
தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான ‘காமெடி கிங்’ கவுண்டமணி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. சமகால அரசியலை நகைச்சுவையாகச் சொல்லியுள்ள இந்தத் திரைப்படத்தை சினி கிராஃப்ட் புரொடக்ஷன் நிறுவனம் மற்றும் குட்டி ஸ்டோரி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் எம்.ஈ. ரவி ராஜா மற்றும் கோவை லட்சுமி ராஜன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை ஃபைவ் ஸ்டார் செந்தில் வழங்குகிறார். வரும் 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்தத் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா வடபழனி கமலா தியேட்டரில் நடைபெற்றது.
பாடலாசிரியர் மோகன் ராஜன், ”சந்தோஷமான தருணம் இது. கடந்த ஆண்டில் வெற்றி பெற்ற ‘லப்பர்பந்து’, ‘டிமான்டி காலனி 2’ ஆகிய படங்களில் பாடல் எழுதுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்த ஆண்டு நகைச்சுவை உலகின் சூப்பர் ஸ்டார், காமெடி கிங் கவுண்டமணி நடிக்கும் ‘ஒத்த ஒட்டு முத்தையா‘ எனும் இந்தத் திரைப்படத்தில் இரண்டு பாடல்கள் எழுதி இருக்கிறேன். இந்த வாய்ப்பிற்காக இசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கும், இயக்குநர் ராஜகோபாலுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
படத்தின் இணை தயாரிப்பாளர் கோவை லட்சுமி, ”இது என்னுடைய முதல் மேடை. ஒரே ஒரு விஷயத்தை மட்டும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சூரிய உதயத்தில் கூட ஒரு நிமிடம் காலதாமதம் உண்டு. ஆனால் எங்கள் அண்ணன் கவுண்டமணி படப்பிடிப்புத் தளத்திற்கு ஒரு நிமிடம் கூட தாமதமாக வர மாட்டார். சரியான தருணத்தில் வந்து விடுவார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
நடிகர் ரவி மரியா, ”ஆறு வருடங்களுக்கு முன் கவுண்டமணியுடன் இணைந்து நடிப்பது போல் கனவு கண்டேன். அந்தக் கனவு பலித்து விட்டது. படப்பிடிப்புத் தளத்தில் அவர் எங்களுக்கு மரியாதை கொடுத்து பேசியது வியப்பை அளித்தது. படப்பிடிப்புத் தளத்தில் அவருடன் இணைந்து நடிக்கும் போது தவறு ஏதும் நடந்து விடக்கூடாது என்பதற்காகக் காட்சிக்கு முன்னர் ஒத்திகை பார்ப்பேன். அந்த ஒத்திகை தருணத்தில் கூட அவர் தனக்கான வசனங்களை எனக்காக பேசுவார். ஒரு கலைஞரின் வளர்ச்சியில் அவருக்கு இருந்த அக்கறை அப்போது தெரிந்தது.
இந்தத் தருணத்தில் இயக்குநர் கே. பாக்யராஜ் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். அவர் இல்லை என்றால் கவுண்டமணி இல்லை. அவர் தான் கவுண்டமணியை பாரதிராஜாவிடம் அறிமுகப்படுத்தினார். இயக்குநர் பி வாசுவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய இயக்கத்தில் அண்மையில் ‘சந்திரமுகி 2‘ திரைப்படத்தில் நடித்தேன். படப்பிடிப்பு தளத்தில் மிகவும் எளிமையாக அனைவரிடத்திலும் பழகுவார். பி.வாசுவின் இயக்கத்தில் வெளியான ‘சின்னத்தம்பி’, ‘நடிகன்’, ‘வால்டர் வெற்றிவேல்’, ‘மலபார் போலீஸ்’ போன்ற படங்களில் கவுண்டமணியின் நடிப்பும், வசனமும் உயரத்தைத் தொட்டிருக்கும். கவுண்டமணியை அறிமுகப்படுத்தியவரும், கவுண்டமணியை உயரத்திற்கு அழைத்துச் சென்றவரும் ஒரே மேடையில் ஒன்றாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இயக்குநர் சாய் ராஜகோபால் நன்றாகத் திட்டமிட்டு, படத்தைத் திட்டமிட்ட நேரத்தில் நிறைவு செய்து கொடுத்திருக்கிறார். இந்த ‘ஒத்த ஓட்டு முத்தையா’ தமிழ்நாட்டில் உள்ள ஏழரை கோடி ஓட்டுகளையும் பெறும். இப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்” என்றார்.
நடிகர் கஜேஷ், ”என்னுடைய தாத்தா நாகேஷ் உடனும் கவுண்டமணி சார் நடித்திருக்கிறார். என் அப்பா ஆனந்த் பாபுவுடனும் கவுண்டமணி சார் நடித்திருக்கிறார். கவுண்டமணியுடன் நானும் நடித்திருக்கிறேன். தொடர்ந்து மூன்று தலைமுறையாக அவருக்கும் எங்களுக்குமான நட்பும், உறவும் நீடிக்கிறது. படப்பிடிப்பு தளமும், படப்பிடிப்பு நடைபெற்ற நாட்களும் முழு மகிழ்ச்சியுடன் இருந்தது” என்றார்.