
டர்ம் புரொடக்ஷன்ஸ் பேனரில் எஸ். உமா மகேஸ்வரி தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ட்ராமா’ திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் கே. பாக்யராஜ் படத்தின் இசையை வெளியிட, படக்குழுவினருடன் நடிகர் ‘டத்தோ’ ராதா ரவி மற்றும் தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர். அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இப்படத்தை இயக்கியுள்ளர். மெடிக்கல் க்ரைம் திரில்லராக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆல்பா 3 என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வழங்குகிறது. வரும் 21ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இசையப்பாளர் ராஜ் பிரதாப், “’ட்ராமா’ திரைப்படம் ஒரு ஆன்தாலஜி மூவி. மூன்று கதை, மூன்று களங்கள். இவை அனைத்தும் இன்டர்-லிங்க் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். ரசிகர்களுக்கு இந்தப் படம் வித்தியாசமான அனுபவத்தை வழங்கும்” என்றார்.
இயக்குநர் ராகவ் மிர்தாத், ”வாழ்க்கையில் எந்த துறையாக இருந்தாலும் முதல்முறையாக பணியாற்றும் போது அந்த அனுபவம் ‘ட்ராமா’வாகத்தான் இருக்கும். அதிலும் சினிமாவில் இத்தகைய அனுபவம் அதிகமாகக் கிடைக்கும். இந்த ட்ராமாவைக் கண்டு அச்சப்படாமல் தொடர்ந்து பயணித்தால், அந்த ட்ராமா அனுபவம் நிச்சயம் வெற்றியாக மாறும்” என்றார்.
நடிகை சாந்தினி தமிழரசன், ”என்னைத் திரையுலகில் அறிமுகம் செய்த குரு கே. பாக்யராஜ் இங்கு வருகை தந்திருக்கிறார். நான் இத்தனை ஆண்டு காலம் சினிமாவில் இருக்கிறேன் என்றால் அதற்கு அவர் தான் காரணம். தம்பிதுரை மாரியப்பன் திறமையான இயக்குநர். இந்தப் படத்திற்கான கான்செப்ட் மிகவும் பெருந்தன்மையானதாக இருந்தது. அவரிடம் கதையைக் கேட்ட பிறகு அவர் ஒரு வீடியோவைக் காண்பித்தார். அதுவும் சிறப்பாக இருந்தது. எப்போதும் சிரித்த முகமாகவே அவர் இருப்பார். பாசிட்டிவாகத்தான் பேசிக் கொண்டிருப்பார். அவர் செய்து வரும் வேலையையும் விடாமல் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படம் இன்ட்ரஸ்டிங்கான கான்செப்ட் என்பதால் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும் தரமானதாக இருக்கும்” என்றார்.
நடிகர் விவேக் பிரசன்னா, ”இயக்குநர் தம்பிதுரைக்கு சினிமா மீது இருக்கும் தீவிரமான காதலால் அவர் வேலைக்குச் சென்று கொண்டே இப்படத்தின் அனைத்துப் பணிகளையும் செய்தார். கடந்த 20 நாட்களாக இப்படத்தினை மக்களிடம் சேர்ப்பதற்காகத் தொடர்ந்து விளம்பரப் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். தம்பிதுரை போன்ற திறமையான இயக்குநர்கள் தொடர்ந்து படங்களை இயக்க வேண்டும். அவர் இன்னும் உயரங்களைத் தொட வேண்டும். அதற்கு இந்த ட்ராமா படத்தின் வெற்றி அவசியம்” என்றார்.
விநியோகஸ்தர் இளமாறன், “பதினாறு ஆண்டுகளாக திரைத்துறையில் பணியாற்றி வருகிறேன். இதில் கிடைத்த அனுபவத்தை கொண்டு ஆல்பா 3 என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனத்தை தொடங்கி இருக்கிறேன். இந்த நிறுவனத்தின் சார்பில் முதல் முதலாக ‘ட்ராமா’ படத்தை வெளியிடுகிறேன். முதல் படம் நல்ல படமாக இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன். அந்தத் தருணத்தில் ‘ட்ராமா’ படத்தைப் பார்த்தேன். இப்படத்தின் பாடல்கள் தான் என்னை முதலில் கவர்ந்தன. பாடல்களைப் போல் படத்தின் கதையும் நன்றாக இருக்கிறது. மக்கள் மத்தியில் இப்படத்திற்கு ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
இயக்குநர் கே. பாக்யராஜ், “ட்ராமா என்றால் தமிழில் என்ன என்று என் உதவியாளரிடம் கேட்டபோது, அவர் ‘பாதிப்பு’ என சொன்னார். சினிமாவில் பாதிப்பு இல்லாமல் எதுவும் இல்லை. என்னுடைய உதவியாளர்களிடம் கதை விவாதத்தின் போது கதையை யோசிக்காதே, உன் மனதுக்கு எது பாதிப்பை ஏற்படுத்தியதோ, அதை மனதிற்குள் அலசினால் நல்ல கதை கிடைக்கும் எனச் சொல்வேன்.
எந்த நாட்டிலும் எந்த மக்களிடத்திலும் வரவேற்பைப் பெறும் ஒரே ஸ்டோரி லவ் ஸ்டோரி தான். இன்றைய இளைஞர்கள் கூட காதலிக்கிறார்களோ இல்லையோ காதலைப் பற்றி ஒரு கவிதையை எழுதி விடுவார்கள். அதனால் முதலில் அறிமுகமாகுபவர்கள் காதல் கதையை இயக்க வேண்டும் என்றால் உடனடியாக எழுதி இயக்கி விடுவார்கள். ஆனால் தம்பிதுரை அப்படி அல்ல. இந்தத் திரைப்படத்தில் மூன்று கதைக்களங்கள், கதைகள். மற்றவர்களைப் போல் வழக்கமாக இல்லாமல் வித்தியாசமான சப்ஜெக்ட்டைத் தேர்வு செய்திருக்கிறார் தம்பிதுரை. இதற்காகவே அவரைப் பாராட்டலாம். படம் நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.