தரமணி படத்திற்குத் திரைக்கதை எழுத இன்ஸ்பையரான இரண்டு விஷயங்களைப் பற்றி ராம் பகிர்ந்து கொள்கிறார்.
<< 1. ஜூனியர் விகடனில் வந்த ஒரு கட்டுரை. வெளிநாட்டில் கணவன் வாழ்கிறான்; இங்கே அவன் வீட்டில் ஒரு லேண்ட் லைன் ஃபோன் வாங்குகிறார்கள். செல்ஃபோன் பரவலான உபயோகத்திற்கு வந்திராத சமயம் அது. ஃபோன் பில் ஒரு லட்சத்தைத் தாண்டுகிறது. இவ்விஷயம் பிரச்சனை ஆகிறது. கால் லிஸ்ட் எடுத்துப் பார்க்கப்படுகிறது. ஒரு நம்பருக்கு அதிகமாக அழைப்புப் போய் வந்துள்ளது. “அவன் யாரெனத் தெரியாது. நன்றாகப் பேசினான். நானும் பேசினேன்” என்கிறாள் அம்மனைவி. >>
படத்தில் இதைத் தழுவி காட்சிகளை வைத்துள்ளார் ராம். இந்த ஒரு சம்பவத்தைக் கொண்டு பொதுமைப்படுத்துவதே அபத்தமான விஷயம். ராம் ஒரு படி மேலே போய் தன் வக்கிரத்தைக் காட்சிகளாக வைத்துள்ளார். எப்படியெனில், அந்நியோன்யமாக இருப்பதாகத் தொடக்கத்தில் இருந்து காட்டப்படுபவர்கள் வீனஸ் – பர்ணபாஸ் தம்பதி. ஓர் அநாமதேய அழைப்பால் வீனஸ் சபலப்பட்டு விடுகிறார்.
ராம் அதற்குத் தரும் விளக்கம், ‘நான் உறவுச் சிக்கலைக் காட்டியுள்ளேன்’ என்கிறார். சபலமும், உறவுச்சிக்கலும் ஒன்றா!? கணவன் அருகில் இல்லாததால் ஆறுதல் வார்த்தை எதிர்பார்த்து ஃபோனில் பேசிய பெண்ணை, கணவர் வாஞ்சையோடு அருகில் இருந்தும் முகம் தெரியா மனிதனை அழைக்கும் பெண்ணாக மாற்றியுள்ளார்.
அதாவது, சூழ்நிலை எதுவானாலும் பெண்கள் சதா சபலத்துடன் திரிகிறார்கள் என்பது ராமின் அசைக்க முடியாத நம்பிக்கை.
<< 2. இரவு ஷிஃப்ட்டில் பி.பி.ஓ.வில் வேலை செய்யும் கணவன்; பகலில் ஐ.டி.யில் வேலை செய்யும் மனைவி. கணவனை விட அதிகம் சம்பாதிக்கும் மனைவி அமெரிக்கா சென்று விடுகிறார். ‘வேலையை விட்டு விடும்படி என் மனைவியிடம் பேசுங்கள்’ என அந்தக் கணவன், ராமைத் தூது போகச் சொல்கிறார்.
‘ஒருவேளை அவர் அமெரிக்காவில் வேலையில் இருந்து நான் இந்தியாவில் இருந்திருந்தால் அப்படிக் கேட்பாரா? மேலும் என் உடை மாறிடுச்சு எனச் சொல்றார். இங்கே இப்படித்தான் அணிய முடியும். மேலும் எங்களுக்குக் கடன் உள்ளது. நான் வேலை பார்த்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கேன்’ என அமெரிக்காவில் பணி புரியும் பெண்ணிடமிருந்து ராம்க்குப் பதில் கிடைக்கிறது.
ராம்க்கு, மனைவியின் பதிலும் ஏற்புடையதாக உள்ளது; ‘அமெரிக்கப் போனதுமே அவ மாறிட்டா’ என்ற கணவனின் புலம்பலும் நியாயமாகப் படுகிறது. >>
படத்தில் இதைத் தழுவியும் காட்சிகளை வைத்துள்ளார் ராம். எப்படி? பணத் தேவைக்காகத் துணையையே மாற்றி விடுவாள் பெண். பெண்களை அமெரிக்கா அனுப்பினால் அவர்கள் மாறி விடுவார்கள் எனத் திண்ணமாக நம்பி, அந்தப் பிற்போக்குத்தனத்தை மக்கள் மனதில் பதியவும் வைக்கிறார். அந்தப் பிற்போக்குத்தனத்தைப் பெண்மையைக் கொண்டாடுவது என்றும் பெருமிதம் கொள்கிறார். உடை மாற்றத்தைக் கேரக்டர் மாற்றம் என்று அழுத்தமாகப் பதிகிறார் இயக்குநர் ராம்.
‘என் உடை; என் செளகரியம்; என் சுதந்திரம்’ என ஒரே ஒரு வசனம் கூட அஞ்சலி பேசுவதாக வரவில்லை. மாறாக, ‘இந்த மாதிரி உடை போட்டா என்னை இங்க யாரும் ரேப் பண்ணிட மாட்டாங்க; இங்க இது சகஜம். எல்லாம் இதுதான் அணியுறாங்க’ என்கிறார். படத்தில் ஒரே ஒரு பெண் கதாபாத்திரம் கூட தன்மானத்திற்காவோ, சுய கெளரவத்திற்காவோ வீறு கொள்ளவில்லை. அப்படிச் சீற்றம் கொள்ளும் அசிஸ்டென்ட் கமிஷ்ணரின் மனைவி தற்கொலை புரிந்து கொள்கிறார்; தனித்துவம் மிக்கவராய் அறிமுகமாகும் ஆண்ட்ரியா இரண்டாம் பாதியில் வக்கிர புத்திக்காரனுக்காகத் தற்கொலைக்கு முனைகிறார்.
இயக்குநர் அழகம்பெருமாளின் ஒரு வசனம் போதுமெனச் சப்பைக்கட்டு கட்டுபவர்களுக்கு ஒரு கேள்வி. ‘இந்தப் பெண்களே இப்படித்தான். குத்துங்க எசமான் குத்துங்க’ என்று இயக்குநர் ராமின் பார்வை படம் முழுவதும் விரவிக் கிடக்கிறது. படம் முழுவதும் கொலைகளாகப் புரியும் ஒருவன், ‘ஆமாம் நான் பண்ணது தப்பு. திருந்திட்டேன்’ என்று ஒரு வசனம் சொல்லிவிட்டால், அவன் ‘அமைதியின் தூதுவன்’ என்றோ ‘மனிதருள் மாணிக்கம்’ ஆகவோ மாறி விடுவானா? அதை ஆமோதிக்க பர்ணபாஸ் என்று ஒரு பாத்திரம் வந்து, “ஆமாடே, நீ தப்பெல்லாம் பண்ணலை. நல்லதுதான் பண்ணியிருக்க. பூமியில் கொஞ்சம் பாப்புலேஷனைக் குறைச்சிருக்க. இனி நீ அப்படிப் பண்ண மாட்ட!” எனத் தட்டிக் கொடுக்கிறது. ‘ஆகா படம் என்ன அருமையாக மனிதத்தைப் போதிக்கிறது?’ என்று கொண்டாடுவது எவ்வளவு முட்டாள்த்தனம்?? அதற்குச் சற்றும் குறைவில்லாதது, இப்படம் பெண்மையைப் போற்றுகிறது என நம்புவதும் போற்றுவதும்.
நாயகனுக்கு பர்ணபாஸ் முதல் பாவ மன்னிப்பு வழங்குகிறார். இரண்டாவதாக, நீரில் மிதக்கும் பிணத்தை இழுத்து விட்டதற்காக இன்னொரு பாவ மன்னிப்பு வழங்குகிறார் ஒரு பெரியவர். எப்படி? கீழே கிடக்கும் யாருடைய ஃபோனையோ எடுத்துக் கொடுத்து, “பரவாயில்ல வச்சுக்கோ. எங்கிட்ட ஒரு ஃபோன் இருக்கு. பேசுறதுக்கு யாருமே இல்லையா? உன் பாவம்லாம் இந்தத் தண்ணியோடு போச்சு. பேசு” என்கிறார். நாயகன் திருந்திட்டாராமாம்!! அதனால் கீழே கிடக்கும் ஃபோனை இயக்குநர் ராம், நாயகியைக் கரெக்ட் செய்ய கிஃப்டாகத் தர்றார். அடடா, இயக்குநர் ராமிற்குச் சுத்தித்தான் போட வேண்டும். என்னா பண்பு? என்னே மாண்பு?
இயக்குநர் ராம் பண்பாளர் மட்டுமல்ல. நேர்மையானவரும் கூட! ஏனெனில் படத்தின் முடிவில் ஒரு வாக்குமூலம் தருகிறார். “’ஒரு பெண் உன்னைப் பிடிச்சிருக்கு. என்னை விட்டுப் போய்டு’ எனச் சொன்னால், ஒரு பையன் வழக்கமாக என்னென்னலாம் செய்வானோ அதெல்லாம் செய்து நாயகியோடு சேர்ந்தான்”என்று தன் குரலாலேயே படத்தில் ஸ்டேட்டஸ் போடுகிறார்.
ஆக, “வழக்கமான” நாயகன். அவனிடம் மயங்கும் வழக்கமான நாயகி என ராமே ஒத்துக் கொள்கிறார். அப்படியாப்பட்ட தரமணியைப் பெண்மையைப் போற்றும் படம் என நீங்கள் சொல்வீர்களேயானால், தமிழில் இதுவரை வந்த அத்தனைப் படங்களுமே பெண்மையைப் போற்றியுள்ளது என ஒத்துக் கொள்வதாக அர்த்தம்.
– தினேஷ் ராம்