Shadow

பலே சசிகுமார்

Bale Vellaiya Thevaa Solai Prakash

“மகளிர் மட்டும்-க்குப் பிறகு ஜாலியான சூழல் இருந்த படப்பிடிப்பு இங்கே தான் மீண்டும் அமைந்தது. டிமானிட்டைசேஷன், புயல், அம்மாவின் மறைவு என மக்கள் இந்த ஒரு மாதமாகப் பட்ட கஷ்டங்களை மறந்து குடும்பத்தோடு ரசித்து மகிழ நல்லதொரு காமெடிப் படம்” என்றார் சசிகுமாருக்கு அம்மாவாக நடித்துள்ள நடிகை ரோகினி.

“அரிவாள், முரட்டு மீசை என ரத்தம் தெறிக்கிற சசிகுமாரைத் திரையில் பார்த்துட்டு, ‘நானோ காமெடி பீஸ்? எப்படி செட் ஆகும்?’ எனப் பயந்துக்கிட்டே ஷூட்டிங்கிற்குப் போனேன். ஆனா, நேரில் ரொம்ப அமைதியானவர். அவர் கம்பெனில பேமென்ட் எல்லாம் வீடு தேடி சரியாக வந்துடுது. வருஷத்துக்கு கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் 10 படம் பண்ணணும். அத்தனையிலும் எனக்கு வாய்ப்புக் கொடுக்கணும்னு கேட்டுக்கிறேன்” என்றார் கோவை சரளா.

“இந்தக் கதையை சோலை பிரகாஷ் சொன்னதும் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதில் வரும் பாட்டி கேரக்டரைப் பண்ணக் கூடியவர்கள் இரண்டு பேர் தான். ஒருவர் ஆச்சி மனோரமா; அவருக்குப் பிறகு, அதைச் செய்யக்கூடிய நபர் என்றால் அது சின்ன ஆச்சி கோவை சரளாம்மா தான். என்னைப் படத்தின் ஹீரோ எனச் சொன்னாலும், உண்மையான ஹீரோ கோவை சரளாம்மாவே!” என்றார் இயக்குநர் சசிகுமார். அவருக்கு ஜோடியாக தான்யா அறிமுகமாகுகிறார். இவர் ‘காதலிக்க நேரமில்லை’, ‘அதே கண்கள்’ முதலிய படத்தின் நாயகன் ரவிச்சந்திரன் அவர்களின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.

“ஒரு கிராமத்தின் தொழில்நுட்ப வளர்ச்சி தான் “பலே” வெள்ளையத் தேவாவின் கரு. ஒரு தொழில்நுட்பம் கிராமத்துக்கு என்னவெல்லாம் கொடுக்கும்; அந்தத் தொழில்நுட்பத்துக்குக் கிராம மக்கள் என்ன கொடுத்தாங்க என்பதுதான் படத்தின் கதை” என்றார் இயக்குநர் சோலை பிரகாஷ். அறிமுக இயக்குநரான இவரைப் பற்றி, “தனக்கு என்ன வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருந்தார்” என ரோகினியும், “புது இயக்குநரான தொடக்கத்தில் கொஞ்சம் திணறுவாங்க. ஆனா, முதல் நாள் ஷூட்டிங்கில் இருந்தே போல்டாக இருந்து, கடைசி வரை கமாண்டிங்காக இருந்தார்” என கோவை சரளாவும் புகழாரம் சூட்டினார்கள்.

“இயக்குநர் எனக்கு பேரன் போல! ஒரே ஷெட்யூலில் 50 நாளில் படத்தை வேகமாக எடுத்து முடிச்சுட்டார். இந்த மாடல் தான் இப்போதைக்கு சினிமாக்குத் தேவை. அநாவசியமாக செலவு செய்யாமல், ஒரே ஷெட்யூலில் முடிச்சுட்டா, ‘நீடுழி வாழகன்னு வாழலாம்’. சசிகுமாரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் அருமையா வொர்க் செய்து படத்தை முடிச்சாங்க. என்னைப் பொறுத்த வரை ‘பலே சசிகுமார்’ என்று தான் சொல்லுவேன்” என்றார் நடிகரும் தயாரிப்பாளருமான சங்கிலி முருகன்.