
“ஏய் அகிலாண்டேஸ்வரீ.. இன்னும் என்னடீ பண்றவ, நேரங்காலமா இஸ்கூலுக்குப் போய்ச்சேர வேண்டாமா? ஊஞ்சிநேதக்காரி வந்துட்டா பாரு..”
வெளியில் இருந்து கத்திய அப்பாத்தாவின் குரலைப் பொருட்படுத்தாது தனது முகத்தில் அப்பிய அதிகப்படியான பவுடரை ரசம் தேய்ந்த கண்ணாடியில் பார்த்துச் சரி செய்து கொண்டிருந்தாள். மடித்து ரிப்பன் கட்டியிருந்த ரெட்டை ஜடைகளை இணைக்கும் விதமாய்க் குண்டுமல்லிச் சரமொன்றைத் தொடுத்திருந்தாள்.
அகிலாண்டேஸ்வரி என்றழைக்கப்பட்ட அகிலா அந்த வீட்டின் ஒரே பெண் வாரிசு. பெரியப்பா கண்ணைய்யனுக்கு இரண்டு ஆண் வாரிசுகள். சித்தப்பா செல்வராசுவிற்கு மூன்று ஆண் வாரிசுகள். கண்ணைய்யனுக்கும் பெண் வாரிசு வேண்டுமென்ற ஆசை இருந்தாலும் இரண்டோடு நிறுத்திக் கொண்டார். செல்வராசுவின் விடா முயற்சியும் பலனளிக்கவில்லை. பதினாறு வயசு அகிலாவிற்கு இரண்டரை வயதில் தம்பி.
பெரியப்பாவிற்கும் சித்தப்பாவிற்கும் அகிலா அப்படியொரு செல்லமென்றால் தகப்பன் கதிரேசனுக்கு மட்டும் எட்டிக்காயாகவே இருக்கிறாள். பொறந்தவுடன் அம்மாவை முழுங்கிட்டே பொறந்தா என்று எந்நேரமும் கரித்துக் கொட்டினாலும் அவளது தேவைகள் எதையும் நிறைவேற்றாமல் இல்லை. எது தேவையென்றாலும் அப்பாத்தா விடு தூதுதான். தகப்பனின் முகம் பார்த்துப் பேசக் கூட அஞ்சுவாள்.
ஒப்பனை முடிந்து வெளியில் வந்தவள், “அப்பாத்தா எத்தனை தடவை சொல்லுறது! அகிலாண்டேஸ்வரின்னு கூப்புடாதே! அகிலான்னு சொல்லுன்னு” என்று செல்லமாய்க் கடிந்து கொண்டே செருப்பை மாட்டிக்கொண்டு தோழி ராணியுடன் பள்ளிக்குக் கிளம்பினாள்.
வேலியைக் கடக்கும் வரை அவள் போவதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அப்பாத்தா ராமாயி, “குத்த வெச்சி மூணு வருஷம் ஆச்சி, இன்னும் அவள எவங்கைலயாச்சும் புடிச்சிக் கொடுக்கணும்னு அக்கறை இருக்கா பாரு! காலம் வேற கெட்டுக் கிடக்கு” என்று தனக்குத்தானே முணகிக் கொண்டாள்.
“ம்ம் அவ ஆத்தா இருந்திருந்தா காலாகாலத்துல கண்ணாலங்கட்டி வெச்சி பேரப்புள்ள பாத்திருப்பா” என்று தனக்குத்தானே சமாதானமும் சொல்லிக் கொண்டாள்.
தூரத்தில் மகன் கதிரேசுவும், பெரியவன் மவன் சுப்புரமணியும் சைக்கிளில் வருவதை கண்களை இடுக்கிக் கொண்டு பார்த்தவள், ”வரட்டும் இன்னிக்கு எப்பிடியாவது அகிலா கண்ணாலப் பேச்சை எடுத்துட வேண்டியதுதான்” என்று முடிவெடுத்தாள்.
– நாமக்கல் சிபி