Shadow

நீயா 2 விமர்சனம்

neeya-2-movie-review

கண்ணபிரான் நடனம் ஆடி காலாலே வீழ்த்திய நாகம் காளிங்கன். அந்த நாகம் மீண்டும் கண்ணனிடம் வரம் கேட்க, கண்ணபிரான் பகலில் மனித உருவாகவும் இரவில் பாம்பாகவும் திரிய வரம் கொடுக்கிறார். அப்படி இரு பொழுதுகளில் வெவ்வேறு உருவங்களோடு அலையும் அந்த நாகத்திற்குப் பெயர் இச்சாதாரி நாகம்.

அப்படியான இச்சாதாரி நாகம் தான் ராய் லட்சுமி. அவர் அப்படி ஆனதிற்கு ஒரு நாகத்தின் சாபமே காரணம். சென்ற ஜென்மத்தில் ஜெய்யோடு ஏற்பட்ட காதலை இந்த ஜென்மத்தில் அடைய அவர் ஜெய்யைத் தேடுகிறார். ஜெய்யோ கேத்ரின் தெரசாவோடு இல்லற வாழ்க்கையில் இருக்கிறார். அதற்குப் பின் என்னனென்ன தரமான சம்பவங்கள் நடைபெறுகின்றன என்பது தான் நீயா2.

1979 இல் வெளியான கமல் ஸ்ரீபிரியா நடித்த நீயா படத்தின் ஆகப்பெரும் பலமே எமோஷன் தான். அது மிகச் சரியாக ஒர்க் அவுட் ஆகி இருக்கும். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உள்ள நியாயம் அழகாக சித்தரிக்கப்பட்டிருக்கும். கமல் மட்டும் பாம்பின் வாழ்நிலைக்கு எதிராக இருக்க மாட்டார் என்பதாகப் படத்தின் ஆரம்பத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும். அதனாலே கடைசியில் அவர் பாம்பிடம் இருந்து தப்பிப்பார். நீயா2-வில் உள்ள பெரிய பிரச்சனையே கதாபாத்திரங்களின் வார்ப்பில் இருக்கிற உட்டாலக்கடி குழப்பம் தான். ராய் லட்சுமி, ஜெய்யை அடைவதற்காகச் சொல்லும் காரணம் தான் படத்தின் வலிமையான பாயிண்ட். ஆனால் அதில் தான் பெரிய ஓட்டை. கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் கதையில் இணைத்தது போல திரைக்கதையிலும் காட்சி மொழியிலும் இணைக்காதது, நம்மைப் படத்தில் இருந்து மிகவும் அந்நியப்படுத்தி விடுகிறது. சிஜியின் சப்போர்ட்டும் பாம்பை வீரியமாக்காமல் காமெடியாக்கி விட்டது. ஒளிப்பதிவில் பெரிதாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. பின்னணி இசையும் பாடல்களும் துளி கூட கவனம் ஈர்க்காமல் போனது கூடுதல் சோகம்.

ஜெய் தன்னுடைய நடிப்பால், இந்தப் படத்தையும் காப்பாற்றவில்லை. படமும் அவரைக் காப்பாற்றவில்லை. சில இடங்களில் அவர் நடிப்பதைப் பார்க்கும் போது பாவமாக இருக்கிறது. அதே தான் ராய் லட்சுமிக்கும். வரலட்சுமி வரும் கொஞ்ச நேரம் சீறும் நேரமாக இருந்தாலும், படம் அதற்குள், ‘படுத்தே விட்டானய்யா’ என்ற ரேஞ்சிற்குப் போய்விடுகிறது. படம் பின்பாதியில் போராடுவதைப் போல, கேத்ரின் தெர்சாவும் நடிக்கப் போராடுகிறார். ம்ஹும்.

ஃபேண்டசியும் இல்லாமல், சரியான மசாலாவும் இல்லாமல், பக்கா எமோஷனலும் இல்லாமல் பொத்தாம் பொதுவாக எடுக்கப்பட்டுள்ள இந்த நீயா2 நம்மைச் சுற்றி வளைக்க முற்படாமல் விலகி ஓடுகிறது.

– ஜெகன் சேட்