Shadow

எஸ்.பி.ஆர். சங்கம்

இறந்த பின் எங்கு செல்கிறோம்? – 3

எஸ்.பி.ஆர். என்று பிரபலமாகிய இச்சங்கத்தினர் ஆவி உலக இடையீட்டாளர்கள் (Mediums) மூலமே தங்கள் ஆராய்ச்சிகளை நடத்தினார்கள். இந்தச் சங்கத்தின் முதல் தலைவராக இருந்த டாக்டர் மையர்ஸ் தான், இறந்த பின் தனது நண்பர் சேர்.ஒலிவர் லொட்ஸ் உடன் தொடர்பு கொள்வதாக வாக்களித்திருந்தார். அவ்வாறே தொடர்பு கொண்டு பயனுள்ள பல தகவல்களைக் கொடுத்தும் உதவினார்.

இறந்தவர்களுடைய ஆவிகள் இவ்வுலகில் உள்ள தங்கள் உறவினர்களுடன் “மீடியம்கள்” மூலம் தொடர்பு கொண்டு குடும்ப விவகாரங்கள் பற்றிய விடயங்களைக் கூறிய சந்தர்ப்பங்கள் ஏராளமாக உள்ளன. இறக்கும்பொழுது மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த ஆவல் காரணமாக தங்கள் ஆசைகளை வெளிப்படுத்துவதற்கு ஆவிகள் “மீடியம்” களை உபயோகிப்பதுண்டு.

பிலிப்ஸ் என்ற ஒரு ஆங்கிலேயரும் அவரது மனைவியும் 25 வருடங்களுக்கும் மேலாக செய்த தீவிர ஆராய்ச்சிக்குப் பின் “இறப்புக்குப்பின் வாழ்வு” என்ற ஒரு நூலை வெளியிட்டிருக்கின்றனர். பல ஆண்டுகளாக ஆவிகளுடன் தொடர்புக் கொள்ளும் அனுபவங்களையும், பல நாடுகளில் ஆவிகளோடு தொடர்பு வைத்துக் கொண்டிருப்பவர்கள் மறு உலகத்தைப் பற்றி என்ன கூறுகிறார்கள் என்பதைப் பற்றியும் பிலிப்ஸ் தம்பதியர் நூலில் விளக்கியுள்ளனர். அந்நூலில் அடங்கிய ஏராளமான தகவல்களில் முக்கியமானதொன்று, இலண்டனில் 19 -ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி.

இங்கிலாந்தில் முதன்முறையாக புகைக்கூண்டுகளின் உந்து சக்தியைக்கொண்டு பறக்கவிடப்பட்ட ஆகாய விமானம் திசைத் தப்பிப் போய் எங்கோ விழுந்து நொருங்கிவிட்டது. அதில் சென்ற தலைமைப் பொறியியலாளரின் ஆவி.. எவ்வாறு இலண்டனில் உள்ள விமானக் கம்பெனியின் மேலதிகாரியையும் ஒரு பிரபல அரசியல்வாதியையும் மீடியம் மூலமாகத் தொடர்புக் கொண்டு விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறுகளைப் பற்றித்தெரிவித்தது என்பதே அது.

இந்நூலில் கூறப்பட்ட இன்னொரு சுவராசியமான சம்பவம்.. மார்க் என்னும் ஒரு பத்திரிகை நிருபர் பற்றியது. இவர் இலண்டனில் ஆவிகளுடன் தொடர்புக் கொள்ளும் ஒரு குழுவில் உறுப்பினராக இருந்தார். வழக்கம் போல் ஒரு இரவு, இக்குழு ஆவிகளுடன் தொடர்பு ஏற்படுத்திப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு ஆவி, “உனக்கு யுத்த முனையில் நிருபராக கடமையாற்றும்படி அழைப்பு வரும். போகாதே” என்று மார்க்கை எச்சரித்தது. யுத்த முனையில் கடமையாற்ற வேண்டும் என்ற துடிப்பும் ஆர்வமும் கொண்ட மார்க் அழைப்புக் கிடைத்தவுடன் ஆவியின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாது யுத்த முனைக்குச் சென்று விட்டார். சில நாட்களுக்குப் பின்னர் மார்க் உறுப்பினராக இருந்த குழு, ஆவிகளுடன் தொடர்புக் கொண்டு பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஆவி உலகில் இருந்து மார்க்கினுடைய ஆவி பேசியது.

“இங்குள்ள எனது வழிகாட்டி நண்பரின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாது யுத்த முனைக்குச் சென்றேன். அங்கு கடமையில் ஈடுபட்டிருக்கும் பொழுது யாருக்கோ குறிவைத்து குண்டு ஒன்று எனது நெஞ்சில் பாய்ந்து விட்டது. மறுகணம் எனது உடலையே நான் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். பின்னர் எப்படியோ இங்கு வந்து சேர்ந்து விட்டேன்” என்றது அது.

இந்தியாவின் முன்னணி விடுதலைத் தலைவரும் முன்னாள் உணவு அமைச்சருமாகிய கே.எம்.முன்ஷி ஆவி உலகத் தொடர்பில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.

இவரின் சுவாரசியமான ஆய்வின் விபரங்களை அடுத்துப் பார்க்கலாம்.

Leave a Reply