32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

“உண்மையாக உழைத்தால் நமக்கானது தானாக வந்து சேரும்” – யோகிபாபு

Dinesh R சேலம் Published: 02/02/2025 3 நிமிட வாசிப்பு Updated: 03/02/2025 இது புதிது
எழுத்து அளவு:

யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B.யுவராஜ் தயாரிப்பில், இயக்குநர் பிரதாப் இயக்கத்தில், நடிகர் சத்யராஜ், ஜெய், பிரக்யா நக்ரா, யோகிபாபு நடிப்பில், குடும்பங்களோடு கொண்டாடும் கலக்கலான நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ள படம் “பேபி & பேபி” ஆகும்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ஒரு மிகப்பெரிய குடும்பத்திற்குள் எதிர்பாராதவிதமாக நுழையும் ஒரு குழந்தையால் ஏற்படும் நகைச்சுவைக் கலாட்டா தான் இந்தப் படம்.

இயக்குநர் பிரதாப், “இந்தக் கதையை எழுதியவுடன் யோகிபாபு சாரிடம் தான் முதலில் போனேன். அவருக்குக் கதை பிடித்திருந்தது. பின் பல தயாரிப்பாளர்களிடம் போனேன், இறுதியாக யுவாராஜ் சாரைச் சந்தித்தேன். அவர் கதை கேட்டு, மிகவும் ஆர்வமாகி இந்தக் கதாப்பாத்திரத்துக்கு இவரைப் போடலாம், அல்லது இவரைப் போடலாம் என அவர் தான் எல்லா நடிகர்களையும் ஒருங்கிணைத்தார். நான் தான் பட்ஜெட் பற்றிக் கவலைப்பட்டேன். இந்தக் கதையை சத்யராஜ் சாரிடம் சொன்னதும் அவர் ஒத்துக்கொண்டார். அவர் படத்திற்குள் வந்ததும் படமே மாறிவிட்டது. ஜெய் சார் இப்படத்திற்காக அவ்வளவு உழைத்தார். ரம்ஜான் நோம்பினில் மூன்று வேளை சாப்பிடாமல் நடித்தார். யோகிபாபு சார், அவர் தான் இந்தப்படம் நடக்கக் காரணம். கீர்த்தனா மேடம் முதலில் அம்மாவாக நடிக்க மாட்டேன் என்றார். ஆனால் சத்யராஜ் சார் ஜோடி என்றதும் உடனே ஓகே சொல்லிவிட்டார். பிரக்யா நல்ல ஒத்துழைப்பைத் தந்தார். ஒளிப்பதிவாளர் மிக அருமையாகச் செய்து தந்துள்ளார். நான் இமான் சார் இசையமைக்க வேண்டும் என ஆசைப்பட்டேன், தயாரிப்பாளரும் அவரையே சொன்னார். அவர் கதை கேட்டு உடனே ஒத்துக்கொண்டார்” என்றார்.

யோகிபாபு, “இந்தப் படத்தில் வாய்ப்பு தந்த பிரதாப் சாருக்கு நன்றி. படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. பிரதாப் 17 வருட நண்பர். 17 வருடம் முன்பு ஒரு படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்துள்ளோம். இன்னக்கி அவர் இயக்குநர், நான் காமெடி நடிகன். நாம் உண்மையாக உழைத்தால் நமக்கானது தானாக வந்து சேரும். இந்தப்படம் மிக நல்ல அனுபவம். சத்யராஜ் சாருடன் எப்போதும் கவுண்டமணி சார் பற்றிப் பேசிச் சிரிப்போம். ஜெய் இன்னும் எப்படி இளமையாகவே இருக்கிறீர்கள் எனக் கேட்டேன், அவர், ‘சிங்கிளா இருப்பதால் யங்கா இருக்கேன்’ என்றார். சீக்கிரம் அங்கிளா ஆகிவிடப்போகிறீர்கள், கல்யாணம் செய்து கொள்ளுங்கள்” என்றார்.

நடிகர் சத்யாராஜ், “நானும் ஜெய்யும் இன்னொரு பெரிய வெற்றிக்காகக் காத்திருக்கிறோம். ராஜா ராணி வந்து 13 வருடங்கள் ஆகிவிட்டது. பார்ட்டி படம் இன்னும் வரவில்லை, மதகதராஜா போல் அந்தப்படம் வந்தால் கண்டிப்பாக வெற்றி பெறும். இந்தப் படத்தில் அஜித் விஜய்யுடன் ஜோடியாக நடித்த கீர்த்தனா எனக்கு ஜோடி. நாமளும் இன்னும் இளைஞர் தான். தயாரிப்பாளர் அப்பாவி போல் இருந்தாலும், ரொம்பவும் விவரமானவர். பிரதாப் இத்தனை நடிகர்களை வைத்து, வெகு அழகாக வெகு சீக்கிரமாக திட்டமிட்டுப் படத்தை எடுத்துள்ளார் வாழ்த்துக்கள்” என்றார்.

நடிகர் ஜெய், “இயக்குநர் கதை சொல்ல வந்த போது, சத்யராஜ் சார், யோகிபாபு டார்லிங் எல்லாம் ஓகே சொல்லிவிட்டார்கள் என்றவுடனே நானும் ஒகே சொல்லிவிட்டேன். ஷூட்டிங்கில் பட்டினியாக நடித்தது கஷ்டமாகத் தெரியவில்லை. பட ஷூட்டிங்கில் சத்யராஜ் சார், யோகிபாபு என எல்லோரும் வயிறு வலிக்க வலிக்கச் சிரிக்க வைத்து விடுவார்கள். அது தான் கஷ்டமாக இருக்கும். இயக்குநர் பக்காவாகத் திட்டமிட்டு எடுத்தார், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பெரிய ஆர்டிஸ்ட் இருப்பார்கள். ஆனால் அதை மிக அழகாக எடுத்துள்ளார். இரத்தம் வெட்டுக்குத்து இல்லாமல், மனம் விட்டுச் சிரித்து மகிழும் படமாக இப்படம் இருக்கும்” என்றார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.