Shadow

மூன்று பயணங்கள் – ஒரு வண்டி – ஹைப்பர் லிங் கதை

1-vandi-3-payanam

வண்டியைக் கதையின் மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் ‘வண்டி’. ரூபி ஃபிலிம்ஸ் ஹஷீர் தயாரிப்பில் விதார்த், சாந்தினி நடித்திருக்கிறார்கள். சூரஜ் எஸ் குரூப் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை ரஜீஷ் பாலா இயக்கியிருக்கிறார். இயக்குநரும் தயாரிப்பாளரும் மலையாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ்நாடு எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ்க் கலாச்சாரமும் ரொம்ப பிடிக்கும். அதை ஒட்டி ஒரு படம் பண்ணனும், ரொம்ப யதார்த்தமாக, ரியலாக எடுக்கணும்னு ஆசைப்பட்டோம். இந்த வண்டி படத்தில் நிறைய இடங்களில் பல கேமராக்கள் கொண்டு மறைத்து வைத்தெல்லாம் எடுத்திருக்கிறோம். இந்த வகையில் தமிழில் முதல் படமாக இருக்கும் என்று நினைக்கிறேன், தொடர்ந்து நிறைய தமிழ்ப் படங்கள் தயாரிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்” என்றார் தயாரிப்பாளர் ஹஷீர்.

“இந்த படம் ஒரு ஹைப்பர் லிங் கதையமைப்பை கொண்ட படம். இதில் 3 பயணங்கள் உள்ளன, அதில் நானும் ஒரு கதையில் நடித்திருக்கிறேன். இயக்குநர் படத்தை எடுக்கும்போது நிறைய விஷயங்களில் ஏன் என்ற கேள்வி எழுந்தது. அதைக் கடைசியாக பார்க்கும்போது தான் இயக்குநர் மனதில் என்ன நினைத்தார் என்பது புரிந்தது” என்றார் நடிகர் விஜித்.

“சோலோ படத்தில், ‘சீதா கல்யாணம்’ பாடல் இசையமைத்திருந்தேன். அந்தப் பாடலுக்கு மிகப்பெரிய வரவேற்பை தமிழ் ரசிகர்கள் கொடுத்தார்கள். நான் வடபழனியில் தான் காலேஜ் படிச்சேன். தொடர்ந்து தமிழ் படங்களுக்கு இசையமைக்க விரும்புகிறேன்” என்றார் இசையமைப்பாளர் சூரஜ் எஸ் குரூப்.

“பத்திரிக்கையாளர்கள் பாராட்டில் இன்று மேற்கு தொடர்ச்சி மலை 3வது வாரமாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய் சேதுபதி, லெனின் பாரதி அளவுக்கு எனக்கும் மகிழ்ச்சி. வீரம் படத்தின் போது எனக்கு இந்தக் கதையைச் சொல்ல வந்தார்கள். 4 கேமரா வைத்துப் படத்தை எடுத்தார்கள். இயக்குநர் ரொம்பவே கஷ்டப்படுத்தினார். நாங்கள் நடித்து முடித்தாலும், ஏதாவது ஒரு கேமிரா எங்களைப் படமெடுத்துக் கொண்டே இருப்போம். நாங்கள் அந்தக் காட்சிக்கான ரியாக்‌ஷனைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கவேண்டும். ஆனால், இப்ப அதன் அவுட்புட்டைப் பார்த்தால் பிரம்மாண்டமாக இருக்கு.

‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகா உடன் நடிக்கும்போது இயக்குநர் ராதாமோகன் என் நடிப்பைப் பாராட்டித் தள்ளினார். அதற்குக் காரணம், இந்தப் படத்தில் நான் எடுத்த பயிற்சி தான். இந்தப் படத்தில் ஒரு ஃப்ரேம் மாறினாலும் படம் புரியாது. அப்படிப்பட்ட ஒரு ஹைப்பர்-லிங் படம். தயாரிப்பில் இருக்கும்போது சில பிரச்சினைகள் நடந்தது, அப்போது தேனப்பன் சாரிடம் சென்றேன். அவர் தான் இதைச் சுமூகமாக முடித்து வைத்தார். குப்பத்து ராஜா என்ற ஒரு படத்தை எடுத்துக் கொண்டிருக்கும்போது இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய முன் வந்தது பெரிய விஷயம். அது தான் படத்தின் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கை. இந்தப் படத்துக்கு சூரஜ் ஒரு பாட்டு போட்டுக் கொடுத்தார். இந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட் பாடலாக அது அமைந்திருக்கும். ஆனால் அது படத்தில் இல்லை, அந்தப் பாடலில் நான் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் அவரிடம் கேட்டேன். தயாரிப்பாளர் அவரது அடுத்த படத்துக்கு அதை வாங்கிவிட்டாராம்.

அடுத்து ஒரு கேங்க்ஸ்டர் படம் நடிச்சிருக்கேன், எல்லா வகையான படங்களிலும் நடிக்க விருப்பம் இருக்கிறது. என்னை ஒரு கூண்டில் அடைத்து விட வேண்டாம்” என்றார் நடிகர் விதார்த்.