Shadow

காக்கர்லா

காக்கர்லாவை நேரில் சந்திக்கப் போகிறோம் என்ற குறுகுறுப்பு ஒரு வாரமாகவே இருந்தது. ஒரு வழியாக டிசம்பர் 11, 2011 அன்று கிளம்பி அங்கே சென்றே விட்டேன். அங்கே என்பது புக் பாயின்ட் ஹால். அந்த அங்கேவிற்கு இதற்கு முன் நான் சென்றதில்லை. குத்து மதிப்பாக ஸ்பென்சர் பிளாசா எதிரில் என்பதை மட்டும் தெரிந்து கொண்டு பஸ் ஏறி விட்டேன். ஸ்பென்சர் பிளாசா நிறுத்தத்தில் இறங்கி, சாலை சந்திப்புகளைக் கடந்து எதிர்புறம் சென்றால், அங்கே இருந்தது மாநகர காவல்துறை அலுவலகம். சரி புக் பாயின்ட் அந்தப் பக்கம் அல்லது இந்தப் பக்கம் எங்கேயாவது நகர்ந்து போயிருக்கும் என இருபுறமும் தேடினேன்.  ஆனால் புக் பாயின்ட் கண்ணில் தட்டுப்படவில்லை. அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சாலையில் நடந்து செல்லும் மக்கள் நடமாட்டத்தை அங்குக் காண இயலவில்லை. ஏன் புத்தக வெளியீட்டு விழாவை ஞாயிறு அன்று வைக்கிறார்கள்?? அன்றாவது யாரேனும் வரக் கூடும் என்பதாலா!?

காக்கர்லாவின் புத்தகம் தமிழில் வருகிறது என்பதே எனக்கு மிக ஆச்சரியம். சிதம்பரம் கோயிலுக்குக் குண்டு வைக்கும் ஆளுநராகத் தான் அவரை எனக்கு என் பள்ளிப் பருவங்களில் அறிமுகம். அதன் பின் சில வருடங்கள் கழித்தே தான் காக்கர்லாவின் இயற்பெயர் கிரிஷ் கார்னாட் எனத் தெரிந்து கொண்டேன். அவர் வில்லன் நடிகர் என்றளவில் நினைத்துக் கொண்டிருந்த எனக்கு, அவர் கொண்டாடப்பட வேண்டிய கன்னடத் திரைப்பட இயக்குநர் என்பது ஆச்சரியமாய் இருந்தது. அவரது ஆறு நாடகங்கள் அடங்கிய “அக்னியும் மழையும்” என்னும் தொகுப்பின் வெளியீட்டு விழாவிற்குச் செல்ல தான் புக் பாயின்ட்டைத் தேடிக் கொண்டிருந்தேன்.

பட்டூலாஸ் ரோட், கிளப் ஹவுஸ் ரோட் எல்லாம் சென்று சிறிது தூரம் தேடினேன். ம்ஹூம்.. புக் பாயின்ட்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சரி காவல் நிலையத்தில் சென்று விசாரித்துப் பார்ப்போமா என்று யோசனை எழுந்தது. முன்ன பின்ன காவல் நிலையத்தை மழைக்கு ஒதுங்க கூட மிதித்ததில்லை. தமிழ்த் திரைப்படத்தில் காண்பிப்பது போல், ‘கம்ப்ளெயின்ட் எழுதிக் கொடுத்துட்டுப் போ’ என்று சொல்லி விட்டால் என்னப் பண்ணுவது? நான் சாஹித்ய அகாடெமி விருது வாங்கின புத்தகங்களைப் படிப்பவன் என்றால் கூட முரட்டுத் தோளும், சில பல பக்கங்கள் புகார் எழுதும் திறமையும் வாய்த்திருக்கும். நானோ காமிக்ஸ் ரசிகன். அதிலும் குறிப்பாக ‘லக்கி லூக்’ காமிக்ஸ் விரும்பிப் படிப்பவன். உடனே யோசனை தோன்றி லக்கி லுக் அவர்களுக்கு ஃபோன் பண்ணேன்.

‘இப்ப எங்க இருக்கீங்க பாஸ்!? போலீஸ் ஸ்டேஷன் தெரியுதா?’ என்று கேட்டு விட்டு புக் பாயின்ட் வாசலில் கொண்டு போய் விட்டார். அவருக்கு நன்றி சொல்லி விட்டு படிகளேறி புத்தக வெளியீட்டு விழா அரங்கிற்குச் சென்றேன். கண்ணுக்குள் புகுந்து ஆட்டம் காட்டும் இரத்த சிகப்பு நிறத்தில் டி-ஷர்ட் போட்டுக் கொண்டு நின்றிருந்தார் எழுத்தாளர் மாமல்லன். சாரு புத்தக வெளியீட்டு விழாவில் பச்சைப் பசேலென்று அவர் டி-ஷர்ட் அணிந்திருந்தது ஞாபகம் வந்தது. நிறங்களைக் குறியீடாகப் பயன்படுத்துகிறாரோ எனக் குழப்பத்துடன் அரங்கில் நுழைந்தேன். சரியாக 05:45க்கு தொடங்கப் போவதாகக் குறிப்பிடப்பட்ட விழாவிற்கு 06:20க்கு தான் சென்றேன். வயது ஏற ஏறப் பொறுப்பும், சுறுசுறுப்பும் தானாக வருது. ஆனா ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாதுன்னு சொல்றாங்களே!! பொய் சொல்லி இருப்பாங்க போல.

மேடையில் இருந்த நாற்காலிகள் ‘சீஃப் கெஸ்ட்’டுகளால் அலங்கரிக்கப் படவில்லை. மேடையின் கீழ் நாடகம் போல் ஏதோ நடந்து கொண்டிருந்தது. விழா நாயகரான ‘காக்கர்லா’ கூட வரவில்லையோ என்று வந்த கூட்டத்தை அப்படியே கண்களால் வருடினேன். அவர் அடுத்த வரிசையில் அமர்ந்து ‘தியேட்டர் Y’ குழுவினரின் நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். நானும் பார்த்தேன். முதலில் அது நாடகம் தானா எனக் குழம்பினேன். கையில் வைத்திருந்த தாள்களைப் பார்த்துப் பார்த்துப் படிக்க முயற்சி செய்தனர். ஆனால் அதையும் கோர்வையாகப் படிக்கவில்லை. முதல் தடவை படிப்பது போல் கொஞ்சம் திணறினர். வசனங்கள் எதுவாக இருந்தாலும் நாடகத்தில் உச்சரிப்பு மட்டும் ஒரே போலவே இருக்கும் போல. இதற்கே நான் நாடகம் எதுவும் தனியாகப் பார்த்ததில்லை. எங்க பள்ளியில் நடந்த அமெச்சூர் நாடகம் மட்டும் தான் பார்த்துள்ளேன். திடீரென்று கட்டியங்காரராக ஒரு பெண் தோன்றினார். நன்றாகக் குனிந்துக் கொண்டு மணி அடித்தவாறே பேசினார். ஓவர்-ஆக்டிங் போல் தெரிந்தாலும் பார்க்க வேடிக்கையாக இருந்தது. மணியைக் கீழே  வைத்ததும் நாடகத்தில் கதாபாத்திரமாக மாறி விட்டார். முன் வரிசையில் ஐய்யனார் சிலை போல் அமர்ந்திருந்த ஒருவரின் தலை மறைத்தது. அந்தப் பின்னந்தலையை எங்கோ பார்த்தது போலிருந்தது. சட்டென்று நினைவிற்கு வரவில்லை. கடைசி வரிசையில் அமர்ந்திருந்த நான் அந்தத் தலையின் சொந்தக்காரரைப் பார்க்க எழுந்தேன். அந்தத் தலையின் சொந்தக்காரர் யார் தெரியுமா!? பேய்க்காமன். அட.. இவரெல்லாம் வந்திருக்காரே என ஆச்சரியமாக இருந்தது. ரொம்ப ஆச்சரியப்பட்டதாலோ என்னவோ கொஞ்சம் சோர்வாக உணர்ந்தேன். அது உண்மையிலேயே சோர்வா அல்லது வெளியில் மேசை மேல் வைத்திருந்த டீயும், பிஸ்கட்டும் நினைவு வந்ததின் விளைவா என்று தெரியவில்லை.

மீண்டும் அதே இடத்தில் வந்து அமர்ந்தேன். இன்னும் நாடகம் அரங்கேறிக் கொண்டிருந்தது. அந்த நாடகம் விக்கிரமாதித்யனுக்கு வேதாளம் கேள்வியாகக் கேட்ட ஒரு கதை என ஞாபகம் வந்தது. திடீரென்று ‘என் தலை குதிரை தலையாக மாறி விட்டதே!!’ என ஒரு கதாபாத்திரம் புலம்பிக் கொண்டே அறிமுகம் ஆனது. கட்டியங்கரராக நடித்தவர் எங்கயோ யாரிடமோ போய் வேண்டிக் கொண்டால் பழைய தலை திரும்பி வந்துடும் என ஹயவதனன் என்னும் அந்தப் பாத்திரத்தைத் துரத்தி விட்டு விடுகிறார். மீண்டும் விக்கிரமாதித்யன் நாடகம் தொடர்ந்தது. ‘ஐய்யோ.. என் தலை மாறலயே!!’ என ஹயவதனன் மீண்டும் ஓடி வந்தான். நான் வருவதற்கு முன்பே சில நாடக பிட்டு ஓட்டியிருப்பார்கள் போல. அனைத்தின் முடிவையும் தெரிந்து கொள்ள ‘கிரிஷ் கார்னாடின் – அக்னியும் மழையும்’ புத்தகம் வாங்கி படித்து தெரிந்து கொள்ளுங்கள் என கட்டியங்காரர் நாடகத்திற்கு முழுக்கு போட்டு விட்டார். ப்ச்ச்.. எனக்கு அந்த வேதாளம் சொன்ன கதையின் முடிவு தெரியும். ஆனா யாரிந்த ஹயவதனன் எனத் தெரியாமலே போய் விட்டது.

சண்முகராஜா (பேய்க்காமன்), ந.முத்துசாமி, இந்திரா பார்த்தசாரதி, கிரிஷ் கார்னாட், பாவண்ணன், வெளி ரங்கராஜன் என இடதில் இருந்து வலதாக மேடையில் அமர்ந்தனர். முதலில் இந்திரா பார்த்தசாரதி உற்சாகமாக ஏதோ பேசினார். ஏனோ கவனிக்கத் தவறிவிட்டேன். அடுத்து ந. முத்துசாமி எழுந்தார். அவரை யாரென்று எனக்குத் தெரியவில்லை. எனக்குத் தெரிந்தவர்கள் எல்லாம் பாரதியார், புதுமைப் பித்தன, கல்கி, சாரு நிவேதிதா, ‘இரும்புத் திரை’ அரவிந்த் மட்டுமே. ந.முத்துசாமி யாராக இருக்கக்கூடும் என்று யூகிக்கக் கூட முடியவில்லை. வ்ரெஸ்ட்லிங்கில் வரும் ‘ஹல்க் ஹோகன் (Hulk Hogan)’ நினைவில் வந்தார். எந்த வித இலக்கியப் பூச்சுகளும் அற்று மிகச் சாதாரணமாகவும், கம்பீரமாகவும் பேசினார்.

“நாடகத்தில் எங்க எதார்த்தம் இருக்கு?” என்று கேள்வி எழுப்பியவர், “கீழ நடந்த நாடகத்தையே உதாரணமா எடுத்துக்கோங்க. எல்லாம் ‘ஓவர்-ஆக்டிங்’. இப்பெல்லாம் சினிமா பரவாயில்லை. எதார்த்தமா நடிக்கிறாங்க” என்றார். மேலும், ‘இப்ப இருக்கிறவர்களால் புத்தகத்தைப் பார்த்து தமிழ்ப் படிக்கவே இயலாதவராய் உள்ளனர். அவர் காலங்களில் வாய் விட்டு உரக்க படிக்க சொல்வார்களாம். பின்பு பள்ளிகளில் ‘மெளன வாசிப்பு’ என்ற பழக்கம் வந்தது. கூடவே தப்பும் தவறுமாக படிக்கும் பழக்கமும் வந்து விட்டது’ என்றார் ந.முத்துசாமி. கையில் வைத்திருந்த ‘அக்னியும் மழையும்’ புத்தகத்தை உயர்த்திக் கான்பித்து, அதிலுள்ள தமிழ் பிரயோகத்தைச் சிலாகித்து பாவண்ணனைப் பாராட்டினார். அவர் சிலாகித்தார் என்றவுடன் மேடை நாகரீகம் கருதி புகழ்ந்ததாக நினைக்க வேண்டாம். “ஒவ்வொரு தமிழரும் படிக்க வேண்டிய நூல்” என்று பாவண்ணனின் மொழிபெயர்ப்பை அவருக்கே உரிய பூச்சற்ற பாணியிலேயே சொன்னார்.

அடுத்து மிடுக்காக பேய்க்காமன் எழுந்தார். அவர் தேசிய நாடகப் பள்ளியில் படிக்கும் பொழுதே கிரிஷ் கார்னாடைச் சந்திக்க விரும்பியுள்ளார். அது தற்போது வாய்த்ததில் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார். தனது கருக்களைப் புராணங்களில் இருந்தும், வரலாற்றில் இருந்தும் எடுக்கும் கிரிஷ் கார்னாட் வசனங்கள் மூலம் அதில் சமகாலப் பிரச்சனைப் பற்றிப் பேசியிருப்பார் என்றார். 40 வருடத்திற்கு முன் எழுதப்பட்ட நாடகம் இன்றைய காலத்தோடும் பொருத்திப் பார்க்கலாம் என்றார் பேய் காமன். இவரைத் தொடர்ந்து வெளி ரங்கராஜன் பேசினார்.

கடைசியாக காக்கர்லா சிரித்த முகத்துடன் எழுந்தார். மன்னிக்கணும் என்னால் தமிழில் பேச முடியாது ஆங்கிலத்தில் தொடர்கிறேன் என ஆங்கிலத்தில் சொன்னார். காக்கர்லாவுக்கு தமிழ்த் தெரியாது என்பது லேசாக அதிர்ச்சியாக இருந்தது. அதை ஏன் நாம் ஊகிக்கத் தவறினோம் என்று யோசிக்கத் தொடங்கினேன். எனக்குத் தமிழில் பேசினாலே புரியாது. எங்க இருந்து அவசர அவசரமாக ஆங்கில மொழிபெயர்ப்பைச் சுயமாகச் செய்து புரிந்து கொள்ள? சரி கிளம்பிட வேண்டியது தான் என எழுந்தேன்.

“என் நண்பர்கள் என்னைக் கேட்பார்கள். இன்று தான் உன் வாழ்வின் கடைசி நாள் என எமன் சொன்னால், இந்த நாளை எப்படிக் கழிப்பாய் என்று?”

காக்கர்லா சில நொடிகள் இடைவெளி விட்டார். சரி ‘என்னச் செய்வார்’ என்று கேட்டுவிட்டுப் போலாம் என நின்றேன். “நாடகம் எழுதுவேன் என்று அவர்களுக்கு பதிலளித்தேன்” என்றார் காக்கர்லால். நான் அமர்ந்துக் கொண்டேன். அவரது பதில் பிடித்து இருந்தது. ஆங்கிலமும் புரிந்தது.

‘காளிதாஸ் காலத்திற்குப் பிறகு, இந்தியாவில் நாடகம் எழுதும் வழக்கம் சில நூற்றாண்டுகளுக்கு இல்லாமல் போய்விட்டது. அதற்காக நாடகங்கள் இங்கு அரங்கேற்றப் படவில்லை என்று அர்த்தம் இல்லை. தமிழகத் தெருக் கூத்துகள் (இன்னும் சில இந்தியக் கலைகள் பட்டியல் சொன்னார்) போன்றவை செவி வழியாகவே கேட்கப்பட்டு தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வந்துள்ளது. அவர்களுக்கு எழுதி வைக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய் விட்டது. ஷேக்ஸ்பியரின் தாக்கம் ஏற்பட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டில் தான் மீண்டும் நாடகம் எழுதப்பட்டது. அப்படி நாடகம் எழுத வந்தவர்கள் அனைவருக்கும் ஷேக்ஸ்பியரின் தாக்கத்தாலேயே வந்தார்கள் என்பது மறுக்கப்படாத உண்மை.

தமிழ் போல உயர்ந்த செறிவுள்ள ஒரு மொழியைக் கற்றுக் கொள்ளாதது மிகவும் வேதனை அளிக்கிறது. 1963 முதல் 1970 வரை சென்னையில் இருந்தும் தமிழ் கற்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய் விட்டது. அவரது நண்பர்களுக்கு ஆங்கிலம் தெரியும். ஆட்டோகாரர்களுக்கு ஆங்கிலம் தெரியும். மொழிப் பிரச்சனையே வந்தது இல்லை. ஆனால் கடைசி சில நாட்கள் ஒரு ஹொட்டலில் தங்க வேண்டி நேர்ந்தது. அங்குள்ளவர்களுக்கு தமிழ் தவிர வேறொன்றும் தெரியாது. ஏழு வருடங்களில் நான் கற்க முற்படாத மொழியை மிகக் குறுகிய காலத்தில் பேசக் கற்றுக் கொண்டேன். நான் மட்டும் ஏழு வருடங்களுக்கு முன்பே தமிழ் பேச முற்பட்டிருந்தால் இந்நேரம் உங்க முன் தமிழ் பேசிக் கொண்டு இருந்திருப்பேன். தமிழ் கற்றுக் கொள்ளாததை நான் வாழ்க்கையில் செய்த மிகப் பெரிய பிழையாகக் கருதுகிறேன்” என்றார் காக்கர்லா.

காக்கர்லாவை எனக்கு ரொம்பப் பிடித்து விட்டது. அன்றே இரவு ஹயவதனன் தலை பழைய நிலைமையை அடைந்ததா என காணும் ஆவலில் புத்தகத்தைத் திறந்தேன். ஆனால் ஏனோ ‘அக்னியும் மழையும்’ என்ற நாடகத்தை தான் படித்தேன். புத்தகம் படிக்கும் பொழுது காக்கர்லாலின் புத்தகம் என்ற எண்ணம் எழவில்லை. பாவண்ணனின் கைவண்ணம் மொழிபெயர்ப்பைப் படிக்கிறோம் என்ற பிரக்ஞையை அளிக்கவே இல்லை. ம்ம்.. நேரத்திற்கு சென்றிருந்தால் பாவண்ணனின் வரவேற்புரையையும் கேட்டிருக்கலாம். ந.முத்துசாமி சொன்னது காதுகளில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. 

நன்றி: பண்புடன்

– தினேஷ் ராம்

Leave a Reply