Shadow

சுயம்வரம் – 2

“அவன் எங்க சாப்பிட்டானா??” என்று தன் மனைவியிடம் கேட்டார் பத்மநாபன்.

“வீட்டுக்கு வந்ததுல இருந்து அந்த பொட்டிய வச்சிக்கிட்டு என்னமோ பண்ணிட்டு இருக்கான்” என்றார் அவன் தாய்.

மடி கணினிக்கு ராஜேஷின் தாய் வைத்த பெயர் “பொட்டி”.

ராஜேஷின் அறைக்கு சென்றவர், “என்ன ஆபீஸ் வேலையா??”  என்று கேட்டார்.

அசடு வழிந்துகொண்டே,

“அந்த பொண்ணுக்கு அனுப்ப என்னுடைய தகவல்கள் அனைத்தையும் தயார் படுத்திகிட்டு இருக்கேன்”
என்றான்.

“அட.. உனக்கு கூட பொறுப்பு வந்துடுச்சு போல!! சரி.. சரி.. காட்டு பார்ப்போம்” என்று அதனை பார்க்க தொடங்கியவர்,

“டேய்.. ராஜேஷ்  என்னடா இதெல்லாம். நீ எந்தெந்த கம்பெனில எத்தன வருஷம் வேலை பார்த்த என்ன கிழிச்சன்னு யாரு கேட்டா ??” என்றார் கடுப்பாக.

“அவ தான் ஈ மெயில் அனுப்ப சொல்லி இருக்காளே!!” என்றான் ராஜேஷ்…

“அதுக்காக ஏதோ வேலைக்கு அப்ளை பண்ற மாதிரி ப்ராஜெக்ட் தகவல் எல்லாம்  ஏன்டா அனுப்புற?”

“நீ இதுக்கு சரிப்பட்டு வர மாட்ட போல!! லக்ஷ்மி இவனோட ஜாதகத்த கொஞ்சம் கொண்டு வா” என்றார்.

“ஐயோ.. அப்பா ஜாதகமா?? இவ்ளோ மாடர்னா விளம்பரம் கொடுத்தவங்க ஜாதகமா பார்க்க போறாங்க??” 
“ஆமா இதெல்லாம் தெளிவா பேசு. வேலைக்கு போறவங்க தான் வேணும்னா மேட்ரிமோனியல் சைட்ல தான் போட்டோவோடு போட்டிருக்க போறாங்க.”
“அப்புறம் என்ன அனுப்புறது?”
“ம்ம்.. “
“ம் னா?”
“உனக்கு ஒன்னும் இல்லன்னு.. மெடிக்கல் செர்ட்டிஃபிக்கேட் அனுப்பி வையேன்.”
“அப்பா. மூளைப்பா உங்களுக்கு” என்று ராஜேஷ் கட்டி பிடித்துக் கொண்டான் அப்பாவை.

ஒரு வழியாக அவனுடைய பொது விவரங்களையும் உடன் அவனது மெடிக்கல் செர்ட்டிஃபிக்கேட்டையும் அவளுக்கு ஈமெயில் மூலம் அனுப்பி வைத்தான்.

எழுத்து தேர்வுக்கு எப்படியும் அழைப்பு வரும் என்ற நம்பிக்கைஒரு புறம்  இருந்தாலும், மற்றொரு புறம் ஒரு வித பதட்டத்துடனேயே காணப்பட்டான் ராஜேஷ்.

தொடரும் …..