Shadow

விஜயானந்த் – நான்கு தலைமுறைகளின் வாழ்க்கை

சாலை மார்க்கமாக வணிக ரீதியிலான சரக்குகள் மற்றும் தளவாடங்களைக் கையாளும் முன்னணி தனியார் வாகன போக்குவரத்து நிறுவனமான விஆர்எல் (VRL) எனும் நிறுவனத்தின் உரிமையாளரும் தொழிலதிபருமான பத்மஸ்ரீ விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கைத் தயாராகியிருக்கும் ‘விஜயானந்த்’ எனும் திரைப்படம், கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில், டிசம்பர் 9 ஆம் தேதி அன்று வெளியாகிறது.

‘ட்ரங்க்’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘விஜயானந்த்’ திரைப்படத்தில் நடிகர் நிஹால் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் ஸ்ரீலதா பிரகலாத், பரத் போப்பண்ணா, அனந்த் நாக், வினயா பிரசாத், பிரகாஷ் பெலவாடி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கீர்த்தன் பூஜாரி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு, கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். சுயசரிதையைத் தழுவித் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை வி ஆர் எல் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆனந்த் சங்கேஸ்வர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

இந்நிலையில் பட வெளியீட்டுக்கு முன் படக்குழுவினர், சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அந்நிகழ்வில், படத்தின் இயக்குநர் ரிஷிகா சர்மா, தயாரிப்பாளர் ஆனந்த் சங்கேஸ்வர், நடிகர்கள் நிஹால், பரத் போப்பண்ணா, தமிழ்ப் பதிப்பின் வசனம் மற்றும் பாடல்களை எழுதிய மதுரகவி, படத்தொகுப்பாளர் ஹேமந்த், படத்தை வெளியிடும் யூஎஃப்ஓ பிரதிநிதி மனோஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படத்தின் தயாரிப்பாளர் ஆனந்த் சங்கேஸ்வர், ”விஜயானந்த் படத்தினை அறிமுகப்படுத்துவதற்காக அஹமதாபாத், லக்னோ, இந்தூர், டெல்லி, கொச்சி, ஹைதராபாத் ஆகிய இடங்களைத் தொடர்ந்து தற்போது சென்னைக்கு வருகைத் தந்திருக்கிறோம். சென்றமிடமெல்லாம் சிறப்பான வரவேற்பளித்த அனைவருக்கும் நன்றி.

எனது ஒன்றாவது வயதில், என்னுடைய தந்தை விஜய் சங்கேஸ்வர் குடும்பத் தொழிலிலிருந்து விலகி, விஆர்எல் எனும் இந்த வாகனப் போக்குவரத்து துறையில் 1976 ஆம ஆண்டில் ஈடுபடத் தொடங்கினார். தற்போது நாங்கள் ஏழு லட்சம் தொழில் முறையிலான வாடிக்கையாளர்களுக்குச் சேவையளித்து வருகிறோம். விவசாயம் மற்றும் வேளாண்மை சார்ந்த பொருட்கள், ஜவுளிகள், ஆயத்த ஆடைகள், மருந்து பொருட்கள், அகர்வத்தி, காலணிகள் மற்றும் நுகர்வோர் பொருட்கள் என ஆண்டுதோறும் பத்தாயிரம் டன் எடையுள்ள சரக்குகளைக் கையாளுகிறோம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 1500 கிளைகளுடன் இயங்கி வருகிறோம். தமிழகத்தில் மட்டும் 150 க்கும் மேற்பட்ட கிளைகளுடன் செயல்பட்டு வருகிறோம். எங்கள் நிறுவனத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இயக்குநர் ரிஷிகா சர்மாவும், நாயகன் நிஹாலும் கொரோனா தொற்று காலகட்டத்தில் தந்தையைச் சந்தித்தனர். 30 நிமிட சந்திப்பு என்று கூறி தொடங்கிய இவர்களது பேச்சுவார்த்தை, எட்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இவர்கள் திரைக்கதையை விவரித்த விதம், அதற்கான மெனக்கடல்கள் என அனைத்தும் என்னுடைய தந்தையாருக்குப் பிடித்திருந்தது. அதன் பிறகு எங்களது நிறுவனத்தின் தயாரிப்பிலேயே இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறோம். இந்தப் படத்தின் உருவாக்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் இந்தத் தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் திரைப்படத்தில் அவருடைய வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள் 99 சதவீதம் இடம் பிடித்திருக்கிறது. ஒரு சதவீதம் படைப்புச் சுதந்திரத்திற்காகவும், திரைப்படத்திற்கான வடிவமைப்பிற்காகவும் இயக்குநர் பயன்படுத்தியிருக்கிறார். குறிப்பாகப் பாடல் காட்சிகளைச் சொல்லலாம்” என்றார்.

பாடலாசிரியர் மற்றும் வசனகர்த்தா மதுரகவி, ”மஞ்சள் வண்ண லாரியின்‌ மகத்தான சரித்திரம் தான் இந்தப் படத்தின் கதை. ‘கேஜிஎஃப்’ படத்தைப் போல் இது கமர்ஷியல் படமல்ல. நிஜ நாயகனைப் பற்றிய படம். வியாபாரமும், அரசியலும் ஆதிக்கம் செலுத்தும் இந்த மண்ணில், யதார்த்தமான வாழ்க்கையை முன்னிறுத்தி, குடும்ப உறவுகளுக்கான முக்கியத்துவத்தை மக்களிடம் சென்றடையச் செய்ய வேண்டும் எனும் நோக்கத்தில் இப்படம் உருவகியிருக்கிறது. இயக்குநரின் இந்த முயற்சிக்கு நான் தலை வணங்குகிறேன். படத்தில் இடம்பெறும் அனைத்துக் காட்சிகளிலும் மன நிறைவுடன் பணியாற்றிருக்கிறோம். இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்பில் பணியாற்றும்போது படக் குழுவினர் எனக்கு முழுமையான சுதந்திரத்தை வழங்கினார்கள்.

படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பெற்றிருக்கிறது. பாடல்கள் காட்சிகளுக்கு இடையேயான திணிப்பாக இல்லாமல், இயல்பாக இடம் பெற்று இருக்கிறது. இன்று கடைக்கோடியில் வாழும் பாமர மனிதனுக்கு ஏராளமான பிரச்சனைகள் இருக்கின்றன. வாழ்க்கையில் எப்படி ஜெயிப்பது என்று தெரியாமல், தன்னம்பிக்கை இழந்திருப்பவர்களுக்கு இந்தப் படம் மிகப் பெரிய முன்னுதாரணமாக இருக்கும். வாழ்க்கையின் அடித்தளத்திலிருந்து ஒருவர் எப்படி வென்றார் என்பதை நான்கு தலைமுறைகளைச் சம்பந்தப்பட்ட கதையாகத் தயாராகியிருக்கிறது. நான்கு தலைமுறைகளின் வாழ்க்கையையும் இந்தப் படத்தில் சரியாக பதிவு செய்திருக்கிறார்கள். வாழ்க்கையில் வெற்றி பெற நினைப்பவர்களுக்கு இந்தப் படத்தில் நிறைய செய்திகள் இருக்கிறது” என்றார்.