Shadow

சிவகார்த்திகேயனின் இமேஜ்க்கு வரிகள் – யுகபாரதி

Yugabharathi-for-SK

பாடல் வரிகள் என்பவை வெறும் வார்த்தைகள் மட்டும் இல்லை, அதையும் தாண்டி படத்தில் இயல்பாக அமைய வேண்டும். இந்த விஷயத்தில், இயக்குநர் பொன்ராம், சிவகார்த்திகேயன், டி.இமான் கூட்டணிக்கு, பாடலாசிரியர் யுகபாரதி தான் அவர்களுக்குச் சாலப் பொருந்துவார். ‘ரஜினி முருகன்’ மற்றும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ பாடல்களை கேட்டாலே எல்லோருக்கும் இது புரியும்.

‘சீமராஜாவிலும்’ இந்தக் கூட்டணியின் மாயாஜாலம் தொடர்கிறது. “இதனை மாயாஜாலம் எனக் குறிப்பிடுவதை விட, இந்தக் குழுவில் எங்கள் ஒவ்வொருவருக்கும் என்ன தேவை என்பதை நாங்கள் புரிந்து வைத்துள்ளதாகவே நான் கூறுவேன். சிவகார்த்திகேயன், பொன்ராம் மற்றும் டி.இமான் உடனான என் பயணம் சீமாராஜாவில் என் வேலையை மேலும் எளிதாக்கியிருக்கிறது” என்றார் யுகபாரதி.

“நாங்கள் எல்லோரும் இந்தப் படத்தில் ஒன்றாக ஒப்பந்தமான உடனே எங்கள் உடலில் திருவிழா அதிர்வு பரவியது. மேலும், சிவகார்த்திகேயனுடன் பழகிய பிறகு, அவரது இமேஜுக்கு ஏற்றவாறு வரிகளைச் சேர்ப்பதில் அது எனக்கு நிறைய உதவியது” என்றார். 

“சீமராஜா ஆல்பம் வேடிக்கை, கொண்டாட்டம், உணர்வுகள் மற்றும் மகிழ்ச்சியைப் பிரதிபலிக்கும் வகையில் உருவாகி மக்களைச் சிறப்பாகச் சென்றடைந்து இருக்கிறது. இதற்குப் பாடல் வரிகள் மட்டும் காரணமல்ல, ரசிகர்களுக்கு பிடிக்கும் விதத்தில் இமாம் சார் கொடுத்த இசையும் காரணம். பாலசுப்ரமணியம் சாரின் வண்ணமயமான ஒளிப்பதிவும், நடன இயக்குநர்களின் உழைப்பும் கூடுதலாகக் கவர்ந்திருக்கிறது” என்று சீமராஜா படத்தைப் பற்றிச் சிலாகித்தார் பாடலாசிரியர் யுகபாரதி.