Shadow

“ஓவர் ஆக்டிங்கைக் குறைத்துக் கொள்கிறேன்” – ‘தெய்வ மச்சான்’ தீபா ஷங்கர்

உதய் புரொடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயகுமார், கீதா உதயகுமார் மற்றும் எம். பி. வீரமணி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘தெய்வ மச்சான்’. அறிமுக இயக்குநர் மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தில் விமல், பாண்டியராஜன் ‘ஆடுகளம்’ நரேன், பால சரவணன், அனிதா சம்பத், வத்சன் வீரமணி, தீபா சங்கர், கிச்சா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கேமில் ஜெ அலெக்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு காட்வின் ஜெ. கோடன் இசையமைத்திருக்கிறார். இப்படத்திற்குப் பின்னணி இசை அஜீஸ் கவனித்திருக்கிறார். இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. இந்தத் திரைப்படத்தை பிவிஆர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

ஏப்ரல் 21ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னை கமலா திரையரங்க வளாகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அச்சந்திப்பில், படத்தின் தயாரிப்பாளர்கள் உதயகுமார், வத்சன் வீரமணி, நாயகன் விமல், நடிகர் பாண்டியராஜன், நடிகை அனிதா சம்பத், நடிகை தீபா சங்கர், நடிகர் கிச்சா ரவி, பாடலாசிரியர் அருண் பாரதி, படத்தொகுப்பாளர் இளையராஜா, இயக்குநர் மார்ட்டின் நிர்மல்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் வத்சன் வீரமணி, ”நானும், இயக்குநர் மார்ட்டின் நிர்மல் குமாரும் நாளைய இயக்குநர் தருணத்திலிருந்து தொடர்ந்து பயணிக்கிறோம். குறும்படங்களுக்காக நிறைய விருதுகளை வாங்கி இருக்கிறோம். திரைப்படத்தில் இணைய வேண்டும் என எதிர்பார்த்தோம். பல தடைகளைக் கடந்து ‘தெய்வ மச்சான்’ படத்தில் இணைந்திருக்கிறோம். இதற்காக இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜனுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். கொரோனாவிற்கு பிறகு இந்தப் படத்தைத் தயாரிக்கலாம் என்ற முடிவிற்கு வந்தேன். தொடங்கிய தருணத்திலேயே, இதனைத் தொடர்ந்து நான் மட்டும் தனியாக சுமக்க இயலாது என்பதனை உணர்ந்து, உடனடியாக நண்பரான உதயகுமார் அவர்களைச் சந்தித்து நிலையை விளக்கினேன். அவர் கதையைக் கேட்டவுடன், ‘சரி தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம்’ என வாக்குறுதி அளித்தார். ‘விலங்கு’ இணைய தொடரின் படப்பிடிப்புத் தளத்தில் விமலை நேரில் சந்தித்து இந்தக் கதையைக் கூறினோம். அவருக்குப் பிடித்துப் போனது.

நவம்பர் மாதம் திண்டுக்கல் அருகே உள்ள ஐயம்பாளையம் என்ற இடத்தில் படப்பிடிப்பு நடத்தினோம். எங்களுடைய குழுவினருக்கு உள்ளூர் மக்கள் பேராதரவு அளித்தனர். அந்த மக்களுக்கு இந்தத் தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அனிதா சம்பத் அவர்களைக் கடைசித் தருணத்தில் ஒப்பந்தம் செய்தோம். ஆனால் எதிர்பார்த்ததை விட அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை வழங்கி எங்களை ஆச்சரியப்படுத்தினார். நடிகர்களும் தொழில்நுட்பக் குழுவினரும் தங்களின் முழுமையான பங்களிப்பை வழங்கினர்” என்றார்.

நடிகை தீபா சங்கர், ”’சொப்பன சுந்தரி’ படத்தில் நான் ஓவர் ஆக்டிங் செய்திருப்பதாக விமர்சனத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள். நான் குறைத்து நடிக்க முயற்சிக்கிறேன். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். பாண்டியராஜனுடன் நடித்த அனுபவம் மறக்க இயலாது. நான் சின்ன வயதில் இருந்த போது பாண்டியராஜன் திரையில் தோன்றி பாடிய ‘காதல் கசக்குதையா..’ என்ற பாடலைப் பார்த்து ரசித்தேன். அந்தக் காலகட்டத்தில் நாங்கள் பார்த்து ரசித்த கதாநாயகர்களுள் பாண்டியராஜனும் ஒருவர். இந்தப் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருக்கிறேன். இந்தத் திரைப்படத்தில் விமல் நீண்ட நாட்களுக்குப் பிறகு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்” என்றார்.

அனிதா சம்பத், ”இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே போல் படத்திற்கும் பேராதரவு கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். இந்தத் திரைப்படத்தில் விமலுக்கு தங்கையாக நடித்திருக்கிறேன். இந்தத் திரைப்படத்தில் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் தேவையான முக்கியத்துவத்தை இயக்குநர் மார்ட்டின் வழங்கி இருக்கிறார்” என்றார்.