Shadow

வானம் கொட்டட்டும் விமர்சனம்

vaanam-kottattum-review

தேனி மாவட்டத்தில் பாசமான அண்ணன் தம்பி பாலாஜி சக்திவேலும், சரத்குமாரும். ஒரு உள்ளூர் தேர்தல் பிரச்சனையில் பாலாஜி சக்திவேலை வெட்ட, அண்ணனுக்காக எதிராளிகளை வெட்டிவிட்டு 20 வருடங்கள் சிறைக்குச் செல்கிறார் சரத்குமார்.

ராதிகா தனி ஆளாக இருந்து விக்ரம் பிரபுவையும், ஐஸ்வர்யா ராஜேஷையும் வளர்க்கிறார்.

விக்ரம் பிரபு கோயம்பேடு மார்கெட்டில் வாழைக்காய் மண்டி வைக்கிறார். 20 வருடங்கள் கழித்துச் சிறையில் இருந்து வரும் சரத்குமாரை விக்ரம் பிரபுவும் ஐஸ்வர்யா ராஜேஷும் வெறுக்கிறார்கள். இதே நேரம் சரத்குமாரால் இறந்து போனவரின் மகன் நந்தா, சரத்குமாரைக் கொலை செய்யத் துரத்துகிறான்.

கடைசியில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் சரத்குமாரை ஏற்றுக் கொண்டார்களா, நந்தா சரத்குமாரைப் பழி வாங்கினாரா என்பதுதான் கதை.

தேனியின் அழகை கேமராவில் அழகாகக் காட்டியுள்ளனர். அந்த வாழைத் தோட்டம் மிக அழகு.

இப்படத்தில் சரத்குமாரும், ராதிகாவும், பாலாஜி சக்திவேலும் பிரதான கதாபாத்திரங்கள். இடைவேளைக்குப் பிறகு, தன் பிள்ளைகளின் பாசத்துக்கு ஏங்குகின்ற அப்பா கதையா, பழி வாங்கும் மகனின் கதையா, விக்ரம் பிரபு உழைத்து முன்னேறும் கதையா என இயக்குநருக்கே ஏக குழப்பங்கள் போலும்.

பாலாஜி சக்திவேல் பெரியப்பாவாக, சரத்குமாரின் அண்ணனாக, ராதிகாவின் மாமாவாக, ஊர்க்காரனாக நிறைய வெரைட்டி காட்டியிருக்கிறார். மொத்த படத்திலும் சூப்பராக எழுதப்பட்ட கேரக்ட்டரே பாலாஜி சக்திவேலல்தான். தானொரு மிகச் சிறந்த குணசித்திர நடிகரென நிரூபித்துள்ளார். ராதிகாவிற்குத் தொடக்கத்தில் பிரமாதமான கதாபாத்திரம் என்றாலும், பின்னர் வழக்கமான தமிழ் சினிமா அம்மாவாகிவிடுகிறார்.

சரத்குமார் எப்படி பெங்களூரில் இருந்து சரக்கு எடுத்துக் கொண்டு வருகிறார், எதற்கு ரெட்டி பையனிடம் சண்டை போடுகிறார் எனத் தெளிவில்லை. கதையாக ஒற்றைப் புள்ளியினூடாகப் பயணிக்காமல், தனி தனிக் காட்சிகளாகத் தொக்கி நிற்கின்றன.

சித் ஸ்ரீராம், ‘கண்ணே தங்கம் ராசாத்தி’ பாடலை மட்டுமே பின்னணி இசையாக உபயோகித்துள்ளார். செம டார்ச்சரான பின்னணி இசை என்றே சொல்லவேண்டும்.

கம்பீரமான சரத்குமாருக்கு நோஞ்சான் மாதிரி இருக்கிற நந்தாதான் வில்லன். அதுவும் கிளைமேக்ஸ்ல ஒரே டயலாக்கில் திருந்துவது என்பது கொஞ்சம் டூ மச்.

போரடிக்காமல் போகிற இந்தப் படத்தில், சாந்தனு, வி.ஐ.பி. வில்லன் அமிதாஷ், இரட்டையர்களாக நந்தா, மடோனா செபஸ்டியன் ஆகியோரின் காட்சிகள்சி நீக்கினாலும் கதைக்கோ, படத்திற்கோ எந்த பாதிப்பும் நேராது. இயக்குநர் தனா நிறைவைத் தராவிட்டாலும், படத்தில் இருந்து விலகாமல் பார்த்துக் கொள்கிறார்.

ரமேஷ் சுப்புராஜ்