
மும்பையின் மத்தியில் இருக்கும் தாராவி எனும் சேரிப்பகுதி கரிகாலனின் கோட்டையாக விளங்குகிறது. அதைத் தரைமட்டமாகிக் கட்டடங்களாக்குவது தான் அரசியல்வாதி ஹரி தாதாவின் ‘ப்யூர் மும்பை’ திட்டத்தின் நோக்கம். சாமானிய மக்களின் பாதுகாவலனாக விளங்கும் காலாவிற்கும், மும்பையின் மொத்த அதிகாரத்தையும் கைக்குள் கொண்டுள்ள ஹரி தாதாவிற்கும் நடக்கும் போர் தான் ‘காலா’.
ஆம், படத்தின் இடைவேளையின் பொழுது போர் தொடங்குகிறது. தாராவியின் சிஸ்டம் ஸ்தம்பிக்கிறது. காலா, மக்களை ஒருங்கிணைத்து உள்ளிருப்புப் போராட்டம் நடத்துகின்றார். அதில் சமூக விரோதிகள் என்ட்டரியாகி விடுகின்றனர். மக்கள் போராட்டத்தைப் போலீஸார் அடாவடியாகக் கலைக்கின்றனர். கருப்பு மலர்கிறது. சுபம்.
பில்டப் அளவிற்கு, காலா பாத்திரத்தை வலுவானதாய்ச் சித்தரிக்காததோடு, பில்டப்பே இன்றி ஹரி தாதா பாத்திரத்தை மிக அழகாகச் செதுக்கியுள்ளார் ரஞ்சித். ஹரி தாதாவாய் நானா படேகர் பிரமாதப்படுத்தியுள்ளார். காலாவின் தந்தையான வேங்கையனைப் போட்டுத் தள்ளிய ரத்தம் தோய்ந்த அழகான அனிமேஷன் ஃப்ளாஷ்-பேக் ஒன்று அவருக்கு உள்ளது. அதிகாரத்தின் உச்சியைத் தொட்டு விட்ட ஒருவர் எப்படித் தன்னை ஒரு பகவானாகப் பாவித்துக் கொண்டு, அப்படியே மாறி விடுகிறார் என மிக அழகாகத் திரையில் காட்டியுள்ளார் நானா படேகர்.
சிஸ்டம் என்பது ஒற்றைப் பரிமாண வஸ்து இல்லை எனக் காலாவிற்குப் புரிய வைக்கிறார் ஹரி தாதா. ஆனால் அது புரியாமல், காலாவோ, ‘என்னைத் தொட்ட இல்ல? இனி பாரு’, என ஆவேசப்பட்டு தன் குடும்பத்தினர் சிலரை இழக்கிறார். மீண்டும் ஹரி தாதா வீட்டிற்குச் சென்று, ‘நான் துவண்டு போகலை. உன்னை விடமாட்டேன்’ எனச் சவால் விட்டு வருகிறார் காலா. ரஜினியிடமிருந்து பாட்ஷாவோ, போலீஸைச் சிதறவிடும் தளபதியோ, ஒத்த தலை ராவணனோ, சகுனியோ, சாணக்கியனோ, வீரனோ, சூரனோ என எவரொருவரும் எட்டிப் பார்ப்பதில்லை. பிரியமானவர்களை இழுந்து, பரிதாபமாய், மக்கள் சக்தியில் நம்பிக்கை கொண்டவராய்த் (!?) தனித்து விடப்படுகிறார். கையைப் பிசைந்து கொண்டு சவால் மட்டுமே விடும் சூப்பர் ஹீரோவாய் ரஜினியைப் பார்க்க நேர்வது காலக்கொடுமை.
‘ஆமான்டா, நான் ரெளடிதான்டா’ என்று சொல்லிக் கொள்ளும் காலா, ஒருவனை நடு ரோட்டில் வெட்டிச் சாய்க்கும் காலா, எந்தப் புள்ளியில் ‘உள்ளிருப்புப் போராட்டம்’ போன்ற போராட்ட முறையின் மீது நம்பிக்கை கொண்டவராக மாறினார் என்ற தெளிவில்லை. ‘உங்க தாத்தா வேங்கையனைக் கொன்னவனைப் பழிவாங்கணும்னு சுத்திட்டு இருந்தேன். என் செல்வி தான் என்னை மாத்தினா’ என்கிறார் ஒரு வசனத்தில். அந்த மாற்றம் எத்தகையது? ஒருவேளை அறவழி மாற்றம் என்றால், நடுரோட்டில் வைத்துக் கொலை செய்வது எதில் அடக்கம்?
சிஸ்டத்தை இயக்கும் மெயின் வில்லனுக்கு அறவழிப் போராட்டம், அப்கம்மிங் சாதா வில்லனுக்கு வன்முறை என்ற காலாவின் ‘முரண்’ படத்தின் மிகப்பெரிய பலவீனம். இப்படி முரணான தலைவன் வாய்க்கப்பட்டால் தாராவி சுடுகாடாகாமல் என்ன செய்யும்? பாவம் காலாவை நம்பிய மக்கள்! ஆனால், க்ளைமேக்ஸில் வண்ணமயமான மாற்றம் நிகழ்கிறது. ஒரு நம்பிக்கையைத் துளிர்க்கச் செய்யும் க்ளைமேக்ஸ் தான், எனினும் அதற்கு காலா எவ்வகையில் உறுதுணையாக இருந்தார் என்பது ரஞ்சித்திற்கே வெளிச்சம்.
‘நிலம் எங்கள் உரிமை’ என்பது தான் படத்தின் மையக்கரு. ஆனால் படம் அப்புள்ளியைத் தொட்டுள்ளதா என்பதே கேள்வி! இடைவேளைக்கு முன், நானா படேகரும் ரஜினியும் சந்திக்கும் காட்சி அதகளம். பாகுபலியின் இன்டர்வெல் காட்சிகள் தந்த தாக்கத்தின் அளவிற்குச் சிறப்பாக வந்துள்ளது. மையக்கரு அங்கே தான் வேர் விடுகிறது. ஆனால், அதன் முன்னும் பின்னும், குறிப்பாக இடைவேளைக்குப் பிறகு படம் ரொம்பவே அலைக்கழிக்கிறது. உதாரணத்திற்கு, ஆஃப்ரிக்க ரிட்டர்னான ஹுமா குரேஷிக்கு “மனு” பில்டர்ஸின் நோக்கம் புரியாமல் காலாவையே எதிர்க்கிறார். அவர், தன்னைப் பகவானாக நினைக்கும் நானா படேகரிடம் உதவி கோரிச் செல்கிறார். தன் காலைத் தொட்டு ஹுமா குரேஷி வணங்கவேண்டும் என எதிர்பார்க்கிறார் நானா படேகர். தனது கெளரவமும் கண்ணியமும் சீண்டப்படுவதாக நினைக்கும் ஹுமா குரேஷிக்கு, சமூக நீதி, கார்ப்ரேட் அரசியல், காவி அரசியல், அடிமை அரசியல் எனச் சகலமும் நொடியில் அவருக்குள் டவுண்லோடாகி காலா பக்கம் வந்து விடுகிறார். ஹுமா குரேஷியின் ஞான விழிப்பு, சிட்டி ரோபோ ஒரு புக்கை ஸ்கேன் செய்து தன் மெமரியில் ஏற்றிக் கொள்வதை விட செம ஃபாஸ்ட். இத்தகைய அவசர அரசியல் புரிதலுக்கு ரஞ்சித் கேரன்ட்டி.
ஆனால், ரஞ்சித்திற்குக் கணவன் – மனைவிக்குள்ளான காதலைத் திரையில் கொண்டு வருவதில் அசாத்திய ரசனை மிளிர்கிறது. ஈஸ்வரி ராவும், ரஜினியும் பேசிக் கொள்ளும் காட்சிகள் அட்டகாசம். கொஞ்சம் ஒட்டாமல் வந்தாலும், ‘வாடி என் தங்கச்சிலை’ பாடலில் தொனிக்கும் வாஞ்சை நன்றாக உள்ளது. நிறைய இடத்தில் ஒரு பாடலைத் தொடங்கிச் சட்டென முடிக்கிறார் சந்தோஷ் நாராயணன். முழுமையாக இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். ரஞ்சித், இந்த வகைமையில் ஒரு படத்தை எடுத்தால், அது “கலை”யாக மாறும் என்பது திண்ணம்.
ரஜினியின் மூத்த மகனாக நடித்திருக்கும் வத்திக்குச்சி நாயகன் திலீபனும், இன்னொரு மகன் லெனினாக நடித்திருக்கும் விக்ரம் வேதா மணிகண்டன், லெனினின் காதலி புயலாக நடித்திருக்கும் அஞ்சலி பாட்டில், காலாவின் மனைவி செல்வியாக நடித்திருக்கும் ஈஸ்வரி ராவ் ஆகியோர் ரஜினி எனும் வசீகரத்தையும் மீறிக் கவனிக்க வைக்கின்றனர்.
காலாவாக, கரிகாலனாக, ராவணனனாக ரஜினி. ராட்சஷனாய் மனிதர் பின்னியுள்ளார். சின்னச் சின்ன விஷயத்திலும், காவி அரசியலுக்கு எதிரான (!?) படமாய் காலாவைப் பார்த்துப் பார்த்து வடிவமைத்துள்ளார் ரஞ்சித். அதில் ரஜினி தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். ‘யார் இவரு?’ எனப் போதையில் அமைச்சர் சாயாஜி ஷிண்டேவைப் பார்த்துக் கேட்கும் காட்சி அதகளம். ஆனாலும், ‘நம்பியார் கூப்பிட்டதும், ஓடி வந்து, கை கட்டி நிப்பானே அந்தக் கபாலின்னு நினைச்சியாடா? கபாலிடா’ என அமர்க்களப்படுத்தவல்ல ரஜினியின் ஸ்டைலுக்குத் தீனி போடும் ஒரே ஒரு காட்சி கூடப் படத்தில் இல்லாதது குறை. ரஞ்சித்தின் முழுக் கைப்பாவையாய்த் தன்னை ஒப்படைத்துக் கொண்டு தனது ரசிகர்களுக்குத் துரோகம் இழைத்துள்ளார் ரஜினி. தான் அரசியலென நம்புவதனூடாகக் கபாலியில் ரஞ்சித் கொண்டு வந்த சின்ன கொண்டாட்டம் கூடக் காலாவில் சுத்தமாக மிஸ்ஸிங். படத்தின் இரண்டாம் பாதியின் திரைக்கதை மூலம் தனக்குத் தானே பெரும் துரோகம் இழைத்துக் கொண்டுள்ளார் ரஞ்சித்.