
உதய் புரொடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயகுமார், கீதா உதயகுமார் மற்றும் எம். பி. வீரமணி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘தெய்வ மச்சான்’. அறிமுக இயக்குநர் மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தில் விமல், பாண்டியராஜன் ‘ஆடுகளம்’ நரேன், பால சரவணன், அனிதா சம்பத், வத்சன் வீரமணி, தீபா சங்கர், கிச்சா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கேமில் ஜெ அலெக்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு காட்வின் ஜெ. கோடன் இசையமைத்திருக்கிறார். இப்படத்திற்குப் பின்னணி இசை அஜீஸ் கவனித்திருக்கிறார். இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. இந்தத் திரைப்படத்தை பிவிஆர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.
ஏப்ரல் 21ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னை கமலா திரையரங்க வளாகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அச்சந்திப்பில், படத்தின் தயாரிப்பாளர்கள் உதயகுமார், வத்சன் வீரமணி, நாயகன் விமல், நடிகர் பாண்டியராஜன், நடிகை அனிதா சம்பத், நடிகை தீபா சங்கர், நடிகர் கிச்சா ரவி, பாடலாசிரியர் அருண் பாரதி, படத்தொகுப்பாளர் இளையராஜா, இயக்குநர் மார்ட்டின் நிர்மல்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இயக்குநர் மார்ட்டின் நிர்மல் குமார், ”இந்தக் கதை மீது நம்பிக்கை வைத்து, எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர்கள் உதயகுமார் மற்றும் வத்சனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர் நடிகைகளும், தொழில்நுட்பக் கலைஞர்களும் என்னுடைய எதிர்பார்ப்பைப் பூர்த்திச் செய்து, தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கியதற்காக இந்தத் தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தின் கதைக்குப் பொருத்தம் என்பதால் ‘தெய்வ மச்சான்’ எனப் பெயர் சூட்டி இருக்கிறோம்” என்றார்.
நாயகன் விமல், ”தெய்வ மச்சான் முழு நீள நகைச்சுவை படம். பாண்டியராஜனுடன் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம். 1997- 98 ஆம் ஆண்டு வாக்கில் நான் சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, பாண்டியராஜன், ஒரு வாகனத்தில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தார். அப்போது உணவருந்த கூட நேரமில்லாமல் பரபரப்பாக இயங்கக்கூடிய நட்சத்திர நடிகர் என்றும், இவரைப் போல் நாமும் ஒரு நாள் வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போதே உணவருந்த வேண்டும் என்ற ஆசையும் ஏற்பட்டது. ஆண்டவன் புண்ணியத்தில் நடிகராகி அதே போல் வாகனத்தில் பயணிக்கும் போது உணவருந்தும் வாய்ப்பும் கிடைத்தது.
இந்தத் திரைப்படத்தில் எனக்கு தங்கையாக அனிதா சம்பத் நடித்திருக்கிறார். தீபா அக்காவும், கிச்சா ரவியும் கணவன் மனைவியாக நடித்திருக்கிறார்கள். வில்லனாக ஆடுகளம் நரேன் நடித்திருக்கிறார். என்னுடைய நண்பனாக பால சரவணன் நடித்திருக்கிறார். ‘விலங்கு’ என்னும் இணையதொடருக்கு பிறகு மீண்டும் நாங்கள் இருவரும் இணைந்து நடித்திருக்கிறோம். ஆனால் இந்த படத்தில் நாங்கள் இருவரும் ஜாலியாக நடித்திருக்கிறோம்.
‘பூகம்பம்’ என்ற நாளைய இயக்குநர் போட்டியில் கலந்து கொண்ட ஒரு குறும்படத்தை எனக்குக் காண்பித்தனர். அந்தக் குறும்படம் காமெடியாக இருந்தது. ‘இதனை முழு நீள திரைப்படமாக உருவாக்குவதற்கு வேறு என்ன செய்யப் போகிறீர்கள்?’ என்று கேட்டவுடன், இயக்குநர் சில எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். அது சிறப்பாக இருந்தது.
வேல. ராமமூர்த்தி குதிரை மீது அமர்ந்து வேட்டைக்காரராக வருகை தந்து நாயகனான என் கனவில் சொல்வது எல்லாம் நடந்து விடும். அவர் கனவில் வந்து சொன்னவை எல்லாம் நடந்ததா இல்லையா என்பது தான் இப்படத்தின் கதை.
தயாரிப்பாளர் உதயகுமார் எப்போதும் சிரித்த முகம் தான். தமிழகம் முழுவதும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது, எங்களுடைய படப்பிடிப்பும் பாதிக்கப்பட்டது. அப்போது கூட எதைப் பற்றியும் கவலைப்படாமல் சிரித்தபடியே சூழலை எதிர்கொண்டார். அவருடைய நல்ல மனதிற்காக இந்தப் படம் வெற்றியடைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன்” என்றார்.