உச்ச நடிகரான பவர் ஸ்டாருக்கு, மதுரையில் அதி தீவிர ரசிகர்களாக சிம்மக்கல் சேகர், கோரிபாளையம் ரஹமத், பழங்காநத்தம் பாபு ஆகியோர் இருக்கிறார்கள். காவல்துறை அதிகாரி ஒருவரின் வழிகாட்டுதல்படி, ‘பாகுபலியும் பாயும்புலியும்’ என்ற பவர் ஸ்டாரின் படத்தை மதுரை ஏரியா வினியோகத்திற்கு எடுத்து ஓட்டாண்டி ஆகுகின்றனர். தன் உயிரினும் மேலான தலைவனைப் போய்ப் பார்க்கின்றனர். தலைவரோ உதாசீனப்படுத்தி விட, அவமானப்படுத்தப்படும் மூன்று ரசிகர்களின் எதிர்வினை தான் படத்தின் கதை.
‘பாட்ஷா’ பட ரஜினி பாணியில் அறிமுகமாகிறார் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன். பின் உச்ச நட்சத்திரங்கள் அனைவரையும் ‘ஸ்பூஃப்’ செய்யும் காட்சிகள் வருகிறது. தொடக்கத்தில் இப்படி எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும் படம் அதன் பின் தடுமாறத் தொடங்கி, அதையே கடைசி வரை செய்கிறது. ‘ராஜாதிராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ குலோத்துங்க..’ என நீளமான பெயர் தாங்கிய மருத்துவராக மன்சூர் அலி கான் வரும் பொழுது படம் மீண்டும் லேசாய்க் கலகலக்கத் தொடங்குகிறது.
சிம்மக்கல் சேகராக ஷிவா நடித்துள்ளார். தனி நாயகன் எனச் சொல்ல முடியாத பாத்திரம். ஏன் மற்ற இருவருக்குமே கூடச் சொல்லிக் கொள்ளும்படியான கதாபாத்திரத்தைக் கொடுக்கவில்லை இயக்குநர். பழங்காநத்தம் பாபுவாக வரும் சென்ட்ராயனும், அவரது தந்தையாக வரும் தவசியும் மனதில் கொஞ்சம் நிற்கிறார்கள். மற்ற இருவருக்கும் அந்த வாய்ப்புக் கிடைக்கலை. ஷிவா கூடப் பரவாயில்லை, கோரிபாளையம் ரஹமத்தாக வரும் அருண் பாலாஜிதான் பாவம். சேகரை உருகி உருகிக் காதலிக்கும் தேவியாக நைனா சர்வார் நடித்துள்ளார்.
படத்தைக் கலகலப்பாக்குவது சிங்கமுத்துதான். படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை வருகிறார். படத்தின் நாயகன் என்று கூடச் சொல்லலாம். என்ன நாயகியான நைனா சர்வார் கூடப் பாடல்காட்சிகள் மட்டும் இல்லையே தவிர, மற்றபடி சிங்கமுத்து தான் படத்தை நகர்த்தும் பிரதான பாத்திரமாக உள்ளார். சிங்கமுத்து ஜோடியாக ‘ஜாங்கிரி’ மதுமிதா தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பரிபூரணமாக உபயோகித்து, படத்தின் கலகலப்பிற்கு உதவியுள்ளார்.
தலைவனை நம்பி கைக்காசை எல்லாம் இழக்கும் ரசிகர்களை படம் சாடுகிறதா, ரசிகர்களை உபயோகித்துக் கொள்ளும் ஸ்டார் நடிகரை படம் சாடுகிறதா, வினியோகஸ்தர்களின் இழப்பை ஸ்டார் நடிகர் ஏற்றுக் கொள்ளமாறு சொல்கிறதா என எதுவும் சரி வரப் புரியவில்லை. க்ளைமேக்ஸில், தடாலடியாககள்ளப் பணத்தை நல்லது செய்ய உபயோகப்படுத்த வேண்டும் என நீதியைச் சொல்லி விடுகிறார் இயக்குநர் திரைவண்ணன்.
முழுப் படம் தந்த அலுப்பை, கடைசி மூன்று நிமிடங்களில், ஷிவா ஃபோனில் நாயகியுடன் பேசும் காட்சி வழங்கி விடுகிறது.