Shadow

‘அன்ப்ரேக்கபிள்’ ட்ரைலாஜி – ஒரு பார்வை

Unbreakable-Trilogy

இந்தப் படங்களின் இயக்குநரான மனோஜ் நைட் ஷ்யாமளன் நம்ம ஊர்க்காரர். பாண்டிச்சேரி – மாஹேவில் பிறந்து, அமெரிக்காவில் வளர்ந்தவர். 40களின் இறுதியில் இருக்கும் இவர், 25 வருஷத்துக்கும் மேலாக ஹாலிவுட்டில் இயங்கிவரும் மூத்த இயக்குநர். இவரோட ஃப்ளிம் கேரியர் நிறைய ஏற்ற இறக்கங்கள் நிறைந்தது. மிகச் சிறந்த படத்தைத் தருவார். அடுத்து செம மொக்கையான படத்தையும் தருவார். கொஞ்சமும் யூகிக்க இயலாதபடி இருக்கும்.

ஆனால் இவரது அடையாளம் சஸ்பென்ஸ் த்ரில்லர் வகை. 20 வருஷத்துக்கு முன்னாடி இவர் இயக்கிய ‘தி சிக்ஸ்த் சென்ஸ்’ படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதற்குப் பிறகு அவர் இயக்கிய அன்ப்ரேக்கபிள், சைன்ஸ், வில்லேஜ், தி விசிட் போன்றவை கூட தரமான படங்கள் தான். எல்லாப் படங்களிலும் ட்விஸ்ட் இருக்கும். அந்த ட்விஸ்ட் பெரிய காட்சிகளாகக் கூட இருக்காது. ஒரே ஒரு வசனம். அந்த வசனம் மொத்த படத்தின் போக்கையும் தலைக்கீழாக மாற்றிவிடும். பார்வையாளர்களை நன்றாக நம்ப வைத்து, கடைசியில் கவிழ்க்க வைத்த்து ஏமாற்றும் நல்ல படைப்பாளி. ‘தி சிக்ஸ்த் சென்ஸ்’இல், “I see dead people” எனும் வசனத்தைத் துணிந்து படத்தின் க்ளைமேக்ஸ்க்கு முன்பே வைத்திருப்பார். மறக்கமுடியுமா?

சூப்பர் ஹீரோக்கள் குறித்து இவர் இயக்கிய ட்ரையாலஜி தான் – அன்ப்ரேக்கபிள், ஸ்பிலிட், கிளாஸ் முதலிய படங்கள். முதல் படத்திற்கும் இரண்டாம் படத்திற்கும் மிகப்பெரிய இடைவெளி. ஆனாலும் அதற்கான லாஜிக்கைப் படத்தில் சொல்லியிருப்பார். பெரும்பாலும் மார்வெல், டிஸி பட சூப்பர் ஹீரோக்களின் சாகசங்களைப் பார்த்த நமக்கு இவரது படங்களில் காணப்படும் சூப்பர் ஹீரோக்கள் வித்தியாசமாத்தான் இருப்பர்.

நம் ஊரில் இதிகாசப் புராணங்கள் இருப்பது போல, அமெரிக்காவில் காமிக்ஸ் புத்தகக் கலாச்சாரம் மிகப் பெரியது. ஆதிகால மனிதர்களின் சித்திர எழுத்துகளின் வழியே அமைந்த தகவல்தொடர்பு இந்த வகை காமிக்ஸ் – சித்திரக்கதைகளின் மூலம் தொடர்வதாக அமெரிக்கர்களில் பலர் நம்புகின்றனர். நம் ஊர் போல காமிக்ஸ் கதைகள் அங்கு சிறுவர்களுக்கானது மட்டுமல்ல. அனைத்துத் தரப்பினரும் படிக்கும் மிகப்பெரிய ஊடகம்.

அன்ப்ரேக்கபிள் படத்தில், அத்தகைய காமிக்ஸ் கதைகளின் சூப்பர் ஹீரோக்கள், சூப்பர் வில்லன்கள் அனைவரும் நாம் வாழும் உலகில், நம்மிடையே உண்மையில் இருப்பதாக நம்புகிறார் எலைஜா (சாம்வெல் ஜாக்சன்). இவர் பிறக்கும் போதே மிகக் குறைவான எலும்பு அடர்த்தி நோயால் பாதிக்கப்பட்டவர். கண்ணாடியைப் போல எதாவது இடித்துவிட்டால் கூட மிக மோசமாக அவரது எலும்புகள் நொறுங்கிப்போகும். அவர் லிமிட்டட் எடிஷன் எனும் காமிக்ஸ் கடையை நடத்தி வருகிறார்.

ஒரு மோசமான ட்ரெயின் விபத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் இறந்து போக, ஒரே ஒருவர் டேவிட் டன் (ப்ரூஸ் வில்லிஸ்) எனும் சாதாரண புட்பால் ஸ்டேடிய செக்யூரிட்டி மட்டும் சிறு கீறல் கூட இல்லாமல் உயிர் பிழைக்கிறார். எலைஜா, டேவிட்டை ஒரு சூப்பர் ஹீரோ என நம்புகிறார். ஆனால் ஆரம்பத்தில் டேவிட் அதனை ஏற்கவில்லை. போகப்போக தனது சூப்பர் பவரை உணரத் தொடங்கி, ஒரு விஜிலான்டியாக மாற ஆரம்பிக்கிறார். கடைசி க்ளைமாக்ஸில் ஒரு ட்விஸ்டுடன் படம் முடிகிறது.

ஸ்ப்லிட் படத்தின் நாயகன் ஜேம்ஸ் மெக்காவி. நம்ம ஊர் அந்நியன் போல டிஸ்-அசோஷியேடிவ் ஐடண்டிட்டி டிஸ்சார்டர் (DID) உள்ளவர். அந்நியன் விக்ரமுக்குள் மூன்று கேரக்டர் என்றால், ஜேம்ஸ் மெக்காவிக்குள் 24 கேரக்டர்கள். அதாவது ஒரு மனித உடலுக்கும் 24 பேர், அந்த 24 பேருக்கும் வேறு வேறு குணங்கள், பழக்கவழக்கங்கள். மெக்காவி ஒரு ராட்சச நடிகன். பின்னியிருப்பார். கேரக்டர் ட்ரேன்சிஷன் செம்மையாக இருக்கும். 24வது கேரக்டர் பேரு ‘தி பீஸ்ட்’. அந்நியன் படத்தில் வருவது போலவே உழைக்காமல், கஷ்டப்படாமல் சொகுசாக இருக்கும் பெண்களைக் கடத்திக் கொன்று தின்னும் கொடூரன். இந்தப் படத்திலும் கடைசியில் ஒரு ட்விஸ்ட் இருக்கும்.

கிளாஸ் படம் இந்த இரண்டு படங்களின் தொடர்ச்சி. இந்தப் படத்தில், எலைஜா, சக சூப்பர் ஹீரோக்களான டேவிட் டன் மற்றும் தி பீஸ்ட் இருவரையும் இணைத்து இந்த உலகத்தில் சூப்பர் ஹீரோக்கள் இருக்கிறார்கள் என மக்களுக்குக் காண்பிக்க நினைக்கிறான். அதனை செய்யும் முயற்சியில் நிகழும் சம்பவங்களின் தொகுப்பே இந்தப் படத்தின் கதை. இதிலும் க்ளைமாக்ஸில் மூன்று ட்விஸ்ட்கள் இருக்கும்.

சூப்பர் ஹீரோக்கள் பற்றிய நமது பொதுபுத்திக் கருத்தினை மாற்றியமைக்கும் படங்கள் இவை. மாய யதார்த்தவாத திரைப்படங்கள். மனிதனுடைய உளவியலை நன்றாக உள்வாங்கி அதனைச் சிறப்பாகப் பயன்படுத்தியிருப்பார் மனோஜ் ஷ்யாமளன். அதிக ஆக்ஷன் சீக்குவன்ஸ் இல்லாத, த்ரில்லர், ட்விஸ்ட் உள்ள படங்களை விரும்புபவர்கள் நிச்சயம் பார்க்கலாம்.

– ஜானகிராமன் நா