
பாசாங்கற்ற ஜாலியானதொரு படம். ஆனால், சமூக ஏற்றத்தாழ்வுகளைப் பற்றிய பிரக்ஞையையும், சம கால அபத்தங்களையும் மிகத் தெளிவாகச் சித்தரிக்கிறது ‘காக்கா முட்டை’. இப்படம், சிறந்த குழந்தைகள் படமாக தேசிய விருது வாங்கியது குறிப்பிடத்தக்கது. இதே போல் மேலும் பல படங்களைத் தயாரிக்க நடிகர் தனுஷுக்கும், இயக்குநர் வெற்றிமாறனுக்கும் வாழ்த்துகள்.
சாக்கடையாகிவிட்ட கூவம் நதிக்கரையில் வாழும் குப்பத்துச் சிறுவர்களான சின்ன காக்கா முட்டையும், பெரிய காக்கா முட்டையும் சகோதரர்கள். நடிகர் சிம்பு திறந்து வைக்கும் ‘பீட்சா ஹட்’டில் பீட்சா சாப்பிட வேண்டுமென அவர்களுக்கு ஆசை எழுகிறது. அந்த ஆசை நிறைவேறியதா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
சின்ன காக்கா முட்டையாக ரமேஷும், பெரிய காக்கா முட்டையாக விக்னேஷும் அச்சு அசலாக வாழ்ந்துள்ளனர். குறிப்பாக சிறுவன் ரமேஷின் புன்னகையையும், முக பாவனைகளையும் உங்கள் மனதுக்கு மிக நெருக்கமாக உணர்வீர்கள். அதனால்தான் என்னவோ படத்தை அவன் புன்னகையில் முடித்திருப்பார் படத்தொகுப்பாளர் கிஷோர்.
“சிம்பு கிளம்பிட்டானா?” – ‘பீட்சா ஹட்’ ஊழியரும் ஓனரின் நண்பருமான கிருஷ்ணமூர்த்தி,
“கிளம்பிட்டாரு. அவர் இன்னும் ஐந்து நிமிஷத்தில் இங்க வந்துடுவாரு” – ‘பீட்சா ஹட்’ ஓனரான பாபு ஆண்டனி,
“இன்னும் அஞ்சு நிமிஷத்தில் ராகுகாலம் ஆரம்பிச்சுடும்.”
படத்தின் மிகப் பெரிய பலம் அதன் வசனங்கள். படத்தில் அனைவரையும் கிண்டல் செய்துள்ளார் மணிகண்டன். சிறுவர்களைப் பற்றி ‘புதிய தலைமுறை’ செய்தியாளர் பேசும்போது கடக்கும் அதே சிறுவர்களைத் தள்ளி நடக்கச் சொல்வது, கூடவே ஒட்டிக் கொண்டிருப்பவனை ஏமாற்றும் ரமேஷ், ஏழாயிரத்துக்குச் செய்தியை வாங்கும் சன் டி.வி. குமார், ‘எனக்கே விபூதி அடிச்சுட்ட இல்ல?’ எனக் கேட்கும் யோகி பாபு, எது நடந்தாலும் பணம் பார்க்க அலையும் எம்.எல்.ஏ., ஒரு சிறுவன் அடிக்கப்பட்டதைப் பார்த்தவுடன் அறச்சீற்றம் பொங்கி ஃபேஸ்புக் லாகின் செய்யும் இளைஞன், ரத்தம் கொதிக்கிறதென டி.வி.யில் பேசப்படும் விவாதங்கள், தக்காளி குடைமிளகாய் போட்டு தோசை வார்க்கும் பாட்டி என படத்தில் சுவாரசியங்களுக்குப் பஞ்சமேயில்லை. இதில், தன்னை வசனங்களிலும் காட்சிப்படுத்துதல்களிலும் படம் நெடுக்க கலாய்க்கப்பட ஒத்துக் கொண்டு நடித்த “சிம்பு”வைப் பாராட்டியே ஆகவேண்டும்.
இரண்டு குழந்தைகளின் அம்மாவாக, மிக இயல்பாக நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். குப்பத்துவாசியாகவே மாறி, அந்தக் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். சிறையில் இருக்கும் கணவனைக் காதலோடு பார்க்கச் செல்லும் அந்தக் காட்சி ஒரு கவிதை என்றே சொல்லலாம்.
குப்பத்தை நாயகனின் களமாக இன்றி படத்தின் களமாகக் கொண்டுள்ளதே படத்தின் சிறப்பம்சம். அச்சிறுவர்களின் மகிழ்ச்சி, அன்றாட வேலைகள், உணவு, விளையாட்டு இடம், ஆசைகள், பணி என எவ்விதச் சமரசங்களுமின்றி படமெடுத்துள்ளார் இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான மணிகண்டன். வில்லன், நாயகன் என்ற நிறமற்ற கருப்பு – வெள்ளை படங்களாகக் குவிந்து கொண்டிருக்கும் தமிழ்த் திரைப்படங்களுக்கு மத்தியில், வண்ணக் கலவையாய் விதவிதமான நிறம் கொண்ட பன்முக மனிதர்களை படம் காட்டுகிறது.