Shadow

தொட்ரா விமர்சனம்

Thodraa-movie-review

தமிழ்நாட்டை உலுக்கிய இரண்டு சம்பவங்களை ஒன்றாக இணைத்து ஒரே படமாக எடுத்துள்ளதாக விளம்பரப் பதாகைகள் தெரிவிக்கின்றன. மேலும் ஆணவக் கொலையை மையப்படுத்திய படமும் கூட! ஆணவக்கொலை சம்பந்தமான இரண்டு சம்பவங்களையும் திரையில் பதியப்படவேண்டும் என்ற எண்ணத்திற்காகவே இயக்குநரைப் பாராட்டலாம்.

படத்தின் தொடக்கமே உடுமலைப்பேட்டையில் ஷங்கர் கொலை செய்யப்பட்டது போன்ற காட்சியமைப்புடன் தொடங்குகிறது. கதாபாத்திரத்தின் பெயரும் ஷங்கரே! ஆனால், அவரது காதலியின் பெயர் திவ்யா. அதாவது, கதாநாயகிக்குத் தர்மபுரி இளவரசனின் காதலி பெயரை வைத்துள்ளார் இயக்குநர். நாயகியின் அண்ணன் கதாபாத்திரம் பெயர் பவுன்ராஜ். தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை யுவராஜின் குறியீடாகக் கொள்ளலாம்.

ஷங்கர் திவ்யாவைக் காதலித்தார் என எழுதவே நெருடலாக உள்ளதால், நாயகன் ப்ரித்விராஜன் நாயகி வீணாவைக் காதலித்தார் எனக் கொள்ளலாம். ப்ரித்விராஜ் நாயகன் என்றாலும், பவுன்ராஜாக வரும் எம்.எஸ்.குமாரைச் சுற்றியே கதைக்களம் நகர்கிறது. அறிமுக நடிகராயினும் படத்தைச் சுமக்குமளவு ஸ்க்ரீன்-பிரசென்ஸும் நடிப்பும் கைவரப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

எடுத்துக் கொண்ட கருவிற்குத் தகுந்தவாறு படத்தின் முதல் பாதி பயணித்தாலும், இரண்டாம் பாதி யு-டர்ன் எடுத்து எதிர்த்திசையில் செல்கிறது. ஆணவக் கொலையைப் பணத்துக்காகச் செய்யப்படும் காதலாக்கி, நாயகனை வெட்டுவதற்கு முன், “பணம் முக்கியமில்லைடா ஜாதி தான்டா முக்கியம்” என்றொரு வசனம் வைத்துவிடுகிறார் இயக்குநர். ‘ஆணவக்கொலை பற்றிய படம்தானே இது!’ என்ற குழப்பம் எழுகிறது. ‘படத்தின் முடிவைப் பார்வையாளர்களின் முடிவுக்கு விடப்பட்ட ஓப்பன் எண்ட் (Open End)’ என்கிறார் பாக்யராஜின் சீடரான இயக்குநர் மதுராஜ்.

படக்குழுவினரே விளம்பரப்படுத்தி இருப்பது போல், அவர்கள் தொட்டுள்ள இரண்டு சம்பவங்களும் தமிழகத்தையே உலுக்கியவை. அதை அப்படியே நீர்த்துப் போகச் செய்யுமளவு, திரைக்கதையில் பெரிய குழி வெட்டி, இயக்குநர் ஏ.வெங்கடேஷ் கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளனர். அதாவது ஏன் காதலித்து வீட்டை விட்டு இளைஞர்கள் வெளியேறக் கூடாது என்ற கிளைக்கதை, படத்தின் மையக்கதையை விட அழுத்தமாகச் சொல்லப்படுகிறது.

தலைப்பைக் கூடப் படத்தின் கதையோடு பொருத்திப் பார்க்கக் கடினமாக உள்ளது. ‘தொட்ரா’ என்றால் ‘முடிஞ்சா தொட்டுப் பார்றா!’ என்ற அறைகூவலாகக் கொள்ளலாம். அப்படி நாயகன் எங்கும் ஆதிக்கச் சாதி வில்லனிடம் சொல்வதில்லை.  ஓடி ஒளிந்தே வாழ்கின்றனர். ஒரு காட்சியில், பவுன்ராஜ், ‘கோட்டை கட்டிக்கோங்க. வேணாங்கல்ல. ஆனா, எங்க கோட்டைக்குள்ள வர நினைச்சீங்க, அவ்ளோ தான்!’ என ஆவேசமாக மிரட்டுகிறார். அதாவது அவரது தொனி, ‘முடிஞ்சா எங்க சாதியைச் சேர்ந்த பொண்ண தொட்டுப் பாருங்கடா!’ என்று சத்தமாக ஒலிக்கிறது. வில்லனின் குரலைப் படத்தின் தலைப்பாக வைத்து, வில்லன் ஜெயிப்பது போல் காட்டுவதெல்லாம் புதுமை தான் என்றாலும், ரசிக்கும்படியாக இல்லை.

நாயகனின் சமத்துவபுர வீடு கொளுத்தப்படுகிறது. நாயகனின் அம்மாவும் தங்கையும் என்னானர்கள் என்று சொல்லப்படவில்லை. படத்தின் முடிவோ முதல் காட்சியிலேயே தெரிந்து விடுகிறது. அப்படி ஆகிவிடக்கூடாது என்ற பதற்றத்தைத் திரைக்கதை பார்வையாளர்களுக்குத் தராததோடு, அப்படிச் செய்பவர்கள் மீது கோபமும் எழாத அளவு ‘ட்விஸ்ட்’கள் நிறைந்துள்ளது மிகவும் அயர்ச்சியை அளிக்கிறது. ஈயம் பூசின மாதிரியும் இருக்கவேண்டும், பூசாத மாதிரியும் இருக்கவேண்டும் என்பதற்கான இயக்குநரின் மெனக்கெடல் நன்றாகவே காட்சிகளில் புலப்படுகிறது.