Shadow

விவேகம் விமர்சனம்

Vivegam movie review

நாயகன் அஜித்தும், இயக்குநர் சிவாவும் மூன்றாம் முறையாக இணைகின்றனர். கிராமம், நகரம் என்று பயணித்தவர்கள், தேசிய எல்லைகளைக் கடந்து, Counter Terrorist Squad இல் பணிபுரியும் சர்வதேசக் காவலனாக அஜித்தை ப்ரோமோட் செய்துள்ளனர்.

உலகையே ஆட்டிப் படைக்க நினைக்கும் நிழல் சமூகத்திற்கு விலைக்குப் போய் துரோகமிழைக்கிறார்கள் ஏஜென்ட் ஏ.கே.வின் நண்பர்கள். துரோகத்தில் இருந்து மீண்டு, நண்பர்களையும் பழி வாங்கி, உலகையும் எப்படிக் காக்கின்றார் என்பதுதான் படத்தின் ஜேம்ஸ் பாண்ட் பாணி கதை.

அக்ஷரா ஹாசனின் அத்தியாயம் மிக அழகாய் வந்துள்ளது. நடாஷா என்ற பாத்திரத்தில் அவர் முகம் காட்டும் பதற்றம், அவரது ஹேர்ஸ்டைல், உடை என எல்லாமுமாகச் சேர்ந்து அற்புதமாய் உள்ளது. நடாஷா ஒரு ஹேக்கர் என்பதைக் கேள்விகளின்றி ஏற்க முடிகிறது. அவரைப் பிடிக்க, அஜித் செயல்படுத்தும் பிளான் ‘பி (B)’ ரசிக்க வைக்கிறது.

குண்டு மழைக்கு நடுவில் அநாயாசமாய்ப் புகுந்து தப்பிக்கும் அதிநாயகனாக அறிமுகமாகிறார் அஜித். இயக்குநர் சிவாவிற்கு ஒரு மேஜிக் கை வந்த கலையாகி உள்ளது. வீரம் படம் முழுவதிலும் அந்த மேஜிக் பரவியிருக்கும். திரைச் சட்டகத்துக்குள் அஜித்தை எப்படிக் காட்டினால் அவரது ரசிகர்கள் பரவசமாவார்கள் என்பதே அந்த மேஜிக். இந்தப் படத்திலும் அந்த மேஜிக் உண்டு. ‘உன்னோடு வாழ்ந்தால் ஆனந்தமே’ எனும் பாடலே அதற்குச் சான்று. படத்தின் ஓப்பனிங் சீனை விட, டைட்டில் கார்ட் சீக்வென்ஸை மிக ரசனையாக வைத்துள்ளனர். சுற்றி துப்பாக்கிகளோடு வீரர்கள் நிற்கும் பொழுது, ‘இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும், எல்லாச் சூழ்நிலையிலும், நீ தோத்துட்டத் தோத்துட்டன்னு, உன் முன்னாடி நின்னு அலறினாலும், நீயா ஒத்துக்கிற வரை எவனாலும் எங்கயும் எப்பவும் உன்னை ஜெயிக்க முடியாது. Never ever give up’ என வசனம் பேசுகிறார். அவரைக் கைது செய்ய, ஒரே ஒரு வீரர் கூட காலுக்குக் கீழ் சுடாமல் அஜித் தமிழில் வசனம் பேசி முடிக்கும் வரை காத்துள்ளார்கள். அவர் பேசி முடிச்சதும் சுடத் தொடங்குகிறார்கள். அஜித் தப்பிக்கிறார். படத்தில் வசனமே இல்லை என்றால் கூட இன்னும் படம் நன்றாக இருந்திருக்கும் என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. படத்தில் இதே வசனத்தை, காஜல் அகர்வாலிடம் ஓரிடத்தில் சொல்வார். சூழ்நிலைகளோடு பொருந்தி வரும் பொழுது, பன்ச் டையலாக் அர்த்தம் பொதிந்ததாகவும், நாயக பிம்பத்தை உயர்த்திக் காட்டுவதாகவும் உள்ளது.

“கடவுள் பரிணாம வளர்ச்சி அடைந்து பணமாக மாறிட்டார்” என விவேக் ஓப்ராயின் வசனம் அடப் போட வைக்கிறது. ஆனாலும், அவரை வலுவான வில்லனாகக் காட்டாதது பெரும் குறை. அதி நவீன ஆயுதங்களைப் பார்வையாளர்களுக்கு விளக்கும் கதாபாத்திரமாக மட்டும் சுருங்கி விடுகிறார் விவேக் ஓப்ராய். ‘இதைக் காதில் வச்சுட்டீங்கன்னா, அங்க நீங்க கேட்கிறது எனக்கும் கேட்கும்’ எனப் படத்தில் சதா ஏதாச்சும் ஒரு கருவியைப் பற்றி விளக்கிக் கொண்டே உள்ளார். ‘இந்த ஆயுதம் என்ன செய்யும்? ரகசிய சமூகம் என்ன செய்யும்?’ எனக் கதையைச் சொல்லும் வில்லனாக உலா வருகிறார் விவேக் ஓப்ராய். கூடவே, ‘தல போல வருமா?’ என ஏ.கே. (AK) புகழையும் படம் நெடுகே பாடுகிறார். ‘ஏ.கே. விவேகி’ என டைட்டிலுக்கான காரணத்தையும் வில்லன்தான் சொல்கிறார். படத்தின் சீரியஸ்னஸ் இதனால் பெருமளவு மட்டுப்படுகிறது. ரசிகர்களுக்குப் புரியாமல் போய் விடுமோ என்ற பதற்றத்தையும், அதற்கான ஸ்பூன் ஃபீடிங் மெனக்கெடலையும் தவிர்த்திருக்கலாம் இயக்குநர் சிவா.

யாழினியாக காஜல் அகர்வால். அவரது அறிமுகமும், அதைத் தொடர்ந்து வரும் பாடலும் அட்டகாசம். படத்தின் உயிரோட்டமான பகுதிகள் அவை மட்டுமே! மற்றபடி சேஸிங், சூட்டிங் எனப் படம் ஓரிடத்தில் நிற்காமல் போய்க் கொண்டே இருக்கிறது. ஹீரோவின் மனைவி தான் டார்கெட் இருக்கும் என ரசிகர்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரியும் நேரத்தில், அவரைக் கொல்ல ஆள் அனுப்புகிறார் விவேக் ஓப்ராய். காஜல் அகர்வாலும், தான் வெளிநாட்டில் வாழும் மிகச் சிறந்த உளவாளியின் மனைவி என்பதை மறந்து, கணவனின் ஆண்மையையும் புகழையும் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் புகழுகிறார். அஜித்க்கு ஒரு நல்ல பழக்கம் இருக்கிறது எனப் பெருமைப்படுகிறார் காஜல். அதாவது, கொடுத்த வாக்கைக் காப்பாற்ற மரணத்தையும் வெல்லக் கூடிய சூப்பர்-மேனிசம் உள்ளது என்பதே அது ! ‘உங்களுக்கே இந்தக் கதியா? அவங்களைக் கண்டிப்பாகப் பழி வாங்க வேண்டும்’ எனவும் கேட்டுக் கொள்கிறார். நாயகி, வில்லன், காமெடியன் கருணாகரன் என அனைவரும் நாயகனை வியந்தோதிக் கொண்டே இருப்பதைத் தவிர்த்திருக்கலாம். அஜித்துக்கும், காஜல் அகர்வாலுக்கும் இடையே நடக்கும் மோர்ஸ் சங்கேத மொழி (Morse code) தொடர்பை, இயக்குநர் சிவா படத்தில் பயன்படுத்திய விதம் ரசிக்கும்படி இருந்தது.

நவீன ஆயுதங்கள், ஸ்குவாட்டின் அலுவலகம், காஜல் அகர்வாலின் தமிழ் சாய் உணவகம் என கலை இயக்குநர் மிலனின் உழைப்பு படத்தின் விஷூவல் அழகை அதிகப்படுத்திக் காட்டியுள்ளன. வெற்றியின் ஒளிப்பதிவும், அனிருத்தின் ஒலிக்கோப்பும் படத்தின் தொழில்நுட்பத் தரத்தை உறுதி செய்கின்றன. ஒவ்வொரு ஃப்ரேமிலும், தொழில்நுட்பக் கலைஞர்களின் நேர்த்தியான உழைப்பைக் காணலாம். சிவா தன் மேஜிக்கைத் தொழில்நுட்பக் கலைஞர்களின் உதவியோடு, இம்முறை பிரம்மாண்டப்படுத்தியுள்ளார்.