
கால் டாக்சி ஓட்டுநர் சிவாஜியிடம் இருந்து 5 லட்சத்தை மோசடி செய்து அபகரித்து விடுகிறார் ஜான் விஜய். வீரம் கொண்டு வெகுண்டெழும் சிவாஜி தன் பணத்தை எப்படி மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
நடிகை ஷாலினியின் தங்கை ஷாம்லி நாயகியாக அறிமுகமாகி உள்ளார். ‘தீவிர விஜய் விசிறி’யாக வருகிறார். இது மட்டுந்தான் படத்திலுள்ள அதிகபட்ச சுவாரசியமே! ‘தாறுமாறு தக்காளி சோறு’ பாடலில் இடுப்பை வெட்டி வெட்டி நடக்கிறார். ஏழைக் குழந்தைகளுக்கு நாயகன் புத்தகங்கள் வாங்கித் தந்ததும் காதல் மலர்ந்து விடுகிறது. இப்படியாக இயக்குநர் கணேஷ் விநாயக்கின் கற்பனையின்மை ஃப்ரேம்க்கு ஃப்ரேம் பூதகரமாய் உறுத்துகிறது.
அநாதை நாயகன்; அவன் அக்காவாக நினைக்கும் வினோதினியின் மகளுக்கு மூளையில் கட்டி; நாயகியின் மேல் முதல் பார்வையிலேயே காதல்; ஆப்ரேஷனுக்காக நாயகன் புரட்டும் பணத்தை வில்லன் ஏமாத்தி விடுகிறான்; நாயகனுக்கு தலையில் அடிபட்டு கடைசி 6 மாதங்கள் நடந்ததை மறந்து விடுகிறான் எனக் கதறக் கதற கதையை அலசிக் காயப் போட்டுள்ளார் இயக்குநர். நாயகன் – நாயகிக்குள் தோன்றும் காதலும், அது சார்ந்த காட்சிகளிலும் கூட அவ்வளவு செயற்கைத்தனமும் அசுவாரசியமும்.
யோகி பாபுவும் ரோபோ ஷங்கரும், ஃபைவ் ஸ்டார் சாக்லேட் விளம்பரத்தில் வரும் ரமேஷ் – சுரேஷ் போல் சித்தரிக்கப்பட்டுள்ளனர். ரோபோ ஷங்கர் உருண்டு புரண்டு பெர்ஃபாமன்ஸ் செய்தாலும், வழக்கம் போல் யோகி பாபு அலட்டிக்காமல் நடித்து ஈர்க்கிறார். ஒரு காட்சியில், “இப்படியொரு கேவலமான ஃப்ளாஷ்-பேக்கைக் கேட்டதே இல்லை” என யோகி பாபு பார்வையாளர்களின் மனதைப் புரிந்தவராக நாயகனைக் கலாய்க்கிறார்.
மையக் கதையில் காட்டாத மெனக்கெடலை, இயக்குநர் கதைக்குத் தேவையில்லாத காட்சிகளில் செலுத்தியுள்ளார். சிறைக்குள் இருக்கும் மகாநதி ஷங்கர் எபிசோடையும், ஹோட்டலில் பெண்ணுக்காகக் காத்திருந்து ஏமாறும் பாபுஜி எபிசோடையும் உதாரணமாகக் கொள்ளலாம் (றெக்க படத்தில் அரசியல்வாதி மதுரை மணிவாசகம் எனும் வலுவான பாத்திரத்தில் வந்தும் திரையில் மின்னலென மறைந்த பாபுஜி, கதைக்கு உதவாத கேரக்டரில் வந்தாலும் இப்படத்தில் பளீச்சென வலம் வருகிறார்).
நாயகனின் வீரமோ, நாயகியின் காதலோ, குழந்தையின் பரிதாப நிலையோ எதுவும் பார்வையாளர்களுக்குக் கடத்தப்படவில்லை.


