Shadow

உண்ட – மலையாளப் பட விமர்சனம்

Unda-movie-review

எங்கள் வீட்டில் எப்பொழுதும் அரைகிலோ வேர்கடலை இருக்கும். என் மனைவி வேர்கடலையை வறுத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்திருப்பார். எனக்கு அவ்வப்பொழுது அதுதான் நொறுக்குத்தீனி. இப்பொழுது கொரோனாவால் லாக்-டவுன்க்கு ஆளான பிறகு வீட்டிலேயே இருப்பதால் வறுத்த வேர்கடலையை தினமும் ஒரு பிடி சாப்பிட்டு வந்தேன். திடீரென, வேர்கடலை தீர்ந்து போனது. எங்கள் ஏரியாவில் நான்கு நாட்களாக பல கடைகளில் கேட்டும் வேர்கடலை மட்டும் கிடைக்கவே இல்லை. இப்பொழுது சட்னி அரைக்கக்கூட வேர்கடலை கிடைக்கவில்லை. இது போல் தான் பொருள் இருக்கும் போது அதன் அருமை தெரியாது. குறைவாக இருக்கும் போது பார்த்துப் பார்த்துப் பயன்படுத்துவோம். குறைவாக இருக்கிறது என்பதே ஒரு வித பதற்றத்தை உண்டாக்கிவிடும். இது போன்ற இக்கட்டான தருணங்களில் குடும்பத்தில் ஒரு சாதாரணப் பொருள் இல்லையென்றாலே நாம் டென்ஷன் ஆகிவிடுகிறோம். ஒரு பொது காரியத்துக்காக வீட்டையும் ஊரையும் பிரிந்து எங்கோ மொழி தெரியாத தொலை தேசத்தில், எப்பொழுது வேண்டுமானாலும் உயிருக்கு ஆபத்து நேரலாம் என்ற நிலையில் மனித மனம் எப்படி இயங்கும்? அந்த அசாதாரணச் சூழலை எப்படி எதிர்கொண்டு ஒரு அணி வெற்றி பெறுகிறது என்பதை பற்றியது தான் இந்தத் திரைப்படம்.

தமிழிலுள்ள ‘உருண்டை’ எனும் சொல் தான் மலையாளத்தில் “உண்ட” என்று உபயோகிக்கப்படுகிறது. தோட்டாவினுடைய தோற்றத்தின் காரணமாக, அதையும் ‘உண்ட’ என்றே மலையாளத்தில் அழைக்கின்றனர். ஆக, படத்தின் தலைப்பு தோட்டாவைக் குறிக்கின்றது. இது ஒரு இருண்மை – நகைச்சுவை சார்ந்த அரசியல் நையாண்டித் (political satire) திரைப்படம் எனலாம். மம்முக்கா நடித்த படம். நம் ஊர் சூப்பர் ஸ்டார்கள் எல்லாம் இது போன்ற கதையை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள். இந்தப் படத்தின் கதாசிரியர் செய்தித்தாளில் வந்த ஒரு செய்தியைப் படித்திருக்கிறார். கேரளாவில் இருந்து வட நாட்டிற்கு தேர்தல் ட்யூட்டிக்குச் சென்ற போலீஸ்காரர்களுக்குப் போதுமான ஆயுதங்கள், துப்பாக்கிகள் போன்றவை இல்லை என்பது குறித்த செய்தி. அதனை அப்படியே டெவலப் செய்து, ‘உண்ட’ எனும் திரைப்படமாக கொடுத்திருக்கிறார். மளையாளிகளின் ஸ்பெஷல் திறமையே அது தான். பேனை பெருமாளாக்கும் சாமர்த்தியம். செய்தித்தாள்களில் நாம் பார்க்கும் சாதாரண ஒரு வரிச் செய்தியைக் கூட மனசில் ஆணி அடிப்பது போல தரமான படமாகத் தரும் திறமை.

சத்தீஸ்கர் பகுதியில் மாவோயிஸ்ட் நிரம்பிய ஒரு உள்காட்டின் கிராமங்களில் தேர்தலை நடத்த ஒரு கேரள போலீஸ் டீம் செல்கிறது. அங்கு மம்முட்டி ஒரு சப்-இன்ஸ்பெக்டர். அவர் தலைமையிலான ஒன்பது போலீஸ் மட்டும் ஒரு கிராமத்தில் தேர்தலை நடத்த அங்கேயே தங்க நேருகிறது. அங்கு அவர்களுடன் உதவிக்கு வரும் உள்ளுர் கமாண்டோ இவர்களுடைய விளையாட்டுத்தனத்தை பார்த்து, அது மாவோயிஸ்ட் நிறைந்திருக்கும் பகுதி எனவும் எத்தனையோ பேரை ஈவிரக்கம் இல்லாமல் கொன்றிருக்கிறார்கள் என்றும் படம் போட்டுக்காட்டி பீதியைக் கிளப்புகிறார்.

அன்றிரவு மாவோயிஸ்ட் என எண்ணி கையிலிருக்கும் துப்பாக்கி குண்டுகளை சகட்டுமேனிக்குச் சுட்டுத் தள்ளி மம்முட்டி அணியினர் வீணாக்குகின்றனர். அடுத்த நாள் அவர்களிடம் மீதமிருப்பது மொத்தம் எட்டுத் தோட்டாக்கள் மட்டுமே என்பது தெரிந்து அவர்களுக்கு பயம் தொற்றிக்கொள்கிறது. இடையில் இவர்களின் சங்கடத்தைக் கேரளாவில் இருக்கும் நண்பர்கள் மூலம் மீடியாவில் தெரிவிக்க கேரள அரசு கூடுதல் தோட்டாக்களுடன் இன்னும் இரண்டு பேரை அங்கு அனுப்பி வைக்கிறது. ஆனால் தோட்டாக்களை எடுத்து வந்தவர்கள் வழியில் அந்தத் தோட்டாக்கள் அடங்கிய பெட்டியைத் தொலைத்துவிடுகின்றனர். கையில் போதுமான ஆயுதம் இல்லை. எப்பொழுது வேண்டுமானாலும் தீவிரவாதிகளால் தாக்கப்படலாம் என்ற அச்சம் போலீஸ்காரர்களிடையே ஒரு வித விரக்தியையும், அவர்களுக்குள் ஈகோ சண்டைகளையும் ஏற்படுத்துகிறது. இடையில் கிராமத்தில் இருந்து வந்த டிராக்டர் ஒன்று தீவிரவாதிகள் வைத்த கன்னிவெடியில் சிக்கி அவர்கள் கண் முன்னே வெடித்துச் சிதறும் போது இன்னும் பயம் தொற்றிக்கொள்கிறது.

தேர்தல் நாள். இவர்கள் பூத்துக்குச் சென்றால் அங்கு ஏற்கனவே ஒரு குண்டர் படை பூத்தைக் கைப்பற்றி அராஜகம் செய்கிறது. மம்முட்டி உள்ளே போய் ரெண்டு அடி அடித்து அனைவரையும் துரத்தி மக்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்கிறார். கொஞ்ச நேரத்தில் குண்டர் படை இன்னும் ஏராளமான ஆட்களைக் கூட்டிவந்து போலீஸைத் தாக்க வருகிறார்கள். வெறும் எட்டுக் குண்டை வைத்துக் கொண்டு எப்படிச் சமாளித்து தேர்தலை நடத்தினார்கள் என்பதே க்ளைமாக்ஸ்.

நாம் சாதாரணமாகக் கடந்து செல்லும் தேர்தல் இந்தியாவில் பல பாகங்களில் எவ்வளவு சவாலாக இருக்கிறது. எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் போலீஸ், பாரா மிலிட்டரி, இதில் எவ்வளவு பெரிய ரிஸ்க் எடுக்கிறார்கள், அரசாங்கத்தின் மெத்தனம் போன்ற அனைத்தும் போகிற போக்கில் நம்மால் உணரமுடியும். உண்மையில் எளிய மக்களின் பெயரில், அவர்களை முன்வைத்து அரசாங்கமும், சில தனிப்பட்ட குழுக்களும் செய்யும் அதிகாரச் சண்டையில் அவ்வெளிய மக்களின் வாழ்வு எந்த அளவுக்கு பாதிப்புக்கு உள்ளாகிறது என்றும் உணர முடிகிறது. அந்த அணியில் ஒரு சக போலீஸ்காரர் ஒருவர் பழங்குடியின வகுப்பிலிருந்து வந்திருப்பார். அவரை மற்றவர்கள் தொடர்ந்து கேலி செய்து அவரையே மாவோயிஸ்டாகச் சந்தேகிப்பார் மற்றொருவர். இது நமது பொதுப்புத்தி மனநிலையைக் காட்டுகிறது.

படத்தின் தலைப்பு தோட்டா. யாரோ சுட, தோட்டா மட்டும் வெடித்து வெளியேறுகிறது. தோட்டா வெறும் கருவி மட்டுமே. அது போல போலீஸ், மக்கள் ஆகியோர் அதிகார வர்க்கத்தின் தோட்டாக்களாகவே பயன்படுத்தப்படுகின்றனர்.

இந்தப் படத்தின் கடைசிக் காட்சியில், யாருமற்ற ஓர் இடத்தில் தொலைந்து போன அந்தத் தோட்டக்கள் அடங்கிய பெட்டியில் ஒரு குரங்கு குதித்து விளையாடிக் கொண்டிருக்கும். நமது தேசமும் அப்படித்தான் இருக்கிறது.

மூன்று முறை தேசிய விருது வாங்கிய மம்முட்டியின் நடிப்பைப் பற்றி சொல்வதற்கு என்ன இருக்கு? முதல் ஒரு மணி நேரம் கொஞ்சம் போரடித்தது என்றாலும் கடைசி 40 நிமிடங்கள் பட்டையைக் கிளப்பியிருப்பார்கள். ஒரு நல்ல திரைப்படம், பொழுதுபோக்கை மீறி சமூகம் சார்ந்த ஒரு விஷயத்தை அழுத்தமாகப் பார்வையாளர்களுக்குக் கடத்தவேண்டும். அவ்வகையில் இது ஒரு நல்ல திரைப்படம்!

– ஜானகிராமன் நா