Search

வேலுபிரபாகரனின் காதல் கதை விமர்சனம்

Kadhal-Kadhai
“வேலுபிரபாகரனின் காதல் கதை” என்ற பெயரைப் பார்த்தவுடன் வேலுபிரபாகரன் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் ‘காதல் கதை’ என்று நினைத்தால் அது தவறு என்பது படம் பார்த்தவுடன் புரிந்து விடும். படத்தின் முழு பெயரே ‘வேலுபிரபாகரனின் காதல் கதை’ தான்.

படத்தில் வேலுபிரபாகரன் ஒரு இயக்குனராகவே வருகிறார். அவர் எடுக்கும் படம் சர்ச்சைக்குள்ளாகி, அந்தப் படத்தை தடை செய்யக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு போடப்படுகிறது. ஆட்டோவில் வந்து கொண்டிருக்கும் வேலுபிராகரனைக் குண்டர்கள் சிலர் வழி மறித்து கத்தியால் குத்தி விடுகின்றனர். வேலுபிராபகரனைப் பற்றி அவருக்கு கடைசியாக ஃபோன் செய்த பெண் பத்திரிகை நிருபரை அழைத்து விசாரிக்கின்றனர். பெண் நிருபர் வேலுபிராபகரனின் சர்ச்சைக்குரிய கதையையும், அவரது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட காதலையும் பற்றி காவல் துறையினருக்குச் சொல்கிறார்.

‘விஷ்ணுபுரம்’ என்ற ஊரில் அவர் பார்த்த உண்மைச் சம்பவங்கள் அடிப்படையில் ‘பெரியார்’ என்ற தனது படத்தை மூன்று பெண்களை மையப்படுத்திக் கதை அமைத்துள்ளார். முதல் பெண்ணான கீழ் வகுப்பைச் சார்ந்த ராணி, மேல் வகுப்பைச் சேர்ந்த பையன் ஒருவனைக் காதலித்துக் கர்ப்பமாகிறாள். இரண்டாவது பெண்ணான தங்கம், படிக்கும் காலத்திலேயே ஒருவனை நம்பி ஏமாந்து தாயாகி ஊராரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் உள்ளானவள். முப்பது வயது கடந்தும் கல்யாணமாகாத வாத்தியார் ஒருவருக்குச் சமைத்துப் போடும் தங்கம், அந்த வாத்தியாரின் அடக்கி வைக்கப்பட்ட உணர்வுகளின் எழுச்சிகளுக்குப் பலியாகிறாள். மூன்றாவது பெண்ணான தங்கத்தின் அண்ணி, தங்கத்தின் ஒழுக்கத்தைத் தூற்றியவாறே தன் கணவனின் முதலாளியுடன் உறவு கொள்கிறாள்.

வேலுபிரபாகரனின் அங்கீகரிக்கப்பட்ட முதல் காதல் பள்ளியில் ஆரம்பிக்கிறது. அவருக்காகக் காத்திருக்கிறேன் என்ற அவளது காதலி, கல்லூரி படிப்பு முடிந்து அவர் வரும்பொழுது மணமுடித்திருந்தாள். பிறகு சினிமா துறையில் ஆர்வம் கொண்ட அவர், சவீதா (சில்க் ஸ்மிதா) என்ற நடிகையிடம் கெஞ்சிப் போராடி மணந்து கொள்கிறார். தொன்னூறு நாட்களுக்குப் பிறகு பழகிய நடிகையின் உடம்பு அலுத்து விடுகிறது. உண்மையான சுகம் ‘கற்புடைய பெண்களிடம்’ தான் கிடைக்கும் என நம்பும் அவருக்கு, தன்னினும் இருபது வயது இளைய பள்ளி ஆசிரியையான பத்மாவிடம் காதல் மலருகிறது. பத்மாவும் தனக்கு நல்ல இடத்தில் மாப்பிள்ளை கிடைப்பதிருப்பதாக சொல்லி விடை பெறுகிறாள்.

ராணியின் காதல், தங்கத்தின் நிலை, அவள் அண்ணியின் கள்ளக் காதல், தன்னுடைய காதல்கள் என அனைத்துக்கும் மூலக் காரணம் காமமே என சொல்கிறார் வேலுபிரபாகரன். காதல் என்பது எல்லாம் வெறும் கற்பித மயக்கங்கள் என மேலும் வலியுறுத்துகிறார். ஜாதி துவேஷத்தால அடிக்கடி வெட்டு குத்து நடக்கும் ஊரில் ராணி தனது காதலில் ஜெயித்தாளா, தங்கத்தை வாத்தியார் மணந்தாரா, தங்கத்தின் அண்ணியின் கள்ளக் காதல் அவள் கணவனுக்கு தெரிந்ததா, வேலுபிரபாகரனை வெட்ட ஆள் அனுப்பியது யார் என்பதை காவல் துறையினர் கண்டுப்பிடித்தனரா என்பது தான் படத்தின் முடிவு.

வேலுபிரபாகரன் நீதி மன்றத்திலும், மக்களைப் பார்த்தும் நிறைய பேசுகிறார். அவர் பேச்சின் சாரம்சம்: “இந்தியா இன்னும் முன்னேறாததிற்கு காமம் தான் காரணம். இங்குப் பாலியல் வன்முறைகள் நடக்கும் அளவிற்கு, மனிதக் குலத்தை மேம்படையச் செய்யும் ஒரு விஞ்ஞான கண்டுபிடிப்புகள் கூட நடக்கவில்லை. பெண்ணை ரசிப்பதிலேயும், அவர்களை அங்கங்களை எப்படியாவது பார்த்த விட வேண்டும் என்ற நினைப்பிலியே காலம் கழிக்கின்றனர். அதற்கு காரணம் பெண்களை இங்கே புனிதப்படுத்தி விடுகின்றனர். இது அவர்களுக்குச் செய்யப்படும் கொடுமை. ஆண்கள் போல் பெண்களுக்கு இத்தகைய சிந்தனைகள் எழுவதில்லை. ஏனெனில் அவர்கள் சிறு வயது முதலே தந்தை, தம்பி, அண்ணன் என ஆண்களின் உடலைப் பார்த்துப் பழகி விடுகின்றனர்.”

மேலை நாட்டு பெண்கள் உள்ளாடைகளுடன் கடலில் குளித்து மகிழ, அவர்கள் அருகில் மேலை நாட்டு ஆண்கள் புத்தகம் படித்துக் கொண்டும், இசையில் மூழ்கியவாறும் இருக்கிறார்கள். இதை நிருபரிடம் சுட்டிக் காட்டி, “இந்தப் பெண்கள் இப்படிப்பட்ட குறைவான உடையில் இருந்தும் சலனமில்லமல் ஆண்கள் அவரவர் வேலையைப் பார்க்கின்றனர். நம்ம நாடும் இப்படி மாறணும் என்பது தான் என் ஆசை” என்கிறார்.

இசை ஞானி இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக உள்ளன. பிண்ணனி இசையில் சில இடங்களில் தன்னை நிரூபித்தும், சில இடங்களில் காணாமலும் போயிருக்கிறார் இளையராஜா.
படம் தொடங்கியவுடன் தோன்றும் அரை நிர்வாண ஆதிவாசிகள் அனைவரையும் மெளனம் கொள்ளச் செய்கின்றனர். ஆனால் அந்தக் காட்சிகளில் இருக்கும் விகல்பமின்மை, படம் முழுவதும் வரும் பெண் கதாபாத்திரங்களின் அங்கங்கள், காதல்(காமம்) செய்கைகள் போன்றவற்றின் காட்சி அமைப்புகளில் இல்லை. அந்த விகல்பமின்மை விரசமாக மாறிவிடுகிறது.

“கற்புடைய பெண்கள் தரும் சுகம் நிரந்திரமானது” என்று அவர் சொல்வதின் மூலம் பெண்ணடிமைக்குத் தான் வித்திடுகிறார். மேலும் கற்புடைய பெண்கள் தரும் சுகம் மற்றும் கற்பையிழந்த/கற்பில்லாத பெண்கள் தரும் சுகம் என்ற இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை. காதலிற்கே உடல் மேல் உள்ள இச்சை தான் காரணம் என்றால், அந்த உடலில் கற்பு இருந்தாலென்ன இல்லை என்றாலென்ன? கற்புக்கான இலக்கணங்களை வரையறுக்கும் விபரீதத்தில் இயக்குநர் ஈடுபடாத பொழுதும், அவர் ‘கற்பு’ என்று எதனைச் சொல்கிறார் என்று தெளிவுப்படுத்தி இருக்கலாம். ஒருவனையே நினைத்து அவனோடு மட்டுமே பெண் உறவு வைத்துக் கொள்ள வேண்டுமென்ற பெண்களை அடிமைப்படுத்தும் ஆணாதிக்க சிந்தனையைத் தான் காட்டுகிறது. இயக்குநர் படத்தின் மூலமாக வைக்கும் அடிப்படை கேள்விகளை அவரே அநர்த்தமாக்குவதாக உள்ளது. பெண்களைப் புனிதப்படுத்துவது அவர்களுக்குச் செய்யும் கொடுமை என்பவர் கற்புடைய பெண்கள் பற்றிச் சிலாகிப்பது ஏற்புடையதாக இல்லை. ஏனென்றால் பெண்களின் புனிதம் சிலப்பதிகாரம் காலம் தொட்டே கற்பால் தான் அளக்கப்படுகிறது.

பெண்களுக்கு எதிராய் நடக்கும் ‘பாலியல் வன்முறை’ அனைத்து நாடுகளிலேயும் பரவலாக உள்ளது. போட்டிருக்கும் உடைகளைச் சற்றுத் தளர்த்தினால் நாடு முன்னேறும் என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ள கூடியதாக இல்லை.

பெரியார் போல் வேடமணிந்து வேலுபிரபாகரன் கேட்கும் கேள்விகள் கை தட்டலை வரவழைக்கின்றன. “கல்லைத் தேடி எடுத்து வந்து, சிலை செய்து, கோவிலில் வைத்து, பூசை செய்து, அதைக் கொடு இதைக் கொடு என்று அந்தக் கல்லையே போய்க் கேட்கிறீங்களே இது முட்டாள்தட்மத்க இல்லையா?” என்பதும், “ஒரு நெல் விதை எடுத்து பாறை மீது வைத்து ஐயர் மந்திரங்கள் சொல்லட்டும், பாதிரியார் பைபிள் படிக்கட்டும், மெளலானா திருக்குரான் ஓதட்டும்… நெல் வளருதான்னு பார்க்கலாம். நான் விதைய மண்ணுல விதைச்சு ‘கடவுள் இல்ல.. கடவுள் இல்ல’ன்னு சொல்லித் தண்ணி ஊத்துறேன். நெல் வளராம போயிடுதான்னு பார்க்கலாம்” என்பதும் அதில் அடங்கும்.

வேலுபிரபாகரனின் தைரியமான இந்த முயற்சி பாராட்டுதல்களுக்கு உரியதெனினும், அவர் எடுத்துக் கொண்ட கருவை சில இடங்களில் பேசியே புரிய வைக்கிறார். கொஞ்சம் மெனக்கெட்டு லாவகமான திரைக்கதையாக மாற்றி காட்சிகளின் மூலம் புரிய வைத்திருக்கலாம். காட்சிகளில் காணப்படும் விரசம் தவிர்க்கப்பட்டிருந்தால் பெண்களுக்கும் அவர் சொல்ல நினைத்தது போயிருக்கும்.
Leave a Reply