
தனக்குச் சாதகமான விஷயத்தை மற்றவர்கள் செய்ய வேண்டும் என்று நினைப்பது இயல்பு. ஆனால் உளவியல் ரீதியாக மாற்றத்தை ஏற்படுத்தி மற்றவர்களைத் தனக்கான விஷயங்களைச் செய்ய வைப்பது நிச்சயமாக ஆச்சரியமான சங்கதிதான். அப்படியான ஆச்சரியம் ஒன்றை லைஃப் கோச்சராக இருக்கும் நாயகன் வி செய்கிறார். அந்தச் செய்கையின் விளைவு என்ன என்பதை விஷமக்காரனில் காணலாம்.
மனரீதியாக மற்றவர்களுக்கு தைரியம் கொடுக்கும் நாயகன் வி, தன் மனைவியும், தன் காதலியும் ஒருசேர தனக்கு வேண்டும் என்று நினைக்கிறார். அதனால் ஏற்படும் தரமான சம்பவங்களை சுவராசியமாகச் சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர்.
இயக்குநர் வி தான் படத்தின் நாயகனும். சிற்சில இடங்களில் மட்டுமே பாஸ்மார்க் வாங்குகிறார். நாயகிகளில் அனிகா விக்ரமன் நிறைய இடங்களில் கவனிக்க வைக்கிறார். மற்றொரு நாயகியான சைதன்யா ரெட்டி நடிப்பு ஓகே ரகம். படத்தில் இந்த மூவர் மட்டுமே பிரதான பாத்திரங்கள்.
பின்னணி இசை பாடல்கள் பெரிதாகக் கவனம் ஈர்க்காததைப் போலவே ஒளிப்பதிவும் நம் கண்களை குளிர வைக்கவில்லை. மிகச் சிறிய ஐடியாவை மிகப் பெரியதாக காட்டுவது தான் சினிமாவின் மேஜிக். அதை மொத்தமாக மறந்துவிட்ட மெத்தனம் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. கூறியது கூறல் என்ற குற்றம் படம் நெடுக இருக்கிறது.
சந்தேகப்படும் மனைவி, சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தாத காதலி, இவற்றை எல்லாமே ஒரு பிளானோடு செய்யும் கணவன் என இந்தச் சின்ன கிரவுண்டில் எத்தனையோ ஜாம்பவான்கள் காமெடியாலும் கலகலப்பாலும் செஞ்சுரி அடித்திருக்கிறார்கள். ஆனால் வி களம் கிடைத்தும் பலம் இல்லாத திரைக்கதையால் சிங்கள் ஷாட்டிலே மேட்சை முடித்திருக்கிறார்.
காட்சிமொழியின் துணையாக வசனங்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற புரிதலின்றி எழுதப்பட்ட ஆங்கிலம் தமிழ் கலந்த வசனங்கள், நம்மை ஏகத்திற்கும் சலிப்படைய வைத்துவிட்டன. காரியம் செய்வதில் குறியாக நாயகனுக்கு இயக்குநர் சாமர்த்தியத்தையும் சொல்லிக் கொடுத்து இயக்கியிருந்தால் விஷமக்காரன் வசியக்காரனாக மாறியிருப்பான்.
– ஜெகன் கவிராஜ்