இன்ட்டரொகேஷன் அடிப்படையில் அமைந்த நல்ல க்ரைம் த்ரில்லர்.
நாலு வருஷத்துக்கு முன்னாடி வெளிவந்த The Invisible Guest எனும் ஸ்பானியப் படத்தின் தெலுங்குப் பதிப்பு. எல்லாப் பதில்களும் கேள்விக்கு உட்படுத்தப்படும் (All answers shall be questioned) என்பது தான் இந்தப் படத்தின் டேக் லைன். போன வருடத்தில் தெலுங்கில் வெளிவந்த மிகச் சிறந்த படம் என்ற விருதைப் பெற்ற திரைப்படம்.
சமீரா மிகப்பெரிய தொழிலதிபர். அவர் கோத்தகிரியில் ஒரு ரிசார்ட்டில் டிஎஸ்பி அஷோக் தன்னைக் கற்பழித்ததால் அவனைச் சுட்டுக் கொல்கிறாள்.
எல்லா எவிடென்ஸும் அஷோக் தவறானவன் என்றே கூறுகிறது. இதனால் போலீஸின் இமேஜ் மோசமாகப் பாதிக்கப்படுகிறது. இந்த வழக்கில் அஷோக் குற்றவாளி அல்ல என நிரூபிப்பது போலீஸ் டிபார்ட்மென்டுக்கு அவசியமாகிறது. அதற்காக மிகத் திறமையான வக்கீல் ஒருவரை வழக்காட நியமிக்கிறது போலீஸ். அவர் சாட்சியங்களைத் தனக்குத் தக்கவாறு சோடித்தாவது தனது வழக்கை வெல்லக்கூடியவர். மேலும், இன்ஸ்பெக்டர் அர்ஜூன் இந்த கேஸில் ஈடுபடுத்தப்படுகிறார். அர்ஜூன் பணத்துக்காக எதையும் செய்யக்கூடியவர்.
சமீரா, இந்த வழக்கில் தனக்குச் சாதகமாக தீர்ப்பு வர அர்ஜூனுக்குப் பணம் கொடுத்து அவரது உதவியை நாடுகிறார். அர்ஜூன் சமீராவுக்கு உதவுவதற்காக, இந்த வழக்கு தொடர்பான பல சாட்சியங்களை, டேட்டாக்களுடன் சமீராவின் வீட்டுக்கு வந்து அவரோடு இந்த வழக்கு தொடர்பாக உரையாடி எப்படி நீதிமன்றத்தில் தப்பிக்கலாம் என ஆலோசனை கொடுக்கப் பேசுகிறான். அந்த உரையாடலில், சமீராவும் அஷோக்கும் ஒரு வருடம் முன்பு கோத்தகிரிக்கு அதே ரிசார்ட்டுக்கு சென்றதைப் பற்றியும் கேட்கிறார். கதை கொஞ்சம் வேகமெடுக்கிறது. இவர்களின் உரையாடலுக்கு இடையே விக்ரம் விசாரிக்கும் இன்னொரு வழக்கான கோத்தகிரியில ஒரு வருடத்துக்கு முன் ரிடையர்ட் ப்ரொஃபசர் காணாமல் போன கேஸ் பற்றிய தொலைபேசி அழைப்பு வருகிறது. விவாதம் அதைப் பற்றியும் திரும்புகிறது.
இவர்கள் இருவருடைய இன்ட்டரொகேஷன் அதனைச் சார்ந்து விரியும் ஃப்ளாஷ்பேக் தான் மொத்தக் கதை. ஒரு வகையில் விருமாண்டி, ரோஷமான் டைப் திரைக்கதை. டெவில் இன் த டீடெயில் என்பார்கள். ஒரு விஷயத்தில் ஆழமாக செல்லச் செல்ல வலியும் அதிகமாகும். இந்தப் படத்தின் திரைக்கதையின் ஒவ்வொறு ஸ்டேஜிலும் படத்தைப் பார்க்கும் நமக்குள் ஜட்மென்ட் மாறிக் கொண்டே இருக்கும். யார் சரி, யார் தவறு என்பது கண்ணாம்பூச்சி காட்டும்.
எக்கச்சக்கமாகப் பேசிக்கொண்டே இருப்பதால் ஃபாலோ பண்ணுவது சில சமயங்களில் அயர்ச்சியாய் தான் இருந்தது. ஆனாலும், நிறைய ட்விஸ்ட் & டர்ன்ஸ் இருந்ததால் படம் போர் அடிக்கவிக்லை. க்ளைமாக்ஸ் ஆச்சரியமாகத் தான் இருந்தது.
கதைநாயகனாக சேஷா, நாயகி ரெஜினா. இதே படம் பட்லா எனும் பெயரில் ஹிந்தியில் வந்தது. அதில் அமிதாப்பும் டாப்ஸியும் நடித்திருப்பார்கள். அவர்களை கம்பேர் பண்ணா, சேஷா சற்று டொங்கலாகத் தான் தெரிவார். ரெஜினா நடிப்பில் டாப்ஸியை ஜெயித்து விடுகிறார்.
க்ரைம் திரில்லரில் விருப்பம் இருப்பவர்கள் தவற விடக்கூடாத படம்.
– ஜானகிராமன் நா