Shadow

வெனம் – யார் இந்த சூப்பர் ஹீரோ?

Venom-in-Tamil

மார்வெல் காமிக்ஸில் அதி நாயகர்களுக்குப் பஞ்சம் கிடையாது. அப்படியொரு அதி நாயகனைத் திரையேற்றுகின்றனர் சோனி – மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் (Sony – Marvel Cinematic Universe). இது அவர்களது முதல் தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

அதி நாயகன் வெனம் பாத்திரத்தின் பூர்வாங்கத்தை அறிய 2007 இல் வெளிவந்த ஸ்பைடேர்மேன் 3 படத்தினை நினைவுகூருவது அவசியம். அப்படத்தின் தொடக்கத்தில், நியூயார்க் நகரின் மத்திய பூங்காவில் ஒரு விண்கல் விழும். அதிலிருந்து ஊர்ந்து வரும் ஒரு வேற்றுக்கிரக உயிரி ஸ்பைடர்மேனை ஆட்கொள்ளும். அந்த உயிரியை, “கூட்டுயிரி (Symbiont)” என அழைக்கலாம். அதவாது அவ்வுயிரிக்கு ஒரு உடல் தேவை. எந்த உடலோடு கூட்டுச் சேர்கிறதோ, அந்த உடலுக்கு அளப்பரிய ஆற்றல்களைத் தருவதோடு, அந்த உயிரின் மனதில் உறைந்துள்ள இருண்ட பகுதியை வெளிக்கொணர்ந்துவிடும். தன்னுள் வன்முறை மிகுவதை உணரும் ஸ்பைடர்மேன், அந்த வேற்றுக்கிரக உயிரியைத் தன்னுள் இருந்து கஷ்டப்பட்டுப் பிடுங்கி எறிவார். அது எடி ப்ரோக் எனும் நபர் மீது விழும். வெனம் படத்தின் பிரதான கதாபாத்திரம் அவர்தான். ஒரு கூட்டுயிரியோடு அவருக்கும் ஏற்படும் பிணைப்பால் அவர் வெனமாக மாறிக் கலக்கவுள்ளார்.

வெனம், ஒரு சூப்பர் ஹீரோ மட்டுமல்ல, ஆன்ட்டி ஹீரோவும் (anti-hero) கூட!

ஆனால், வெனம் பாத்திரத்தை வில்லன் என்றோ, எதிர் நாயகன் என்றோ, நாயகன் என்றோ எந்தவொரு வரையறைக்குள்ளும் கொண்டு வந்துவிட முடியாது. அந்தக் கூட்டுயிரி யாரைப் பிடிக்கிறதோ அவர்களின் மனோலயத்தைப் பொறுத்து வெனம் நல்லது செய்வதாகவோ, கெட்டது செய்வதாகவோ செயற்படும். இன்னதென்றோ, இப்படித்தானென்றோ தீர்மானிக்க முடியாத சுவாரசியத்தை வெனம் நமக்களிக்கும் என நம்பலாம். இந்தப் படத்திற்குக் கிடைக்கும் வரவேற்பினைப் பொறுத்து, அடுத்தடுத்த பாகங்களை சங்கிலித் தொடராக எடுப்பதைக் குறித்து ஆலோசிக்கவுள்ளது சோனி மார்வெல் யுனிவர்ஸ். அட்லாண்டா, நியூ யார்க், லாஸ் ஏஞ்சிலஸ் மற்றும் சான் பிரான்சிஸ்கோ ஆகிய ஊர்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.

எடி ப்ரோக்காக டாம் ஹார்டி நடிக்க, லட்விக் கோரான்சுன் இசையமைக்க, மாத்யூ லிபாடிக் ஒளிப்பதிவு செய்ய, ஆலன் பாம்கார்டன் படத்தைத் தொகுக்க, ரூபன் ஃப்ளைஷர் இயக்கியுள்ளார். அக்டோபர் 5 ஆம் தேதி தமிழிலும் இப்படம் வெளியாகவுள்ளது.