Shadow

கூகுளாண்டவரின் ‘விலையில்லா இணையதளம்’

கூகுளாண்டவர்

உலகத்தின் மிகப் பெரிய கம்பெனியில் இருந்து உள்ளூர் ஊறுகாய் வியாபாரி வரை தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள ஓர் இணையதளம் அவசியமாகிறது. என்னதான் ‘ப்ளாக்கர்’, ‘வேர்ட்ப்ரஸ்’ போன்றவைகள் இலவசமாய் தகவல் பக்கங்களை உருவாக்கிக் கொள்ளும் வசதிகளை அளித்தாலும். டபிள்யு டபிள்யு டபிள்யு டாட் பிச்சுமணி டாட் காம்  என சொல்லிக் கொள்வதில் ஒரு பெருமைதான்.

ஒரு இணையதளம் துவக்க என்னவெல்லாம் வேண்டும். முதலில் ஒரு நல்ல பெயராய்ப் பார்த்து பதிவு செய்ய வேண்டும். நம் கொடுப்பினையைப் பொறுத்து பேரை பதிவு செய்து கொண்ட பின்னர், நம் தளத்தை வலையேற்ற ஓர் இடம் பார்க்க வேண்டும். அந்த இடம்தான் சர்வர். நம் தகவல்களின் அளவு மற்றும் ட்ராஃபிக்கை பொறுத்து சர்வரில் இடம் வாங்கிக் கொள்ள வேண்டும். இவை இரண்டுமே காசு கொடுத்து வாங்க வேண்டியவை. 

இந்த வெப் ஹோஸ்டிங் சர்வர் கம்பெனிகள் ஆளுக்குத் தகுந்தாற்போல காசு கறந்துவிடுவார்கள். விண்டோஸ் ஹோஸ்டிங் சர்வருக்கு ஒரு விலை, லினக்ஸ் சர்வருக்கு ஒரு விலை என எல்லாமே காசு பணம் துட்டு மணிதான். இந்த இடத்தில்தான் காசே கொடுக்க வேணாம்.. எங்க சர்வர்ல இலவசமா ஹோஸ்ட் பண்ணிக்கங்கன்னு கூகுளாண்டவர் அருள் பாலிக்கிறார்.

அதெப்படி இலவசமா கூகுள் சர்வர்ல வெப்சைட்டை ஹோஸ்ட் செய்வது? ரொம்ப சிம்பிளா செய்து விடலாம். சிறிய தளம் முதல் சிக்கலான ஜாவா ஸ்க்ரிப்ட்டுகளை உள்ளடக்கிய தளம் வரை கூகுள் ட்ரைவில் ஹோஸ்ட் செய்ய முடியும். ஆனால் ஒரு நிபந்தனை உங்களுடைய தளம் ஸ்டாட்டிக் தளமாக இருக்க வேண்டும். 

ஹெச்.டி.எம்.எல். பக்கங்கள், புகைப்படங்கள், கேஸ்கேடிங் ஸ்டைல் ஷீட் (CSS), ஐகான்ஸ், பாடல், வீடியோ என ஒரு ஸ்டேட்டிக் வலைப்பக்கத்தின் அனைத்துக் கோப்புகளையும் கூகிள் ட்ரைவில் தரவேற்றி நம்முடைய வெப்சைட்டை ஹோஸ்ட் செய்து கொள்ளலாம்.
கூகுள் ட்ரைவ்பழைய வெர்ஷன் கூகுள் ட்ரைவாக இருந்தால் ஹோஸ்ட் செய்வது மிகச் சுலபம். முதலில் கோப்புகள் அனைத்தையும் கூகுள் ட்ரைவின் ஃபோல்டரில் தரவேற்றிக் கொள்ளவும். பின்னர்  ஃபோல்டரில் ஷேரிங் பெர்மிஷனை பப்ளிக் (Public) என செட் செய்யவும். கூகுள் டாக்ஸ் வியூவரில், index.html எனும் கோப்பைத் திறந்து, ‘ப்ரிவியூ (Preview)’ என்பதைச் சொடுக்கினால் தளத்தின் உரலியைப் பெறலாம்.

ஆனால் புதிய வெர்ஷன் கூகுள் ட்ரைவில், ஹோஸ்டிங் செய்யும் ஆப்ஷனை ஏனோ கூகுளாண்டவர் எடுத்துவிட்டார். ஆனாலும் கொஞ்சம் மெனக்கெட்டால், கூகுளாண்டவரே மனமிறங்கி நமக்கு உதவிடுவார். புதிய வெர்ஷனிலும் நம் இணையதளத்தை ஹோஸ்ட் செய்துவிடலாம். 

முதலில் இணையதளக் கோப்புகளை எல்லாம் சிப்புக் கோப்பாக (zip file) மாற்றிக் கொள்ளவும். பின் இங்கே சொடுக்கி, அந்தச் செயலியின் (ஆப்ஸ்) உதவியுடன் சிப்புக் கோப்பை கூகுள் ட்ரைவில் தரவேற்றிக் கொள்ளவும். முழுவதுமாக கோப்பு தரவேற்றப்பட்டதும். இணையதளத்தின் உரலியைப் பெறலாம். முதல் முறை இப்படி சிப்புக் கோப்பை தரவேற்றும்பொழுது, உங்களிடம் உரிமையைக் கோரும். 

காசா? பணமா? கழுத உரிமையை அளிக்கிறேன் எனத் தொடர்ந்தால் தரவேற்றம் இனிதே முடிந்து, உங்கள் தளத்தின் உரலியை கூகுளாண்டவர் அருளிடுவார். ஆனால் என்ன.. அந்த உரலி googledrive.com/host.. எனத் தொடங்கும். இப்போதைக்கு இதைத் தவிர்ப்பது சிரமம்.

ஆனால் உங்க இனையதளத்துக்கு தனி டொமைன் கண்டிப்பாக தேவையெனில் ஒன்னு பண்ணலாம். இதுவும் கூட சுலபம்தான். <IFRAME> tag-க்குள், கூகுளாண்டவர் அளித்த உரலியை அளித்து விடவும்.

உதாரணத்திற்கு..

<html>
<head>
<style>
body { margin:0; padding:0; }
iframe { position: absolute; height: 100%; width: 100%; }
</style>
<title>Google Drive Website</title>
</head>
<body>
<iframe src=”https://googledrive.com/host/பிச்சுமணி.காம்/” frameborder=”0″></iframe>
 </body>
</html>

<IFRAME> tag-இன் உயரத்தையும் அகலத்தையும் 100% வைத்தால், உங்க இணையதளம் திரையில் முழுமையாகத் தெரியும். ஆனால் என்ன ஹோம் பேஜிலிருந்து சொடுக்கி வேறு பக்கத்துக்குப் போனால் கூட கிணற்றில் போட்ட கல் போல அதே பழைய உரலியைத்தான் காட்டும்.

இந்த வசதி ஸ்டாட்டிக் வலைத்தளங்களுக்கு மட்டும்தானுங்க!

– சிம்ம வாகனி