Shadow

விழித்திரு விமர்சனம்

Vizhithiru movie review

‘ஓர் இரவில் நான்கு கதைகள்’ என்பதுதான் படத்தின் உபத்தலைப்பே!

திருநெல்வேலிக்கு ஊர் திரும்ப வேண்டிய ஒருவனின் பர்ஸ் சென்னையில் பிக்பாக்கெட் அடிக்கப்படுகிறது. அன்றிரவு அவனுக்கு என்னென்னவெல்லாம் நிகழ்கிறது என்பதுதான் படத்தின் கதை.

விதார்த், வெங்கட் பிரபு, ராகுல் பாஸ்கரன் எனப் படத்தில் மூன்று பிரதான கதாபாத்திரங்கள் இருந்தாலும், கிருஷ்ணா தான் படத்தின் நாயகன். பர்ஸைக் கிருஷ்ணா தொலைப்பதில் இருந்தே கதை தொடங்குகிறது. அவரது படபடவென்ற மேனரிசத்துக்கு ஏற்ற பாத்திரம்.

திருடன் சந்திர பாபுவாக விதார்த். திருடி சரோஜா தேவியாக சாய் தன்ஷிகா. இருவரது அறிமுகமும், ஒருவரை ஒருவர் ஏய்க்கப் பார்க்கும் காட்சிகளும் ரசிக்க வைக்கின்றன. வெடுக் வெடுக்கெனப் பேசும் கதாபாத்திரத்தில் சாய் தன்ஷிகா அசத்தியுள்ளார். ஆனால், இத்தகைய சீரியசான படத்துக்கு தம்பி ராமையாவின் அசட்டு நகைச்சுவையும், விஜய டி.ராஜேந்தரின். குத்துப் பாட்டும் அவசியம் தானா என்றொரு கேள்வி எழுகிறது.

பேபி சாராவின் கண் பார்வையில்லாத் தந்தையாக இயக்குநர் வெங்கட் பிரபு நடித்துள்ளார். தன் நாய்க்குட்டியைத் தேடி தந்தையைப் பிரியும் பேபி சாரா, ராமசந்திரன் துரைராஜிடம் சிக்கும் காட்சிகள் கிளிஷேவாக இருப்பதோடு, படத்தின் மையக் கருவிற்கும் எதிர் திசையில் பயணிக்கிறது. படத்தின் கரு எனப் பார்த்தால், அதிகாரத்தைத் தக்க வைக்க அதிகார மையத்தில் உள்ளவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதை நெற்றிப் பொட்டில் அறைந்தாற்போல் சொல்வதுதான்.

படத்தில் நட்சத்திரப் பட்டாளமே இருந்தாலும், ரிக்ஷா ஓட்டியாக வரும் ராகுல் தாத்தா கவருகிறார். அத்தனை கதாபாத்திரங்களையும் அழகாகத் தன் திரைக்கதையில் பேலன்ஸ் செய்துள்ளார் இயக்குநர் மீரா கதிரவன். ‘விக்ரன் க்ரூப் ஆஃப் இண்டஸ்ட்ரீஸ் எம்.டி.யின் மகன்’ என எதற்கெடுத்தாலும் சொல்லும் ராகுல் பாஸ்கரன், ஒரு ரூபாய்க்காகப் பிச்சைக்காரனிடம் கையேந்தும் இடம் அழகு.

காவல்துறை உயரதிகாரியாக, சிரஞ்சீவியின் சகோதரரான நாகேந்திர பாபு நடித்துள்ளார். அவருக்கு போஸ் வெங்கட் பின்னணிக் குரல் கொடுத்திருப்பதால், நாகேந்திர பாபுவின் முகம் மனதில் பதிய நேரமாகிறது. அதனால் இடைவேளையின் பொழுது வரும் அவரது சூளுரை பலமான தாக்கத்தை ஏற்படுத்தத் தவறுகிறது. படத்தின் முதல் பாதி கொஞ்சம் ஏமாற்றத்தைத் தந்தாலும், இரண்டாம் பாதி அதை ஈடு செய்யும் விதத்தில் அமைந்துள்ளது.

கெளரவக் கொலைகளின் பின்னணியில் அரசியல் ஆதாயம் உள்ளதென ஆதாரங்களைத் திரட்டும் பத்திரிகையாளராக சரண் நடித்துள்ளார். நான்கு கதைகளும் ஒரே புள்ளியில் இணைவதில் இருந்து விறுவிறுப்பு கூடுகிறது. கிருஷ்ணாவிற்குத் தான் வேட்டையாடப்படுகிறோம் எனத் தெரியுமே தவிர, ஏன் என்று கூடத் தெரியாது. கிருஷ்ணாவிற்கு முத்துகுமார் என்றும், வெங்கட் பிரபுவிற்கு திலீபன் என்றும் பெயர் சூட்டியுள்ளார் மீரா கதிரவன். ஆனால், இப்பெயர்கள் படத்தின் பொலிடிக்கல் மைலேஜிற்குப் பெரிதும் உதவவில்லை. அதிகாரத்திற்கு எதிரான கவன ஈர்ப்புப் பெயர்களாகவே உள்ளது. எனினும், மார்ச்சுவரியில் இருக்கும் பிரதான கதாபாத்திரத்தின் உடலை, சிங்கள ஆர்மியால் சுடப்பட்ட பிரபாகரனை நினைவுப்படுத்தும் வண்ணம் காட்சிப்படுத்தியுள்ளதைக் குறிப்பிட வேண்டும்.

வேலியே பயிரை மேயுமென மீரா கதிரவன் படம் நெடுகேவும் கலவரப்படுத்தி இருந்தாலும், ஏதோ ஒரு சன்னமான நம்பிக்கையை க்ளைமேக்ஸில் விதைத்துச் சுபமாக முடித்து வைக்கிறார்.