Shadow

விக்டோரியா & அப்துல் விமர்சனம்

Victoria & Abdul movie revieew

பொறாமை கொள்ள வைக்கும் கதைக்கரு. மகாகனம் பொருந்திய இங்கிலாந்து பேரரசிக்கும், பிரிட்டிஷ் இந்தியாவைச் சேர்ந்த இந்தியப் பணியாளரான அப்துல் கரீம்க்கு இடையேயான நட்பினைச் சொல்லும் படம். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எனக் காட்டி, பின் சில மைக்ரோ நொடிகளில் ‘பெரும்பாலும்’ என்ற வார்த்தையைக் குசும்புடன் இணைக்கிறார் இயக்குநர் ஸ்டீஃபன் ஃப்ரேயர்ஸ்.

இந்தக் கதைக்கருவிற்கு ஏன் பொறாமைப்பட வேண்டும்? ஒரு வார்டு கவுன்சிலரையே மையக் கதாபாத்திரமாகக் கொண்டு, அவரைக் கலாய்க்க இயலாத முதிர்ச்சியற்ற உணர்ச்சி பொங்கும் சமூகத்தில் இருந்து, இப்படத்தை நோக்கினால் எழும் பிரம்மாண்ட பிரமிப்பைத் தவிர்க்கவே முடியவில்லை. படத்தின் முதற்பாதி அங்கதம் மிகவும் ரசிக்க வைக்கிறது. உதாரணத்திற்கு, அப்துலும் மொஹமதும் இங்கிலாந்து துறைமுகத்தில் காலடி வைத்ததும், அவர்களை வரவேற்கும் ஆங்கிலேயர், “நாகரிகத்திற்கு வரவேற்கிறோம்” என்கிறார். பின்னணியில் வெள்ளைக்காரப் பிச்சைக்காரர்களைக் காட்டுகின்றனர்.

படத்தின் கதை 1887இல் தொடங்குகிறது. அந்தக் காலகட்டத்தைத் திரையில் அழகாய்க் கொண்டு வந்துள்ளனர். அப்துல் கரீம், ஆக்ரா சிறையில் சிறைக்கைதிகளின் பெயரை எழுதும் வேலையில் இருப்பவன். அவனுக்கு ஒரு பொன்னான வாய்ப்புக் கிட்டுகிறது. விக்டோரியா மகாராணி பதவியேற்று ஐம்பது ஆண்டுகள் (1837 – 1887) நிறைவடைந்ததை ஒட்டி, அவரது உருவம் பொதித்த நாணயத்தை, அவரது ஆளுகைக்கு உட்பட்ட இந்தியப் பேரரசின் சார்பில் உருவாக்குகின்றனர். அந்நாணயத்தை மகாராணியின் பார்வைக்குக் கொண்டு செல்லத் தேர்ந்தெடுக்கப்படும் வேலைக்காரன் தான் அப்துல் கரீம்.

பேரரசி விக்டோரியாவுக்கும் அப்துல் கரீம்க்கும் இடையே ஏற்படும் பொருந்தா நட்பு தான் படத்தின் கதை. அதென்ன பொருந்தாத நட்பு என்ற ஐயம் எழுந்தால், கண்டிப்பாகப் படத்தைப் பார்க்கவும். அந்த நட்பு, அரச குடும்பத்திலும், அரசு உயர் அதிகாரிகள் மத்தியிலும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தின என படம் நன்றாகப் பதிந்துள்ளது. சரியாகக் குறிப்பிட வேண்டுமானால், அதை மட்டுந்தான் பதிந்துள்ளது.

அப்துல் கரீமாக நடித்திருக்கும் அலி ஃபாஸல் குறும்பான கண்களுடன் அழகாய் லவ்வர் பாய் போல் உள்ளார். இங்கிலாந்து செல்வதையும், மகாராணியைச் சந்திப்பதையும் மிகப் பெரும் கெளரவமாய்க் கருதுகிறார். அந்தப் பரவசத்தைப் படம் முழுவதும் தன் கண்களில் சுமந்த வண்ணம் உள்ளார். மகாராணியின் பாதத்தைக் குனிந்து முத்தமிடுகிறான் அப்துல் கரீம். அப்துலின் கண்களில் தெரிவதென்ன என்று யூகிக்க முடியாதளவு உள்ளது. முழுப் படத்திலுமே கூட, அப்துலின் எண்ணவோட்டத்தைப் புரிந்து கொள்ள முடியாதளவு உருவாக்கியுள்ளார் இயக்குநர். அப்துலின் வயது 24; மகாராணியின் வயது 68. வயதில் மூத்தோருக்கான மரியாதையாக அந்த முத்தத்தைப் பாவிக்கலாம் தான் எனினும், ப்ரோட்டோகால் படி, மகாராணியின் முகத்தைப் பார்க்காமல் பின்னாலேயே நகர்ந்து சிறிது தூரம் சென்று திரும்ப வேண்டும் என்பதே அவனுக்குப் பிறப்பிக்கப்படும் கட்டளை. அதை மீறுகிறான் அப்துல். அது மூத்தோர் மீதான மரியாதை அன்று. அடிமைக்கு ஆண்டான் மீதுள்ள பிரேமை அல்லது விசுவாசம் என்றே அதைப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

ஒட்டுமொத்த கதைக்கருவை ஒற்றை வசனத்தில் கடந்து விடுவதுதான் படத்தின் பலவீனம். “எல்லாம் இருந்தும் நான் தனிமையில் இருக்கேன். எனக்கு முன்ஷியாக (டீச்சர்) இரு” எனக் கேட்கிறார் மகாராணி. அங்கதமாகத் தொடங்கும் படம், மிக எளிமையாக நட்பு மலர்ந்து விடுவதாகக் கடக்கிறது. 14 வருட (1887 – 1901) நட்பை, 112 நிமிடங்களுக்குள் சொல்வது கடினம் தான் எனினும், அதைச் சொன்ன விதத்தில் இயக்குநர் அதிக மெனக்கெடலோ அக்கறையோ செலுத்தவில்லை. அலட்டிக் கொள்ளாமல், ‘காமெடி டிராமா’ என்றே வகைப்படுத்தி விடுகிறார்.

“நான் எழுத்தாளர். அந்த வேலை தான் இந்தியாவில் செய்தேன்.”

“ஓ.. புனைவு எழுத்தாளரா?”

“இல்லை மகாராணி, சிறையில் கைதிகளின் பெயர் எழுதும் எழுத்தாளர்.”

என்ற அளவில் நகைச்சுவை நீள்கிறது. கார்பெட் எப்படி நெய்வது, மாம்பழங்களைப் பழங்களின் ராணி என கரீம் சொல்வதற்கு எல்லாம் மகாராணி காட்டும் குதூகலமே நட்பிற்குப் போதுமான காரணம் என இயக்குநர் ஸ்டீஃபன் ஃப்ரேயர்ஸ் நினைத்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டம்.

ஆனால், க்ளைமேக்ஸை மிக உணர்ச்சிப்பூர்வமாக முடித்துள்ளார். மகாராணியின் இறுதிக் கணங்களும், அவர் இறந்ததும் இங்கிலாந்து அரசு தன் தூய்மைவாதத்தை நிலைநாட்ட மேற்கொள்ளும் நடவடிக்கையும் தான் படத்தின் சீரியஸான காட்சிகள்.

Real Abdul & Victoria

அப்துல் கரீமுடன் இந்தியாவில் இருந்து மொஹமது என்பவரும் வருவார். மொஹமதாக நடித்திருக்கும் அதீல் அக்தார் கவர்கிறார். படத்தின் நகைச்சுவைக்கு உதவியுள்ளார். அப்துலுக்கு மகிழ்ச்சியைத் தரும் அனைத்தும் இவருக்கு மிகவும் சங்கடம் தருகின்றது. அப்துலின் கடந்த காலத்தைப் பற்றி மொஹமதிடம் தெரிந்து கொள்ள மகாராணியின் மூத்த மகன் ஆசை காட்டி முயலும் பொழுது, அவருக்கு உதவாததோடு, ‘இது உங்களுக்குத் தேவை தான்’ எனவும் கம்பீரம் காட்டுகிறார்.

விக்டோரியா மகாராணியாக ஜூடி டென்ச் நடித்துள்ளார். ஜேம்ஸ் பாண்ட் படங்களில் ‘எம்’-ஆக நடித்து நன்கு அறிமுகமான நடிகை. படம் பார்க்க வேண்டியதற்கு ஒரே காரணம் இவர் தான். சின்னச் சின்ன முக பாவனைகளில் இருந்து, அரச குடும்பத்தினர் அனைவரும் தனக்கெதிராகத் திரளும் பொழுது அதை எதிர்கொள்ளக் காட்டும் கம்பீரம் வரை அவர் வரும் காட்சிகள் அனைத்துமே அசத்தல். “உங்க முடிவை மாற்றிக் கொள்ளவில்லை என்றால், உங்களுக்கு மூளை பிசகிவிட்டது என டாக்டர் மூலம் செர்ட்டிஃபிகேட் வாங்கி உங்களை அப்புறப்படுத்துவோம்” என அவரது மகன் சொல்லும்பொழுது, அதை ஜூடி டென்ச் கையாளும் காட்சி மிக நன்றாக எடுக்கப்பட்டுள்ளது.

20 வருடங்களுக்கு முன், 1997இல் வெளிவந்த “மிஸ்டரெஸ் ப்ரெளன் (Mrs Brown)” என்ற படத்தின் சீக்வெல் என்று இப்படத்தைக் கொள்ளலாம். அப்படத்திற்கு அவர் சிறந்த நடிகைக்கான ‘கோல்டன் க்ளோப்’ விருது வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படமும், ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜான் ப்ரெளன் எனும் பணியாளுக்கும் மகாராணிக்கும் இருந்த நட்பைப் பற்றிய படமே!

தடியும் பழுதாகாமல்  பாம்புக்கும் வலிக்காமல், இந்தியாவை உறிஞ்சிய இங்கிலாந்து அரசின் அதிகாரப் பீடத்தின் வயிற்றில், ஒரு இந்திய முஸ்லீம் புளியைக் கரைத்துள்ளார் என்பதை அவர்களே விஷூவல் ஆவணமாக்கி விட்டார்கள் என்ற மகிழ்ச்சியை விட, சலிப்பே மேலிடுகிறது. விக்டோரியா & அப்துல், அழுத்தமற்ற மேம்போக்கான ஒரு படமாக இருந்தாலும், ஜூடி டென்ச் தன் நடிப்பால் ரசிக்க வைத்து விடுகிறார்.