Shadow

சன்யாசம் கூறாமல் கொள்

“உங்களுக்கும் க்ளைன்ட்டுக்கும் நடுவில் மாட்டிக்கிட்டு இப்படி உயிர விடுறதுக்கு.. பேசாம சாமியாரா போயிடலாம்.”

கோபத்திலும் சற்று நிதானமாக உதிர்ந்த வார்த்தைகள். ஒரே நாளில் வெவ்வேறு தருணங்களில் மூன்று முறை சாமியார் ஆவதைப் பற்றி ராம்சரண் கூறி விட்டார். அதன் பிறகு அலுவலகத்தில் ஒரு வித மரியாதையுடன் பார்க்க ஆரம்பித்தனர். அவர் கடந்தவுடன் அவரைப் பற்றி குசுகுசுவெனப் பேசிக் கொண்டனர். எப்பொழுதையும் விட இவருக்கு கீழ் இருப்பவர்கள் நன்றாக வேலை செய்தது போலிருந்தது.

நாற்பதுகளை கடந்தும் நல்ல திடகத்திரமான உருவம். எப்பொழுதும் ஒரு புன்னகையை வலுக்கட்டாயமாக முகத்திலே வைத்துக் கொண்டு, கலகலப்பாக வலம் வருவார். ஐந்துமுறை பணி நிமித்தமாக வெளிநாடுகள் எல்லாம் சென்று வந்திருந்தார். அவர் சாமியாராகப் போவதாகக் கூறியதும்..  அது பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

அவரிடம் யாரும் அதைப் பற்றி நேரிலும் கேட்கவில்லை. அவர் விளையாட்டாகத்தான் சொல்லியிருப்பார் என்று யாரும் நம்ப விரும்பவில்லை போல. ஒருவேளை சீக்கிரம் அவர் சாமியார் ஆகியோ அல்லது ஆகாமலோ அலுவலகத்தை விட்டுப்போகணும் என்பது தான் இவர்களது விருப்பமோ என்ற சந்தேகம் எழுந்தது ராம்சரணுக்கு. அதற்குத்தான் இந்த மறைமுக வரவேற்போ என்று நினைத்து வியந்தார்.

‘அவ்ளோ கொடுமையா செஞ்சிருக்கும்!’ என்று நினைத்ததும் தன்னை மறந்து சிரித்து விட்டார். அந்த சம்பவம் மேலும் கசியும் வதந்திக்கு வலு சேர்ப்பதாக அமைந்து விட்டது. காரணமில்லாமல் அடிக்கடி இப்ப எல்லாம் ராம்சரண் சிரிக்கிறார் என்பது அவருக்கு அலுவலகத்தில் ஒரு ஸ்திரமான யோகி அந்தஸ்து வழங்கி விட்டது.

வார இறுதியில் கச்சேரிக்காக நெருங்கிய நண்பர்கள் சேர்ந்த பொழுது, சுந்தர் ராம்சரணின் மனதில் ஓடிக் கொண்டிருந்த அலுவலக வதந்தியை பற்றிக் கேட்டார். சுந்தர் அதே அலுவலகத்தின் வேறு கிளையில் இருப்பவர்.

ராம்சரண் பதிலேதும் சொல்லாமல் அனைத்தையும் மறந்தவராய் கையில் இருந்த கோப்பையையே சுழற்றிக் கொண்டிருந்தார்.

“இப்பெல்லாம் சாமியாரா போறேன்.. இமயமலை போறேன் என்று சொல்றதெல்லாம் ஒரு பப்ளிசிட்டி ட்ரென்ட்” என்று சிரித்தார் ஜெயந்தன்.

 

ராம்சரண் கோப்பையிலிருந்து பார்வையையும், கையையும் எடுத்தவாறு ஜெயந்தனை தீர்க்கமாக நோக்கினார்.

“அதில்ல சரண். கரன்ட்ல இருக்கிற ட்ரென்ட் பத்தி சொன்னேன். நீ அப்படி எல்லாம் இல்லன்னு எங்களுக்கு தெரியாதா?”

சிறிது நேரம் அனைவரும் அமைதியாக இருந்தனர்.

“ஏன் திடீர்னு.. இப்படி ஒரு முடிவு சரண்?” என்று கேட்டார் கண்ணன்.

‘நான் எப்படா முடிவு எடுத்ததா சொன்னேன்?’ என்று மனம் நினைத்தாலும் மீண்டும் மெளனம் சாதித்தார் ராம்சரண்.

“பாதி முடி கொட்டிப் போச்சு. காது முடியெல்லாம் வெள்ளையா போச்சு. அப்புறம்என்ன சாமியார போற நேரம் வந்துடுச்சு” என்று மீண்டும் சிரித்தார் ஜெயந்தன்.கச்சேரி இல்லாத நாட்களிலும் ஜெயந்தன் அப்படி தான். சம்மந்தமில்லமல் பேசிவிட்டு தானாக சிரித்துக் கொள்வார். மற்றவர்கள் அவர் பேச்சை ரசித்தார்களா என்றெல்லாம் கவலைப் படுவதில்லை.

‘ஏன் ஜெயந்த் தானா சிரிச்சா.. அவனுக்கு சாமியார் ஆசை வந்துடுச்சுன்னு யாரும் சொல்ல மாட்டாறாங்க?’ என்று யோசித்தார் ராம்சரண்.

“அவன் எப்பவுமே அப்படி தான். அவன விடு. நீ சொல்லு. இப்ப நீ சாமியாராபோயிட்டன்னா உன் ஃபேமிலிக்கு ஸ்ட்ராங்க் ப்னான்சியல் சப்போர்ட் ஏற்பாடுபண்ணி இருக்கியா?” என்று கேட்டார் கண்ணன்.

“ஹாஹாஹா.. பணம் அதிகமா இருந்தாலே இப்படி தான் யோசிக்க தோனும்” என்று விட்டத்தைப் பார்த்துச் சிரித்தார் ஜெயந்தன்.

“சரண்.. நீ நிஜமாவே சீரியசா இருந்தா நான் ஒண்ணு சொல்றேன். ஒரு மூனு லட்சம் கட்டிட்டா போதும்.. பீச் ஓரமா ஒரு தனி காட்டேஜ்.. எல்லா வேலையும் செய்றதுக்கு தனி தனியா ஆளு. லைஃப பீஸ்ஃபுல்லா லீட் பண்ணலாம்” என்றார் சுந்தர்.

“அந்த மூணு லட்சத்தயும் ஃபேமிலிக் கிட்டயே கொடுத்துட்டு… ஃப்ரீயாவே திருவண்ணாமலையில ஒரு ரெப்யூட்டட் ஆசிரமத்துல வேணும்னா போய் சேர்ந்துக்கோ.என் சித்தப்பா அங்க தான் இருக்கார். ரெஃப்ரல் ஸ்கீம்ல சுலபமா சேர்ந்துக்கலாம். அதெல்லாம் பிரச்சனை இல்லை. ஆனா காலையில நாலு மணிக்கு எழுந்ததில் இருந்து எல்லா வேலையும் நீயே தான் பார்த்துக்கணும்” என்றார் கண்ணன்.

“நீ பேசாம சொந்தமா ஆசிரமம் ஆரம்பிச்சுடேன். மத்த எல்லாத்தையும் விடசுலபமான வழி இதான். இதுல ரொம்ப அட்டராக்டிவ் ஃபீச்சர்ஸ் எல்லாம் இருக்கு” என்று மேலும் சிரித்தார் ஜெயந்தன். கச்சேரி முடியும் வரை ராம்சரண் எதற்குமே வாய் திறக்கவில்லை.

மீண்டும் திங்கட்கிழமை. அதே அலுவலகம். அதே ஊழியர்கள். அதே மரியாதையான பார்வைகள். அனைவரும் ‘டெலி கான்ஃப்ரன்ஸ்’ அரங்கத்தில் அமர்ந்திருந்தனர். ஆனால் ராம்சரணுக்கு மட்டும் மனம் அதில் ஒட்டாமல் ஏதோ யோசித்துக் கொண்டிருந்தது.

‘முதல்ல எதாச்சும் லோக்கல் ஆசிரமத்துல.. பார்ட் டைம் சாமியாரா இருந்து எக்ஸ்பிரியன்ஸ் கெயின் பண்ணனும். அப்புறம் தான் மத்தத பத்தி யோசிக்க க்ளியர் கட்டா ஐடியா கிடைக்கும்.’

– தினேஷ் ராம்