Search

யு டர்ன் விமர்சனம்

uturn-movie-review

கன்னடத்தில், 2016 ஆம் ஆண்டு பவண் குமார் எழுதி இயக்கிய ‘யு டர்ன்’ எனும் படம் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது. 2017இல், மலையாளத்தில் ‘கேர்ஃபுல்’ என்ற பெயரில், இயக்குநர் V.K.பிரகாஷால் மறு உருவாக்கம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பவண் குமாரே தமிழிலும், தெலுங்கிலும் இப்படத்தை மறு உருவாக்கம் செய்துள்ளார்.

வேளச்சேரி மேம்பாலத்தில், சாலையின் நடுவே உள்ள கற்களை நகர்த்திவிட்டு, விதிகளுக்குப் புறம்பாக யு எடுக்கும் வாகன ஓட்டிகளைப் பேட்டி எடுக்க முயல்கிறார் பயிற்சி நிருபரான ரட்சனா. ஆனால், அப்படி யு டர்ன் எடுத்த அன்றே அவ்வனைவருமே தற்கொலை செய்து கொண்டு இறந்துவிடுகின்றனர். அது தற்கொலையா, கொலையா என்று, நாயக் எனும் காவல்துறை அதிகாரியின் உதவியோடு துப்புத் துலக்குகிறார் ரட்சனா. வேளச்சேரி மேம்பாலத்தில், யு டர்ன் எடுத்தவர்களின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்பதே படத்தின் கதை.

பார்வையாளர்களுக்கு, முழு நீள த்ரில்லர் அனுபவத்தைத் தந்துள்ளார் இயக்குநர் பவண் குமார்.

சமந்தாவைக் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் காட்சியில் தொடங்கும் விறுவிறுப்பு க்ளைமேக்ஸ் வரை தொடர்கிறது. நிருபர் ரட்சனாவாகச் சமந்தா கச்சிதமாய்ப் பொருந்தியுள்ளார். ஆனால், ஒரு கொலை வழக்கில் விசாரிக்கப்பட்டேன் என அவர் தனது காதலனிடம் பகிராதது ஏனென்று தெரியவில்லை. அது அப்படி ஒன்றும் பெரிய ரகசியமோ, அவமானமோ இல்லை. இதற்கே அவரது காதலன் ஆதித்யா, ஒரு க்ரைம் ரிப்போர்ட்டர் என்பது குறிபிடத்தக்கது. ஆதித்யாவாக நடித்திருக்கும் ராகுல் ரவீந்திரனுக்குப் பெரிதாக நடிக்கப் படத்தில் ஸ்கோப் இல்லை. நரேனும், பூமிகாவும் ஸ்வீட் சர்ப்ரைஸைத் தோன்றுகின்றனர்.

காவல்துறை அதிகாரி நாயக்காக ஆதி வசிகரிக்கிறார். சமந்தாவை விசாரித்து, அதில் இருந்து அவர் கண்டுபிடிக்கும் உண்மைகள், மிகப் பெரியதாய் உலுக்கும் வண்ணம் உள்ளது. ஆதியின் உயரதிகாரியாக வரும் ஆடுகளம் நரேனின் அனுபவம் அவரது நடிப்பில் பளிச்சிடுகிறது. த்ரில்லர் விரும்பிகளுக்கான செமயான தீனியைத் தன் எழுத்தில் கொண்டு வந்துள்ளார் பவண் குமார். 2013இல் வெளிவந்த லூசியாவிலேயே, தமிழில் எனக்குள் ஒருவன், தானொரு சிறந்த கதைசொல்லி என நிரூபித்தவர் என்பது நினைவு கூரத்தக்கது.

பூர்ண சந்திர தேஜஸ்வியின் பின்னணி இசை மிரட்டலாய் உள்ளது. நிக்கேத் பொம்மிரெட்டியின் ஒளிப்பதிவு, லைவ் ஆக்‌ஷன் த்ரில்லருக்கு ஏற்றவாறு சதா நகர்ந்து கொண்டே உள்ளது. படத்தின் க்ளைமேக்ஸ் த்ரில்லருக்கான முடிவாக இல்லாதது குறை. எனினும் படம் பார்வையாளர்களைத் தன்னுள் இழுத்து முழு நிறைவினை அளிக்கிறது.