Shadow

அவள் பெயர் அபிராமி – 2

முடிவு செய்து வைத்தபடியே கதிரேசு வீட்டிற்குள் வந்ததும் வராததுமாய் ஆரம்பித்து வைத்தாள் ராமாயி.

“எலே கதிரேசு! அகிலாண்டேஸ்வரிக்கு வயசாயிகிட்டே போகுது! சீக்கிரமா ஒரு கண்ணாலத்தைப் பண்ணிப் பாக்கோணும்னு இல்லாம இப்படிக் கிணத்துல போட்ட கல்லு கணக்கா இருந்தா எப்படி?”

தாழியில் இருந்த தண்ணீரை இரு கைகளால் அள்ளி முகம் கழுவிக் கொண்டிருந்த கதிரேசு நிமிர்ந்து ராமாயியை ஒரு கணம் கூர்ந்து நோக்கினான்.

“ஆத்தா! இப்ப அவளுக்கு என்ன வயசாயிட்டு! இப்பதானே பன்னெண்டாப்புப் போறா! கண்ணால பேச்செடுத்தா கலெக்ட்டர் வரைக்கும் வந்து நிப்பானுக! கம்பிதான் எண்ணனும்!”

“போடா! போக்கத்த பயலுவ! அவனுகளுக்கென்ன தெரியும் பொம்பள புள்ளய பெத்து வெச்சிருக்குறவனோட கஷ்டம்! நம்ம பொண்ணுக்கு எதையெதை எப்ப பண்ணனும்னு நமக்குத் தெரியாதா?”

“அப்பாத்தா! சித்தப்பூவை உள்ள தள்ளாம விட மாட்டே போல” கேலியாகச் சிரித்துக் கொண்டே கேட்டான் சுப்ரமணி.

வெளித் திண்ணையில் சம்மணம் போட்டு அமர்ந்தவாறே, “சித்தப்பா! அப்பாத்தா பேச்சைக் கேட்டு அவசரபட்டு வர்றவன் போறவன் எவனுக்காவது கட்டி வெச்சிடாதீங்க. பொறுமையா நல்ல இடமா பார்க்கலாம்” என்றான்.

“எதுக்கு அந்தா இந்தான்னு பையனைத் தேடணும்! அவளுக்குன்னே வளர்ந்திருக்கனே எம்மச்சான் மவன் மருது” என்றான் கதிரேசு.

“எலே! அந்தக் கூறு கெட்ட பயலுக்கா அகிலாண்டேஸ்வரிய தரப்போறே! அதுக்குப் பதிலா பாழுங் கிணத்துல தள்ளீடலாம், மச்சான் மவனாம்! அவன் ஆளும் அவன் பொழப்பும்” என்று குரலை உயர்த்திக் கடிந்து கொண்டாள் ராமாயி.

“உம்பொஞ்சாதி இருந்திருந்தா பொடனிலேயே ரெண்டு போட்டிருப்பா! மவராசி! புள்ளைய வளர்க்கக் கொடுப்பினை இல்லாம போயிச் சேர்ந்துட்டா. ஏலே! பார்த்துகிட்டே இரு! இவளுக்கு பட்டணத்துலேர்ந்து ஒரு நல்ல மாப்பிள்ளையாத்தான் வரப் போறான்!”

இவர்கள் பேசிக் கொண்டிருக்கையிலேயே வாசலருகே சமீபித்துக் கொண்டிருந்தான் பாலு! பெரிய வீட்டு எடு பிடி. சிவப்புத் துண்டுடன் லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு ஊருக்குள் சுற்றிக் கொண்டிருப்பவன்.

“கதிரேசு! விஷயம் தெரியுமா! பெரிய வீட்டு கோயில்ல நோம்பி சாட்ட இந்த வருஷம் உத்தரவு கிடைச்சிடுச்சாம்! பதிமூணு வருஷத்துக்குப் பொறவு இந்த வருஷம்தான் நோம்பி சாட்டுறாங்க! ஒரே அமர்க்களமாகப் போவுதுலே!” என்று வாசலில் இருந்தே உற்சாகமாகக் கூவினான்!

– நாமக்கல் சிபி