Shadow

சந்திரஹாசம் – ஓர் அலசல்

Chandrahaasam Vimarsanam

அதென்ன சந்திரஹாசம்? சட்டென ஈர்க்காத இந்தத் தலைப்பை ஏன் விகடன் கிராஃபிக்ஸ் தேர்ந்தெடுத்தனர்? சந்திரஹாசம் என்பது பாண்டியர்களுடைய வீர வாளின் பெயர் (இது சந்திரஹாசம் இணையத்தள முன்னுரையில் ஏற்கெனவே குறிப்பிடப்பட்டிருந்தது).

ச்சல்.. சல்புத்தகத்தின் ஆரம்பப் பக்கங்களே ஏமாற்றத்தைத் தருகின்றன. ‘இது தான் குளியலறை. இங்கே குளிப்பார்கள்’ என குளியலறை காட்டி யாராவது சொன்னால் உங்களுக்கு எப்படியிருக்கும்? அப்படித்தான் சித்திரங்களுக்கு விளக்கவுரை போட்டு ஓவியர், வாசகர் என இருவரையும் அவமானப்படுத்துக்கிறார்கள். அதை விட கொடுமை, ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்க்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும் வீங்கிய எழுத்துரு. உதாரணத்திற்கு, குதிரையின் குளம்புகளை மறைத்து “சல்.. சல்..” எனப் பெரிய எழுத்துகளில் போடப்பட்டிருப்பதைக் காணுங்கள். க்ர்ர்..

இந்தப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கும் பொழுது, அப்படியே காலம் நழுவி பால்யத்துக்குள் நம்மைத் தள்ளி விடுகிறது. ‘சிங்கம் கர்ஜிக்கும்; யானை பிளிறும்; காகம் கரையும்’ என்று தமிழ் மிஸ்ஸின் குரல் காதில் கேட்கிறது.

புத்தக அறிவிப்பின் பொழுதே கதையையும், புத்தகத்துக்குள் ஒரு சினிமா என்றும் சொல்லியே விளம்பரப்படுத்தியிருந்தனர். இலங்கைப் போர், அங்குசம், நாகரிகத்தின் முகம், மணிமுடி, மாபாதகம், மனிதக்கடல் என மொத்தம் ஆறு அத்தியாயங்கள். புனைவென்ற ரீதியில் கவர்வது ‘அங்குசம்’ அத்தியாயம் மட்டுமே! அதிலுள்ள அரசியல் விளையாட்டுகள் ஈர்க்கிறது. ‘நாகரிகத்தின் முகம்’ என்ற அத்தியாயம் எல்லாம் பக்கத்தை நிரப்பும் ஒப்பேத்தலின் உச்சம். குப்ளாக்கானின் (ஓரிடத்தில் குப்ளாகான்) தூதுவராக மார்கோபோலோ பாண்டிய நாட்டுக்கு வந்தார் என்ற தகவலைச் சொல்லும் அத்தியாயம் அது. ஆனால் அதே தகவல், அதற்கு முன்பாக ‘அங்குசம்’ உபத்தலைப்பு இடம்பெற்றிருக்கும் பக்கத்திலுள்ள, அரக்கால் கயல் முத்திரை இடப்பட்ட ஓலையிலும் உள்ளது.

அங்குசம்

இந்த ஓவியத்தையும் ரசிக்க முடியாமல் ஓலையை ஓவியத்தின் மேல் ஒட்டியுள்ளனர். ஓட்டியவர்கள் ஓவியத்தின் எதிர்பக்கமாவது ஒட்டியிருக்கலாம். முதல் மூன்று உபத்தலைப்பு வரும் பக்கங்களிலும் இதே எரிச்சலூட்டும் கதைதான். ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்கான எழுத்துரு, எளிதாய்ப் புரியக் கூடியதற்கும் கட்டம்கட்டி விளக்கம் சொல்வதென ஏதோ ஒரு வகையில் ஓவியத்திற்கான முக்கியத்துவதை இரண்டாம் பட்சமாக்கி விடுகின்றனர்.

போர்க்களச் சித்திரங்கள், ஐவகை நில அமைப்பின் சித்திரங்கள், பறவையின் கோணத்தில் வரையப்பட்ட அனைத்துச் சித்திரங்களையும் பிரமாதப்படுத்தியுள்ளார் ஓவியர் க.பாலசண்முகம். ஆனால் மனித முகங்களும், முகப் பாவனைகளும் தான் அவருக்கு வரவே இல்லை. எந்தக் கண்களிலுமே உணர்ச்சிகளைக் காண முடியவில்லை. எவரின் முகமும் நினைவில் நிற்கவில்லை. இவ்வளவு ஏன் ஐரோப்பியரான மார்கோ போலோவே மாறவர்மனின் ஜாடையில் தான் இருக்கார். அரிவாள் மீசை என்றால் வீரபாண்டியன், தொங்கு மீசை என்றால் சுந்தரபாண்டியன், நரைத்த முடியும் தாடியும் இருந்தால் மாறவர்மன் குலசேகர பாண்டியன், தலைப்பாகை கட்டி கொஞ்சம் வெள்ளையாக இருந்தால் மார்கோ போலோ என்று பொருள். அதே போல், நெற்றியில் பொட்டு வைத்திருந்தால் சிவச்சாரியார்கள், பொட்டு இல்லையெனில் பெளத்த குருமார்கள். அப்படியும் வாசகர்களுக்கு குழப்பம் நேர்ந்து விட்டால் என்ன செய்வதென்று ஆங்காங்கே கட்டம் கட்டி இவர் தான் இன்னாரெனத் தெள்ளத் தெளிவாக விளக்குகின்றனர்.

ஜலக் கிரீடை சித்திரங்கள் எல்லாமும் கூட உண்டு. அதெல்லாம் ஒப்பேத்தும் அத்தியாயங்களின் பக்க நிரப்பிகள். ஆனால் அதையும் மிக நுண்ணுர்வுடன் காட்சிபடுத்தியுள்ளதால், இது ‘உலக கிராஃபிக் நாவல்’ ஆகிறது. அந்தக் குறியீடு என்னவெனில், வீரபாண்டியன் தன் மனைவி சித்ராதேவியைத் தூக்கிக் கொண்டு செல்கிறான். எரிந்து கொண்டிருக்கும் விளக்கு அணைகிறது. “யுத்தத்தின் காயங்கள் மெல்ல கரையத் துவங்கின” என அதற்கு கட்டம் கட்டி விளக்கமளித்துள்ளனர். அரசவை, படுக்கையறை, நீராழி மாளிகை என அனைத்து இடங்களிலும் சித்ரா தேவிக்கு ஒரே சிற்றுடைதான். வண்ணங்கள் மட்டுமே மாறுகிறது. காமிக்ஸிலுமா கதாநாயகிகளுக்கு இந்நிலை?

ஃப்ரான்க் மில்லரின் 300 கிராஃபிக் நாவலில் இருந்து நிறைய ஈர்க்கப்பட்டுள்ளார் எனத் தெரிகிறது. திறந்த வாய்க்குள் ஈட்டி பாய்வது, கொய்யப்பட்ட தலைகள் அடுக்கப்பட்டிருப்பது, தாக்க வரும் புலியை வீரபாண்டியன் எதிர்கொள்வது முதலிய சித்திரங்களில் அதைக் காணலாம். வாளோர் மரபு பற்றியும், கடமை தவறிய ஆபத்துதவிகள் பற்றியும், சு.வெங்கடேசன் தரும் குறிப்புகள் ஆச்சரியப்பட வைக்கின்றன.

மிக நேர்த்தியான பேக்கிங்கில் இருக்கும் சந்திரஹாசத்தை கையில் எடுத்ததும் பெறும் உணர்வினை விவரிக்கவே முடியாது. அவ்வளவு அற்புதமான கண்ணையும் மனதையும் கொள்ளை கொள்ளும் அட்டைப்படம். அட்டையில் பொறிக்கப்பட்டிருக்கும் தலைப்பைத் தடவிப் பார்ப்பதில் தான் எத்தனை ஆனந்தம்? அதே போல் ‘மனிதக் கடல்’ என்ற அத்தியாயத்தின் உபத்தலைப்பு வரும் ஓவியமும், அதைத் தொடர்ந்து வரும் பெரும் சேனையின் சித்திரங்களும் அட்டகாசம். குறிப்பாக கடைசிப் பக்கத்தில் வரும் வீரபாண்டியனின் நிழல் சித்திரம் மிகக் கம்பீரமாகவும் அற்புதமாகவும் உள்ளது.

ஏ4 அளவினை விட, இப்புத்தகம் சுமார் 2.4 செ.மீ x 1.6 செ.மீ. அளவு அதிகம் என்பது ஒரு சின்னஞ்சிறு ஆறுதல். பேஜ் மார்க்கராக கொடுக்கப்பட்டிருக்கும் சந்திரஹாசம் வாளும் உரையும் நன்றாக உள்ளது. ஆனால், இது முதல் பாகம் மட்டும்தானாம். அடுத்த பாகமான ‘மதுரா வியூகம்’ விரைவிலாம். இந்தப் பாகத்தின் பெயர் ‘சகோதர யுத்தம்’. ஒரு முழுமையை அளித்திடாமல் சட்டென முடிந்து விடுகிறது. பக்க எண்களும் கொடுக்கப்படவில்லை. இந்த கிராஃபிக் நாவல் ஒரு நல்ல தொடக்கம் தான் எனினும், 150 பக்கங்களிற்கும் (144 பக்கங்கள் + 2 அட்டைப்பக்கங்கள்) குறைவான இந்தப் புத்தகத்திற்கு 1500/- எனும் விலை ரொம்பவே அதிகம்.