Shadow

விக்ரம் வேதா – க்ளைமேக்ஸ் புதிர் முடிச்சவிழ்த்தல்

Vikram Vedha Climax

சமீபத்தில் நிகழ்ந்த ஒரு கலந்துரையாடலில், விக்ரம் வேதா படத்தின் க்ளைமேக்ஸ் பற்றி இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி இருவரும் பகிர்ந்து கொண்டது:

“மூன்று ஆப்ஷன்களுக்கு வாய்ப்புள்ளன.

1. ஒன்று, வேதா விக்ரமைச் சுடுவது.
2. இரண்டு, விக்ரம் வேதாவைச் சுடுவது.
3. மூன்றாவது, இருவரும் தங்கள் வழியில் பிரிந்து சென்றுவிடுவார்கள்.

அவர்கள் என்னாவார்கள் என்பதை நாங்க சொல்ல விரும்பவில்லை. அதை ஆடியன்ஸின் பாயின்ட் ஆஃப் வியூவிற்கு விட்டுவிட்டோம்” என்றனர்.

இனி, இதுதமிழின் புரிதல் என்னவாக இருந்தது என்பதை விரிவாகப் பார்ப்போம்.

வேதாளம் விக்கிரமாதித்யன் கழுத்தைச் சுற்றி கைகளைப் போட்டு, தோளில் தொங்கியவாறு கதைகள் சொல்லும். கதையின் முடிவில் ஒரு கேள்வி கேட்கும். விக்கிரமாதித்யன் புதிருக்குப் பதில் சரியாகச் சொல்லவில்லை எனில், விக்கிரமாதித்யன் தலை வெடித்துவிடும் என சாபமும் கொடுக்கும்.

தன்னிகரற்ற மன்னரான விக்கிரமாதித்யன் வேதாளத்தின் புதிர்கள் அனைத்துக்கும் பதில் சொல்லி விடுவார். வேதாளம் விக்கிரமாதித்யனுக்கு அடங்கி அவருக்காகச் சேவகம் செய்யும் – இது ஒரிஜினல் கதை.

இப்படத்திலும் வேதாவின் புதிர்களை எல்லாம் விக்ரம் அவிழ்த்து, வேதாவிற்கே அவனது தம்பியைக் கொன்றது யாரெனப் புதிரை அவிழ்க்க உதவுவார் விக்ரம். இந்தப் படத்திலும், விக்ரம் தான் வெல்கிறார். வேதாளம் விக்ரமாதித்யனின் ஆளுமைக்கு அடக்கம். ஆக, அந்தக் கதையின் உருவகப்படி பார்த்தால் வெல்வது விக்ரமாகவே இருக்க வேண்டும்.

மேலும், க்ளைமேக்ஸ் காட்சிக்கு முன், மாதவனின் உயிரைக் காப்பாற்ற தன் கையில் தோட்டாவை வாங்கிக் கொள்வார் விஜய் சேதுபதி. மாதவனைக் கொல்வது அவர் நோக்கமாக இருந்தால் காப்பாற்றியே இருக்கமாட்டார். தம்பி, நண்பர்கள் என அனைத்தையும் இழந்து நிற்கும் வேதாவின் மனதில் ஒரே ஒரு கேள்விதான். ‘தன் தம்பியை ஏன் கொன்றார்கள்?’ அதைத் தவிர்த்து வாழ்வின் மீது பெரிய பிடிப்பில்லாத மனநிலையில் இருப்பார் என்பதை க்ளைமேக்ஸில் அவர் பேசும் வசனம் கொண்டு யூகிக்கலாம்.

“பார்க்கிற வேலைக்கும் நேர்மையா இல்லாமல், கூடப் பழகுற மனுஷங்களுக்கு உண்மையாக இல்லை. காசு பணம்னு அலைஞ்சு செத்துட்டாங்க. நான் மட்டுமென்ன கிழிச்சேன்?” என இறந்து கிடக்கும் எஸ்.பி. மற்றும் ரவியைப் பார்த்துக் குறைப்பட்டுக் கொள்வதே அந்த வசனம். வேதாவை வண்டியிலிருந்து கீழே தள்ளும் ஹாஃப்-பாயில், ‘இதெல்லாம் போதும்’ எனச் சொல்லி தன் உயிரை நண்பனுக்காகத் தியாகம் பண்ணுவார். அந்தக் காட்சியிலேயே வேதாவின் மனமாற்றத்தைக் காட்டியிருப்பார்கள். தம்பி இறக்கக் காரணமாக இருந்த ரவியை வேதாவும், நண்பன் இறக்கக் காரணமாக இருந்த எஸ்.பி.யை விக்ரமும் கொன்று விடுகின்றனர். படத்தில் போடப்படும் முதல் புதிருக்கான விடை அதுதான். ஆயுதங்களைத் தண்டிப்பதை விட காரணகர்த்தாவைத் தண்டிப்பதே தர்மம். கதை, ரவி மற்றும் எஸ்.பி. மரணத்திலேயே முடிந்து விடுகிறது. இந்தியத் தொன்மங்கள் முதல் இன்றைய சினிமா வரை தர்மத்தை வெற்றி பெறச் செய்வதையே குறிக்கோளாய்க் கொண்டுள்ளன.

‘சந்திராவை வேதா கொன்னால் புள்ளி நடைப்பிணம் ஆகிடுவான்; கொல்லவில்லைன்னா சேட்டா எதிரியாகிடுவான்.’ தொழிலா, சென்ட்டிமென்ட்டா என்னும் இரண்டாவது புதிருக்கு, சென்ட்டிமென்ட் என பதில் சொல்வார் விக்ரம். வேதாவும் ஆமோதிப்பார். கடைசியில் விக்ரம் போடும் கேள்விக்கான பதிலும் அதேதான். ‘உயிரைக் காப்பாற்றித் தோளோடு தோள் நின்ற வேதாவை விடுவதா? அல்லது 16 கொலை பண்ண கிரிமினல் என்பதால் சுடவா?’ சென்ட்டிமென்ட்டா தொழிலா என்பதுதானே அந்தக் கேள்வியின் உட்பொருள். சென்ட்டிமென்ட் தான் பதில் எனும் பட்சத்தில், விக்ரமும் வேதாவைச் சுட மாட்டார். விஜய் சேதுபதி கொல்லப்பட வேண்டியவர் என்ற மாதவனின் தீவிரமும் கொஞ்சம் கொஞ்சமாகக் க்ளைமேக்ஸை நோக்கி வரும் பொழுது மாதவனுக்குக் குறைந்து விடும். அதற்காகக் கஞ்சி போட்டது போல் விறைப்பாக இருக்கும் விக்ரம், புஷ்கர் – காயத்ரி சொன்னது போல் வேதாவைப் ‘போயிட்டு வா’ என வழியனுப்பியிருக்க வாய்ப்பில்லை. 😉

விஜய் சேதுபதியைச் சரணடையுமாறு மாதவன் கேட்டிருப்பார். விஜய் சேதுபதியும் ஒத்துக் கொண்டிருப்பார். அப்படி மறுக்கும் பட்சத்தில் முட்டிக்குக் கீழ் தான் சுட்டிருப்பார் மாதவன். ஏனெனில், துப்பாக்கியை ஏனோதானோ என்று அமெச்சூராகத்தான் விஜய் சேதுபதி கடைசி வரை பயன்படுத்துவார். மேலும் விஜய் சேதுபதியின் வலது கையில் தான் குண்டு பாய்ந்திருக்கும் (மாதவனுக்கும் வலது கை தோள் மூட்டில் குண்டு பாய்ந்திருக்கும். அவர் விஜய் சேதுபதி மாதிரி துடிக்காமல் சுதாரித்து எஸ்.பி.யை வீழ்த்துவார்). கொலைகளில் அதிக ஸ்கோர் வைத்திருப்பவர் மாதவனே! அத்தனையும் துப்பாக்கியைப் பயன்படுத்தி மட்டுமே என்கவுன்ட்டர் செய்தது. எஸ்.பி.யைக் கொன்றதோடு 19. 17 என ஸ்கோரினை உயர்த்தும் வேதா, ரவியைக் கூட கழுத்தை அறுத்துத்தான் கொன்றிருப்பார். நேருக்கு நேரான துப்பாக்கிச் சண்டையில், விக்ரமை வேதா வெல்வதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. ஆக, பலப்பரீட்சை என ஒன்று இருவருக்குள்ளும் நடந்திருந்தால், விக்ரமின் கையே ஓங்கியிருக்கும். எஸ்.பி.யைக் கொன்று, தன் டீமிலுள்ள அத்தனைப் பேரையும் முட்டிக்குக் கீழ் சுட்ட வழக்கில் மாதவனுக்கு இருக்கும் ஒரு முக்கியமான எவிடென்ஸாகவும் விஜய் சேதுபதி பயன்படுவார். இதுவே, விக்ரம் வேதா க்ளைமேக்ஸ் பற்றிய இதுதமிழின் பாயின்ட் ஆஃப் வியூ.