Shadow

உயிர் தமிழுக்கு விமர்சனம்

படத்தின் தலைப்பில் வரும் தமிழ் என்பது நம் தாய் மொழி தமிழ் அல்ல. படத்தில் வரும் நாயகியின் பெயர் தமிழ். இப்பொழுது உயிர் தமிழுக்கு என்ன மாதிரியான படம் என்பது புரிந்திருக்கும். இது ஒரு காதல் படம். காதல் படத்தில் அமீருக்கு என்ன வேலை என்ற கேள்வி வந்துவிடும் என்று எண்ணி, காதல் கதை நடக்கும் பின்புலத்தை அரசியல் ஆடுகளமாக மாற்றி இருக்கிறார்கள். எதிர் எதிர் கட்சிகளில் பயணிக்கும் நாயகனுக்கும் நாயகிக்கும் காதல். கட்சி பகைமை, நாயகன் மீது விழும் கொலைபழி இவற்றைக் காரணம் காட்டி காதலைக் கழுவேற்றப் பார்க்க, காதல் கரை சேர்ந்ததா இல்லையா என்பதே இந்த உயிர் தமிழுக்குப் படத்தின் கதை.

எதிர்கட்சியின் மாவட்ட செயலாளரான ஆனந்த்ராஜ் தன் மகள் தமிழை வார்டு கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடச் செய்கிறார். அவரைப் பார்த்த மாத்திரத்தில் அவர் மீது காதல்வயப்படும் நாயகன் அமீர், தானும் அரசியலில் குதித்தால் தான் நாயகியோடு நெருக்கமாகப் பழக முடியும் என்று எண்ணி, வார்டு கவுன்சில தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த தன் மாமன் இமான் அண்ணாச்சியைப் பேசி சரிக்கட்டி, அவருக்குப் பதிலாகத் தன்னை வேட்பாளராக்கி வேட்புமனு தாக்கல் செய்கிறார். தேர்தல் நெருங்க நெருங்க இருவருக்குமிடையே காதலும் வளருகிறது. இருவரும் வென்று கவுன்சிலர் ஆகிறார்கள். நாயகன் கவுன்சிலரில் இருந்து வளர்ந்து ஆளும் கட்சியின் மாவட்ட செயலாளராக வளர்ந்து நிற்கிறார். நாயகனும் நாயகியும் எதிரெதிர் கட்சி என்பதால் அவர்களின் காதலுக்கு நாயகியின் அப்பா ஆனந்த்ராஜ் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் மர்ம நபர்களால் அவர் கொலை செய்யப்படுகிறார். அந்தப் பழியும் நாயகன் மீது விழ, காதல் என்ன ஆனது என்பதை விவரிக்கிறது திரைக்கதை.

தீவிர எம்.ஜி.ஆர். ரசிகன் எம்.ஜி.ஆர். பாண்டியனாக அலப்பறையாக அறிமுகம் ஆகிறார் இயக்குநர் அமீர். அவரது தெனாவட்டான முறைப்பான உடல்மொழியை உதறிவிட்டு, நக்கலும் நையாண்டியும் கலந்த நடிப்புக்கான உடல்மொழியை இப்படத்தில் குத்தகைக்கு எடுத்திருக்கிறார். கேபிள் டிவி ஆப்ரேட்டராக இரண்டொரு காட்சிகள் வந்து, பின்னர் அரசியலில் கால் பதித்து இவர் வெளியிடும் தேர்தல் அறிக்கை அட்டகாசம். கோர்ட் வாசலில் பூட்டிய வேனுக்குள் நடக்கும் சண்டையில் வடசென்னை ராஜனை கண் முன் நிறுத்துகிறார். இவருக்கும் இமான் அண்ணாச்சிக்குமான சில உரையாடல்கள் அமைதிப்படை அமாவாசை மற்றும் மணிவண்ணனை நினைவுபடுத்துகின்றன. ஆங்காங்கே அமீர் உதிர்க்கும் அரசியல் நையாண்டி வசனங்கள் சிரிப்பை வரவழைத்தாலும், அவை அனைத்துமே ஒரு கட்சி சார்புடன் அமைந்திருப்பது இயல்பானதாகத் தெரியவில்லை. காதல் காட்சிகளிலும், எமோஷ்னல் காட்சிகளிலும் இன்னும் சிறப்பாக நடித்திருக்கலாம் என்கின்ற எண்ணம் தோன்றுகிறது.

நாயகியாக வரும் சாந்தினிக்குப்ப் பெரிதாக நடிப்பதற்கு வாய்ப்பில்லை. நாயகன் ரசிப்பதற்காகவே ஆங்காங்கே அழகு மயிலாக நின்று தோற்றம் தருவதைத் தவிர்த்து, காதலிப்பதும், தந்தை இறந்ததும் கண்ணீர் சிந்துவதுமாக ஓரிரு காட்சிகளில் மட்டுமே நடிக்க வாய்ப்பு. பாதிப்படத்திற்கு மேல் உடல் எடையில் அவ்வளவு மாற்றம். அது படத்திற்காக ஏற்றப்பட்ட எடையா, படப்பிடிப்பின் இடைவெளியால் ஏறிப் போன எடையா என்பது தெரியவில்லை. சாந்தினி நடிப்பில் பாஸ் மார்க் வாங்குகிறார். அவ்வளவே!

மாமனாக வரும் இமான் அண்ணாச்சி ஒட்டுமொத்த படத்தின் கலகலப்புக்குக் காரணமாகிறார். வேட்புமனு தாக்கல் செய்ய வந்த இடத்தில் வேட்பாளர் பதவியையே தானம் செய்யும் போதும், இன்னும் பிற இடங்களிலும் ஓரளவிற்கு சிரிக்க வைக்கிறார். ஒரு சில காட்சிகளில் மாத்திரம் வந்து போனாலும் ஆனந்த்ராஜ் கொடுக்கப்பட்ட பாத்திரத்தைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். கஞ்சா கருப்பு அவரால் முடிந்த அளவிற்கு சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார். ராஜ்கபூர், குட்டிப்புலி சரவணசக்தி போன்றோர் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள்.

இமானின் இசையில் பாடல்கள் சுகமான தாலாட்டாக உள்ளன. எஸ்.பி.பி குரலில் எம்.ஜி.ஆர் தொடர்பான பாடல் சிறப்பு. பின்னணி இசை குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இல்லையென்றாலும் பெரிதும் குறையாகவும் தெரியவில்லை. பிற தொழில்நுட்பக் கலைஞர்களான ஒளிப்பதிவாளரும் படத்தொகுப்பாளரும் படத்திற்கு அவர்கள் தரப்பில் இருந்து என்ன தேவையோ அதைச் சிறப்பாகவே செய்து கொடுத்திருக்கின்றனர்.

இயக்குநர் ஆதம்பாவா எழுதி இயக்கி இருக்கிறார். நாயகியைப் பார்த்து காதல் வயப்பட்டு அரசியலுக்கு வர விரும்பும் நாயகன் எதிர்கட்சி வேட்பாளராக இல்லாமல் சுயேட்சை வேட்பாளராக நின்றிருந்தாலே சுயம்வரம் சிறப்பாக நடந்திருக்கும். என்ன மேற்கொண்டு கதை பண்ண முடியாமல் போயிருக்கும் என்பதால் நாயகனை எதிர்கட்சி வேட்பாளராக நிறுத்திவிட்டனர். எதிர்கட்சி வேட்பாளரை நாயகி எப்படிக் காதலிப்பார் என்பதான லாஜிக்கல் கேள்வியெல்லாம் கேட்பதற்கான படம் இது இல்லை என்பதால் அதையெல்லாம் அப்படியே கடந்துவிடலாம்.

அரசியல் நையாண்டி, அரசியல் நகைச்சுவை ஆகியவற்றை மட்டுமே நம்பி எடுக்கப்பட்டிருக்கும் ‘உயிர் தமிழுக்கு’ப் படத்தில் கதையோ, திரைக்கதையோ சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. நகைச்சுவை மட்டும் ஆங்காங்கே கை கொடுத்திருக்கின்றது.