32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

“மனிதத்தையும் அன்பையும் பேசும் படம்” – ராஜு முருகன் & சசி | Tourist Family

Dinesh R சேலம் Published: 28/04/2025 3 நிமிட வாசிப்பு Updated: 29/04/2025 சினிமா
எழுத்து அளவு:

நடிகர் சசிகுமார் – சிம்ரன் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில், வரும் மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ள ‘டூரிஸ்ட் ஃபேமிலி ‘ எனும் திரைப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு, படக்குழுவினருடன், திரையுலக முன்னணி பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. வெகு கோலாகலமாக நடைபெற்ற இவ்விழாவினில் கலந்துகொண்ட திரை பிரபலங்கள், படம் பார்த்த மகிழ்ச்சியில் படம் குறித்த தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இந்நிகழ்வினில் பேசிய இயக்குநர் ராஜு முருகன், “ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு கலகலப்பான, உணர்வுப்பூர்வமான ஃபேமிலி என்டர்டெயினர் படமாக இருந்தது. தமிழ் சினிமாவில் இன்றைய சூழலில் அன்பைப் பேசுகிற, நம்முடைய மென் உணர்வுகளைப் பேசுகிற மனிதத்தைப் பேசக்கூடிய படைப்புகள் வருவது அரிதாகிவிட்டது. அப்படி வருகிற சில படங்கள் கூட, கிராப்ட் அளவில் சரியாக இல்லாமல், சுவாரசியம் இல்லாமல் போவதால், மக்களுக்கான படங்களாக இல்லாமல் போய்விடுகிறது. இந்த சூழ்நிலையில் தான், கதையும் படைப்புத் திறனும் சரியாகக் கலந்த கலவையாக இந்த அற்புதமான படைப்பு வந்துள்ளது. இந்தப் படம் பார்த்த போதே கண்டிப்பாக இப்படத்தைத் திரையரங்குகளில் மக்கள் கொண்டாடுவார்கள் என நினைத்தேன். இயக்குநர் அபிஷன் ஜீவிந் உடைய முதல் படம் போலவே தோன்றவில்லை. படத்தில் அத்தனை முதிர்ச்சி இருந்தது. ஒரு சிக்கலான பின்னணியை எடுத்துக் கொண்டு, எந்த அரசியலும் பேசாமல், மனிதர்களுக்கான அற்புதமான அரசியலைப் பேசியுள்ளார். நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை, அறிவுரையாக இல்லாமல் செம ஜாலியாக சொல்லியுள்ளார். அவருக்குத் தமிழ் சினிமாவில் பெரிய எதிர்காலம் இருக்கிறது. சசிகுமார் சாரைப் பார்க்கும்போது மிகுந்த ஆச்சரியமாக இருக்கிறது. வெற்றியோ, தோல்வியோ அவருக்கென்று மக்களிடம் ஒரு மரியாதை இருந்து கொண்டே இருக்கும். சமீபமாக அவர் தேர்ந்தெடுக்கிற படங்கள், அடுத்த தளத்தில் இருக்கிறது. அந்தளவில் மிக முக்கியமான படமாக டூரிஸ்ட் ஃபேமிலி இருக்கும். அழகான கதைகள் கொண்ட மலையாளப் படங்கள் மாதிரி தமிழில் வருவதில்லை எனும் ஏக்கம் இருந்து கொண்டே இருக்கிறது. அதை உடைக்கிற ஒரு தயாரிப்பு நிறுவனமாக மில்லியன் டாலரை நான் பார்க்கிறேன். அப்படி ஒரு அழகான படைப்புகளைத் தொடர்ந்து செய்கிறார்கள். இப்படம் அவர்களுக்கு ஹார்ட்ரிக் வெற்றியாக அமைய வாழ்த்துக்கள்” என்றார்.

இயக்குநர் சசி, “ஒரு திரைப்படம் பார்க்கிற யாரையுமே சங்கடப்படுத்தாமல் அதே சமயத்தில், சந்தோஷப்படுத்துகின்ற வகையில் ஒரு படம் செய்வது அதிலும் அதை அதை முதல் படமா செய்வதற்கு மிகப்பெரிய மனது வேண்டும். இயக்குநருக்குப் பெரிய மனது இருக்கிறது. படத்தில் ஒவ்வொரு காட்சியும் அத்தனை அழகாக அற்புதமாக உள்ளது. ஸ்ரீலங்கா பின்னணியில் ஒரு கருவை எடுத்துக் கொண்டு, அதில் அரசியல் பேசாமல், அன்பைப் பேசியதற்காகவே இது தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படமாக இருக்கும். மில்லியன் டாலர் நிறுவனம் மெயில் பார்த்து இந்தக் கதையைக் கேட்டிருக்கிறார்கள், இது தமிழ் சினிமாவில் நடக்காத அதிசயம், அவர்கள் நல்ல கதைகளைத் தேடித் தயாரிக்கும் முயற்சி பாராட்டுக்குரியது. ஒரு அப்பாவாக சசிகுமார் மிகச் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார், சிம்ரன் மேடம் உடனான காட்சிகள் அனைத்தும் அருமையாக உள்ளது. முழுக்க முழுக்க அன்பைப் பேசும் இப்படம் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும்” என்றார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.