந்துவது அல்ல புரட்சி என அவர் சொன்னாலும், படத்தின் முடிவு அங்கு சென்ற பின்பே சுபமாய் முடிகிறது. வாஞ்சிநாதனாக அஜய் ரத்னம் நடித்துள்ளார். அவரைத் தோழர் என விளிக்காமல் தலைவரென்றே அனைவரும் அழைப்பது வித்தியாசமாய் உள்ளது. அஜய் ரத்னத்தின் மகன் தீரஜ் ரத்னம், ஜெயிலர் வெற்றிவேலாக நடித்துள்ளார். இரண்டாம் பாதியின் சுவாரசியத்துக்கு ஜெயில் காட்சிகள் உதவியுள்ளன.