Shadow

வாத்துகள் – இயற்கையின் பெருங்கொடை

Ducks-2

நீரிலும், நிலத்திலும் வாழும் பறவை இனம் இந்த மல்லார்ட் வாத்துகள்.

பனிக்காலத்தில் உறைந்த குளங்களின் மேல் வழுக்கிக் கொண்டு நடந்து செல்வதும், கூட்டமாக நெருங்கி நின்று பனிக்காற்றிலிருந்து தற்காத்துக் கொள்வதும், சில பறவைகள் தெற்கு நோக்கிப் பறந்து போவதுமாய்க் கடும் குளிர், பனி, வெயில், மழையிலிருந்து இவர்களின் வாழ்க்கை முழுவதற்கும் அதன் இறக்கைகளே கவசங்களாக இருக்கிறது.

ஆறுகள், ஏரி, குளங்களென நீர்நிலைகள் தோறும் இவற்றைக் காண முடிகிறது. பல வண்ணங்களில் பெண் வாத்துகளைக் கவரும் வண்ணம் வசீகரமாக ஆண் வாத்துகள். அதற்கு நேர்மாறாகப் பெண் இனங்கள்.

ஜோடியாகவே சேர்ந்து திரியும் வாத்துக் கூட்டம் மழைக்கால முடிவில் ஆண் வாத்துகள் மட்டுமே தனியாகச் சுற்றிக் கொண்டிருக்க, பெண் வாத்துகள் ஒன்று அல்லது இரு வாரங்களுக்குத் தினம் ஒரு முட்டையிட்டு அடைகாத்து ஒரு மாதத்திற்குள் குஞ்சு பொரித்து விடுகிறது. கோடைக்காலத்தில் தன் குஞ்சுகளுடன் வளைய வரும் வாத்துகளைப் பார்க்கவே அழகு. தொடக்கத்தில் அதிகளவில் இருக்கும் குஞ்சுகளின் எண்ணிக்கை நாளடைவில் குறைந்து விடுகிறது. மஞ்சள் வண்ணத்தில் இருக்கும் குஞ்சுகள் தாயின் பின்னால் அணிவகுத்துத் துள்ளியோடி வருவதும் அவர்களைக் கண்காணித்துக் கொண்டே வேறு யாரும் நெருங்கிடாத வண்ணம் பாதுகாப்பாக அரவணைத்து அழைத்துச் செல்வதும், குஞ்சுகளுக்கு ஆபத்தென்றால் பதைபதைப்புடன் ஓடி வருவதும் மல்லார்ட் வாத்து இனங்களில் குழந்தைகளின் வளர்ப்பில் தாயின் பங்கைக் கண்ணெதிரே காண முடியும்.

பெண் வாத்துகள் கவனமாகவும் விழிப்புடனும் குஞ்சுகளைப் பாதுகாக்க, வருத்தப்படாத வாலிபர் சங்கத்து ஆண் வாத்துகள் சோம்பேறியாகக் கவலையின்றி திரிவதுமான காட்சிகளை நீர்நிலைகளில் காணலாம். குஞ்சுகளும் அம்மாவுடனே ஒட்டிக் கொண்டு திரிவதும் அம்மா இல்லாத நொடிப்பொழுதில் தண்ணீரில் ஓடும் அழகும், அம்மா செய்வதைப் போலவே தானும் செய்வது என்று இந்த மஞ்சள் நிற மல்லார்ட் வாத்துக் குஞ்சுகள் இன்னும் அழகு. தாவர உணவுவகைளை விரும்பி உண்ணும் இப்பறவைகள் நீருக்குள் தலைகீழாக உணவைத் தேடுவதும் இறகுகளைச் சுத்திகரித்துக் கொள்வதும் மாலை நேர இனிய காட்சிகள்.

நாங்கள் வழக்கமாகச் செல்லும் பூங்காவில் எட்டு மல்லார்ட் வாத்துக் குஞ்சுகள் அழகாக நீரில் தவழ்ந்து கொண்டிருந்தது. வழக்கமாக அம்மாவுடனே சுற்றும் இந்தப் பறவைகள் தனித்திருந்ததைக் கண்டு எங்களுக்கு ஆச்சரியம் கூடவே பருந்தினங்களுக்கு இரையாகி விடக் கூடாதே என்ற கவலையும். கடவுளே! குஞ்சுகள் பத்திரமாக இருக்க வேண்டுமே என்று வேண்டிக் கொண்டு வருத்தத்துடன் பூங்காவை விட்டு வெளியேறினோம்.

சில நாட்கள் கழித்துச் செல்கையில் அந்தக் கூட்டமே கண்ணில் தென்படவில்லை. என்ன ஆச்சோ குஞ்சுகளுக்கு? எங்கேயும் காணோமே? அன்றும் கவலையுடன் திரும்பினோம். சமீபத்தில் மீண்டும் அந்த எட்டு குஞ்சுகளைக் கண்டவுடன் தான் மனம் அமைதியானது. ஆனால் அம்மா வாத்துவை மட்டும் காணோம். குஞ்சுகள் கொஞ்சம் வளர்ந்து விட்டிருக்கிறது. எட்டும் சேர்ந்தே சுற்றுகிறது. உண்கிறது. ஓடுகிறது. அங்கிருக்கும் வேறு பெண் வாத்துகள் கூட இந்தக் குஞ்சுகளை கண்டு கொள்வதில்லை. அவர்கள் உலகம் அப்படித்தான் போல. இப்பொழுது புதிதாக ஆறு குஞ்சுகளுடன் வேறொரு தாய் வாத்து வலம் வருகிறது. ஆரம்பத்தில் குஞ்சுகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் நாட்கள் செல்லச் செல்ல பறவைகளுக்கு இரையாகாமல் மீந்துவது குறைவு. அதனால் தானோ பறவைகள் அதிகளவில் முட்டையிடுகிறது?

Ducks-1

இதே போல் தான் வுட் டக் (Wood Duck) வாத்து இனமும். கண்கள் பெரிதாக ஆணினம் பல வண்ணங்களில் பெண்ணினத்தைக் கவரும் வகையில் இருக்கிறது. அதுவும் பல முட்டைகள் இட்டு குஞ்சுகள் பொரித்து ஊர்வலமாக தாயுடன் வலம் வரும் அழகே அழகு. தாய் வாத்துடன் பதினாறு குஞ்சுகள் வலம் வந்ததை அனைவரும் வியப்புடன் பார்த்தோம். விரைவிலேயே இரண்டு குஞ்சுகளுடன் மட்டும் காணும் பொழுது வருத்தமாக இருந்தது.

ஆனால் கனடா கூஸ்/கீஸ் வாத்து இனங்களில் ஆண், பெண் வாத்துகள் ஜோடியாக குஞ்சுகளைப் பராமரிக்கிறது. தாய் வாத்து முன்னே வழிநடத்திச் செல்ல குஞ்சுகள் தொடர, கடைசியில் தந்தை வாத்து சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே செல்லும். குஞ்சுகளின் அருகில் செல்லும் எவரையும் துரத்தி அடிக்கும். கடிக்க ஓடி வருவது போல் பாவனையும் செய்யும். இதையும் மீறி சென்றால் வன்முறையில் இறங்கி விடுவதால் பயந்து கொண்டு மனிதர்கள் செல்வதில்லை. பிறந்த சில நாட்கள் சிறிய உருவில் இருக்கும் இக்குஞ்சுகள் விரைவில் பெரிதாகி சிறகுகள் வளர்ந்தவுடன் பறக்க எத்தனிக்கும் வரை தாய் தந்தை வாத்துகளுடன் தான் நடமாடிக் கொண்டிருக்கும். கனடா கீஸ்/கூஸ் ஜோடியாக ஒரே இடத்தில் கூடு கட்டிக் குஞ்சு பொரிக்கிறது. வளர்ந்ததும் குஞ்சுகளும் அந்த இடத்திற்கு அருகிலேயே கூடு கட்டி வாழ்கிறது.

புற்களையும் நீரில் தேங்கி இருக்கும் பாசிகளையும் மட்டுமே உண்டு நாட்கணக்கில் கண்டம் விட்டு கண்டம் பறந்து செல்லும் இந்தப் பறவைகள் இறைவனின் படைப்பில் இயற்கையின் பெருங்கொடையன்றோ?

மழைக்காலத்தில் டூலிப் மலர்கள் மட்டுமா அழகு? இந்த வாத்துக் கூட்டங்களும் தான்!

– லதா