Shadow

ஏழாம் அறிவு விமர்சனம்

ஏழாம் அறிவு விமர்சனம்

ஏழாம் அறிவு– ஆறு வருடங்களுக்குப் பிறகு தமிழில் படம் இயக்கியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். கஜினி திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணைகிறார்; கமலின் மகள் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கிறார் என்று எதிர்பார்ப்புகளை ஏகத்திற்கு வளர்த்து, கர வருடத்தின் ஐப்பசி 9ஆம் தேதி அன்று வந்த தீபாவளி திருநாளில் வெளியிடப்பட்டது. ஆறாவது அறிவினும் உயர்ந்த அறிவு என தலைப்பைப் பொருள் கொள்ளலாம்.

தனது குருமாதாவால் பணிக்கப்படும் போதி தர்மர் சைனாவில் பரவும் தொற்று நோயைத் தடுக்க பல்லவ நாட்டின் தலைநகரமான காஞ்சியில் இருந்து புறப்படுகிறார். குருமாதாவின் கட்டளையை நிறைவேற்றியதோடு மட்டுமல்லாமல் அங்குள்ள மக்களுக்கு தற்காப்புக் கலையையும் பயிற்றுவித்து, அம்மக்களுக்காகவே இறக்கிறார். 1598 வருடங்களுக்குப் பிறகு அவரது மரபணு அமைப்பை இணையத்தில் காணும் சுபா ஸ்ரீனிவாசன், போதி தர்மரின் வாரிசுகள் எவரேனும் காஞ்சியில் வாழக் கூடும் என தன் ஆராய்ச்சியைத் தொடங்குகிறார்.  அரவிந்த் என்பவரின் மரபனுவின் அமைப்பு போதிதர்மரின் மரபணு அமைப்போடு 83.74% பொருந்துகிறது. ஆறாம் நூற்றாண்டில் சைனாவில் பரவியத் தொற்று நோயை இந்தியாவில் பரவ வைக்க சைனாவில் இருந்து டோங் லீ என்பவர் சென்னை வந்திறங்குகிறார். சுபா அரவிந்த்தின் மரபணுவைத் தூண்டி போதி தர்மரின் திறமைகளை எழ வைத்து விட்டால், அரவிந்த் தொற்று நோயிற்கு மருந்து கண்டுபிடித்து விடுவார். அதனால் டோங் லீ இருவரையும் கொல்ல முயல்கிறார். அரவிந்த் எப்படித் தன்னையும், தொற்று நோயால் பீடிக்கப்படும் மக்களையும் காப்பாற்றுகிறார் என்பதுடன் படம் நிறைவுறுகிறது.

பல்லவ இளவலாய் இருந்து போதி தர்மர் ஆக உருமாறும் சூர்யா அசத்துகிறார். இந்தப் பாத்திரத்தில் வேறு எவரேனையும் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாத அளவு மிக நேர்த்தியாய்ப் பொருந்துகிறார். அரவிந்தாக வரும் சூர்யா முன்பே அயன், ஆதவன் போன்ற படங்கள் மூலம் நமக்கு பழக்கப்பட்டவர் தான். சாதாரண மனிதராக நந்தா படத்திலேயே உணவில் கலந்த நஞ்சினைக் கண்டுபிடிக்கும் வல்லமை பெற்ற சூர்யா, மகா யோகி போதி தர்மராக இருக்கும் பொழுது கண்டுபிடிப்பது ஆச்சரியம் அளிக்கவில்லை. முன்பே பாடகராகவும், உன்னைப் போல் ஒருவன் படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் ஸ்ருதி ஹாசன். எனினும் நடிகையாக கமலின் மகள் என்ற அடையாளத்தைத் தொலைக்க நாளாகும் என்றே தோன்றுகிறது. அபூர்வமாய் நாயகிகள் தமிழ்ப் படங்களில் சொந்தக் குரலில் தமிழ் பேசுவார்கள். அந்த அபூர்வத்தை ஸ்ருதி ஹாசன் நிகழ்த்தியுள்ளார். ஸ்ருதி ஹாசனின் உச்சரிப்பு சென்னையில் பயிலும் மேல்தட்டு மாணவிகளின் உச்சரிப்பு போல் இயல்பாய் பொருந்துகிறது. ஆனால் ஸ்ரீனிவாசன் என்பவர் சித்த வைத்தியராக இல்லாமல் இருந்திருக்கலாம்.

நாளுக்கு நாள் உயரும் தமிழ்ப் படங்களின் தரம் சற்று கலக்கத்தை ஏற்படுத்த செய்கிறது. பாரம்பரிய தமிழ்ப் படத்தின் நாயகி, நாயகனின் திறமையை நாயகனுக்குள் தேடச் சொல்லி ஊக்குவிப்பர். ஆனால் இப்படத்தில் நாயகி நாயகனின் திறமையை நாயகனது மூதாதையர்களிடம் இருந்து கொணர்கிறார். அதெப்படி சாத்தியம் என எவருக்கேனும் கேள்வி தோன்றினால், உலகத் தரத்திற்கு தமிழ்ப் படங்களை இட்டு செல்லும் உன்னத முயற்சியில் இருக்கும் ஏ.ஆர்.முருகதாசின் படம் இது என்ற உண்மை நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் புலப்படும்.  சரி இத்தகைய கற்பனைகள்/புனைவுகள் படைப்பிற்கான அழகு என நாம் சமாதானம் செய்து கொண்டாலும், புத்தருக்கு நிகராக போதி தர்மரைத் தூக்கி தொப்பென்று கீழே போட்டு மிதிப்பதைச் சீரணிக்க முடியவில்லை. பெளத்த சமயத்தின் கொள்கைகளில் ஒன்றான கொல்லாமையைப் பற்றி ஏழாம் அறிவுப் படத்தில் வரும் போதி தர்மருக்கு, அதாவது படத்தின் இயக்குநருக்கு தெரியாதது வருத்தமளிக்கின்ற சங்கதி. தன் உயிரை மாய்த்துக் கொள்கின்ற உரிமையை போதி தர்மர் தனக்கு அளித்துக் கொண்டதும் நகைப்பிற்குரியது. பெளத்தம் தற்கொலையை அக ஒளி (Enlightenment) பெறுவதில் இருந்து தடுக்கும் காரணியாகவே பார்க்கிறது. தமிழரான போதி தர்மரை ஏ.ஆர். முருகதாஸ் கொல்லாமையில் நம்பிக்கையற்ற சில சிங்களப் பிக்குகள் போல் உருவகப்படுத்தி இருப்பது அநியாயம்.

நோக்கு வர்மம் என்ற கலை இங்கிருந்து சென்று ‘ஹிப்னாட்டிசம்’ ஆக உருமாறியதாகப் படத்தில் சொல்லப்படுகிறது. நோக்கு வர்மத்தை ஹிப்னாட்டிசம் என்று சுருக்குவது பெரும் அபத்தம். வசியக்கலையுடன் வேண்டுமானால் ஒப்பிடலாம். நோக்கு வர்மம் என்பது கற்பனைக்கும் எட்டாத அதி பயங்கர தாக்குதல் முறை. இந்தியன் படத்தில் சேனாபதி விரல்களால் ‘படு வர்மம்’ என்ற தாக்குதல் முறையை உபயோகித்து எதிராளியை முடுக்குவார். அதே போன்று தாக்குதலை, கண்களால் மட்டுமே எதிரியின் வர்மப் புள்ளிகளை உற்று நோக்கி எதிராளியை முடக்குவது நோக்கு வர்மம். முடக்குவதோடு மட்டுமல்லாமல் கொல்லவும் செய்யலாம். ஏழாம் அறிவு படத்தில் ‘நோக்கு வர்மம்’ பயன்படுத்தப்படவே இல்லை. ஒருவரை வசியம் செய்து அவரைக் கொண்டு மற்றவர்களைத் தாக்குவது ஆங்கில சித்திரப்படங்களில் வரும் ஹிப்னாட்டிஸ்ட்களின் பாணி. பஞ்ச பூதங்களை அடக்கி ஆளும் சித்தியான வசித்துவத்தில் வல்லவர் என போதி தர்மரைப் பற்றிச் சொல்கின்றனர். வசித்துவம் என்பது தன்னைக் கண்டவர் அனைவரையும் தன் வயப்படுத்துவதாகும். அதை தான் நோக்கு வர்மம் என்று படத்தில் மாற்றிச் சொல்லியுள்ளார்கள். தமிழர்களின் வரலாறு, விஞ்ஞான அறிவு அது இதெனப் பேசி விட்டு, அதைப் பற்றிய போதிய தேடல்கள் இல்லாமல் மேம்போக்காகப் பதிந்துள்ளனர். மற்ற நாடுகள் காட்டுமிராண்டித்தனத்தோடு இருக்கும் பொழுது எனத் தொடங்கி பல்லவ நாட்டின் சிறப்புகளைப் பற்றிச் சொல்கின்றனர். தமிழர்கள் என பொதுமைப்படுத்தாததால் சேர, சோழ, பாண்டிய நாடுகளையும் தான் காட்டுமிராண்டிகள் எனச் சொல்கிறாரோ என ஐயம் எழுகிறது. தமிழ், தமிழன் என்ற சொற்கள் பிழைப்புவாதத்திற்கு பயன்படும் சொற்களாகி விட்டன.

இயக்குநர் எப்படிப் போதி தர்மர் பற்றி இணையத்தில் கண்டுக்கொண்டாரோ, அதே போல் இந்தியாவின் பாதுகாப்பு குறித்தும் உள்துறை அமைச்சர் குறித்தும் டோங் லீ இணையத்தில் பார்த்திருப்பார் போலும். எதற்கும் கவலை கொள்ளாமல், காவல் நிலையத்திற்குள்ளாகவே புகுந்து அநாயாசமாகக் கொலை செய்கின்றார். டோங் லீயாக நடித்திருக்கும் வியட்நாம் நடிகர் ஜானி ட்ரை ங்கொயன் தான் படத்தில் ஒரே ஆறுதல். அதிர்ந்தே பேசாத அழகான தமிழ்ப் பட வில்லன் என்பது எத்தனை மகத்தான சங்கதி. ஆனாலும் இயக்குநர் சாலையில் சரக்குந்து, மகிழ்வுந்துகள், இரு உருளை வண்டிகள் பயன்படுத்தி வரையியல் தொழில்நுட்பத்தால் ஒரு மொன்னை சண்டைக் காட்சியை வைத்து வில்லனிற்கு இழுக்கு தேடித் தந்து விட்டார்.

ஏழாம் அறிவு காஞ்சனா, வேலாயுதம் போல் எந்த வித்தியாசமும் இல்லாத மற்றுமொரு தமிழ்ப் படம்.

Leave a Reply