டுட்டூ (Duttu) எனும் மஞ்சள் நிற யமஹா RX 135-இன் மூன்று பயணங்களைப் பற்றிய கதை இது.
வேலைக்குச் செல்ல கிருஷ்ணாவிற்கு ஒரு டூ-வீலர் தேவைப்படுகிறது; செயினை அறுத்து நகையைக் கொள்ளையடிக்க டிக்ஷனிற்கும் செளகத்துக்கும் ஒரு பைக் தேவைப்படுகிறது; காதலி ரீத்தாவை ஷாப்பிங் கூட்டிச் செல்ல தீபக்கிற்கு ஒரு வண்டி தேவைப்படுகிறது. டுட்டூவில் நடக்கும் இந்த மூன்று பயணங்களையும், வேலைப் பயணம், சாகசப் பயணம், காதல் பயணம் என மூன்று அத்தியாயங்களாய்ப் பிரித்து, ஒரு நேர்க்கோட்டில் இணைக்கிறது திரைக்கதை.
பயண அத்தியாயங்கள் தொடங்கும் முன், கிருஷ்ணாவின் வாழ்விடம் பற்றியும், அவனது நண்பர்கள் பற்றியும் மிக நீண்டதொரு அத்தியாயம் உள்ளது. விதார்த்திற்கு கிருஷ்ணாவாக நடிக்க நல்லதொரு வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளார் இயக்குநர் ரஜீஸ்பாலா. ஆனால், சத்தமாக வாயு பிரித்து, ரபீக் தான் அந்த வளாகத்தில் இருப்போரை எழுப்பிவிடுவான் என்பதெல்லாம் கதைக்குத் தேவையில்லாத அசட்டு நகைச்சுவை. இப்படியான தேவையில்லாக் காட்சிகளைப் படத்தொகுப்பாளர் ரிஷால் ஜெய்னி கத்தரித்துப் படத்தின் நீளத்தைக் குறைத்திருக்கலாம்.
ஒன்றன் பின் ஒன்றாக மூன்று பயணமும் வருகிறது. விதார்த், வேறொருவரின் ஃபோனைத் தவற விட்டுவிடுகிறார். அதனால் ஒரு சங்கடத்தில் மாட்டிக் கொள்கிறார். வண்டி பற்றித்தான் பிரதான கதை என்றாலும், ஃபோனைக் கண்டுபிடிப்பதைத்தான் படத்தின் மையக்கருவாக கொள்ள வேண்டியுள்ளது. திரைக்கதை பிசகும் புள்ளி இது. விதார்த்தின் கதை சுபமாய் முடிந்த பிறகு வரும் வண்டியின் மற்ற பயணங்கள் சுவாரசியத்திற்கு உதவவில்லை. திணிக்கப்பட்ட வேறு கதையாகவே உள்ளது. உதாரணத்திற்கு, காதல் பயணம் என்ற அத்தியாயத்தில் வரும் பாத்திரங்கள் முக்கால்வாசி படத்திற்குப் பிறகு படத்திற்குள் தேமோவென வருவதால் எந்தத் தாக்கத்தையும் அவர்கள் பார்வையாளர்களிடம் ஏற்படுத்துவதில்லை. அதுவும் அவ்வளவு சுவாரசியமாகவும் இல்லை. அதுவும் நடிகர்களும் புதுமுகங்கள் என்பதால் அந்நியமான முகங்கள் வேறு. நாயகனின் பிரச்சனை தீர்ந்தால் படமும் முடிந்தாற்போல். எல்லா அத்தியாயங்களும் சொல்லப்பட்ட பின்னாவது, நாயகனின் பிரச்சனை எப்படித் தீர்ந்தது எனக் கடைசியில் சொல்லியிருக்கலாம்.
இயக்குநர் ரஜீஸ்பாலாவின் கதாபாத்திரத் தேர்வுகள் அனைத்தும் கச்சிதம். ரஃபீக்காக நடித்திருக்கும் M.R.கிஷோர் குமார் அட்டகாசப்படுத்தியுள்ளார். சாந்தினியின் அப்பா ராகவனாக வரும் T.ரவியும் நன்றாக நடித்துள்ளார். அனைவரையும் தன் வழிக்குக் கொண்டு வந்த இயக்குநர் நடிக்கவைத்திருப்பது நன்றாகத் திரையில் தெரிகிறது. டுட்டூவிற்கு, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் குரல் கொடுத்துப் படத்தின் சீரியஸ்னஸைக் குறைத்திருக்க வேண்டியதில்லை. டுட்டூ மூன்று பயணங்கள் மேற்கொண்டு தடம் மாறுவதால், தனது இலக்கான பார்வையாளர்களைச் சுற்றி வளைத்தே அடைகிறது.