Shadow

விஸ்வாசம் விமர்சனம்

viswasam-movie-review-2

எவருக்கு எவர் மீது விசுவாசம் எனத் தெரியவில்லை. நான்காவது முறையாகத் தொடர்ந்து இணைகின்றனர் இயக்குநர் சிவாவும், அஜித்குமாரும்.

தனது மனைவி நிரஞ்சனா சொன்ன ஒரு வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, 10 வருடங்களாக தன் மனைவியையும் குழந்தையையும் பிரிந்து வாழ்கிறார் தூக்குதுரை. மகளின் உயிருக்கு ஆபத்தெனத் தெரிந்து, அதிலிருந்து மகள் ஸ்வேதாவைப் பாதுகாக்க களமிறங்குகிறார் தூக்குதுரை. ஸ்வேதாவிற்கு யாரால் ஏன் ஆபத்து என்பதும், அதிலிருந்து எப்படி தன் மகளை மீட்கிறார் என்பதும்தான் படத்தின் கதை.

வீரம் படத்தின் 2.0 என்றே சொல்லவேண்டும். வேஷ்டி சட்டையும், வெண் தாடி முடியும், இரண்டு படத்தின் அஜித்தின் உருவ அமைப்பிற்குப் பொருந்துவது மட்டுமல்லாமல், சொந்த ஊரில் அலப்பறையைக் கூட்டும் முதல் பாதி, நாயகியின் ஊரில் வில்லனிடமிருந்து மகளைக் காப்பாற்றும் இரண்டாம் பாதி என கதையிலும் பெரிய மாற்றமில்லை. ஆனால், வீரம் படத்தில் சந்தானத்துடன் இணைந்து அண்ணன் தம்பிகளின் அந்த அலப்பறை ரசிக்கும்படி இருந்தது. இந்தப் படத்தில், அஜித்தைக் காமிக்கலாகக் காட்டுவது அவ்வளவாக ஈர்க்கவில்லை. தம்பி ராமையாவுடனும், ரோபோ சங்கருடனும் அஜித் செய்யும் அந்த வம்படியான நகைச்சுவைக் காட்சிகள் கோர்வையாக இல்லாமல் மாஸ் படத்திற்கான சீரியஸ்னஸைக் குறைத்து விடுகிறது.

ஒரு காட்சியில், மகளைக் காப்பாற்ற மழையில் பைக் ஓட்டிக் கொண்டு வருகிறார். அந்தச் சண்டைக் காட்சியில் இருந்து படம் சீரியஸ்னஸைப் பெறுகிறது. மாஸ் படத்திற்குரிய விறுவிறுப்பும் அங்கு தான் தொடங்குகிறது. பேட்ட போல் எந்த உயிர் சேதமும் இல்லாமல் படம் சுபமாய் முடிகிறது. இரண்டாம் பாதியில், கேமியோ ரோல் போல் விவேக் சில காட்சிகளில் தோன்றி ரசிக்க வைக்கிறார். அவரது போர்ஷனும், கோவை சரளா போர்ஷனும் முழுமையாக முடிக்கப்படவில்லை. வில்லனாக வரும் ஜகபதி பாபுவைக் கச்சிதமான அளவில் பயன்படுத்தியுள்ளது சிறப்பு.

நிரஞ்சனாவாக நயன்தாரா. அழகாய்ப் பாந்தமாய்க் கோபத்தை உதட்டில் தேக்கி, தனது வெற்றிப் பயணத்தை இப்படத்திலும் தொடர்கிறார். ஒரு தாயாய், மகளின் நலனில் அக்கறை கொண்டு ஒரு முடிவு எடுக்கிறார். குழந்தைகள் தங்கள் பெற்றோர்களின் செய்கைகளில் இருந்து எப்படித் தங்களைத் தகவமைத்துக் கொள்கிறார்கள் எனப் படம் அழுத்தமாகப் பதிகிறது. ’18 வயசு மிகாத குழந்தைகளின் தற்கொலைகள், பெற்றோர்கள் செய்யும் கொலைகளே!’ என்ற அஜித்தின் வசனத்தோடு படம் முடிகிறது. பெயர் போடும் பொழுது, வெற்றியின் ஒளிப்பதிவில் பறவைக் கோணத்தில் காட்டப்படும் தேனி பக்க வயல்வெளிகள் அழகோ அழகு.

விஸ்வாசத்தை அழகாக்குவது ஸ்வேதாவாக வரும் அனிகா தான். ‘என்னை அறிந்தால்..’ படத்திற்குப் பிறகு, அஜித்தின் மகளாக மீண்டும் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் வரும் காட்சிகள் அனைத்துமே அட்டகாசம். முதற்பாதியில் அஜித்தின் காமெடி, டான்ஸ், ரொமான்ஸ் என அனைத்தும் ஒப்பேத்தல் ரகமாக இருக்க, தன்னை அங்கிள் எனக் கூப்பிடும் அனிகாவைப் பாசத்துடன் பார்ப்பது, பேசுவது, ஊக்கமளிப்பது என அஜித் ஓர் ஆத்மார்த்தமான தந்தையாகத் திரையில் வலம் வருகிறார். படத்தின் முடிவில், ஒரு நெகிழ்ச்சியான நிறைவு ஏற்படுகிறது. இந்த இருவருக்குள் ஏற்படும் பாசமும் பிணைப்பும் தான் விஸ்வாசம்.