Shadow

சுறா கண்டேன் – மு.க

உடன்பிறப்பே,

நான் முன்பு போல அவ்வளவாக திரைப்படங்களைப் பார்க்க என்னுடைய நேரங்களை செலவிடுவதில்லை. தொடர்ந்து இடையறாத அலுவல் பணி இருந்து வருவதனால் அவைகளுக்காக நான் தனியாக நேரத்தை ஒதுக்குவதில்லை. ஏன் என் எழுத்தில் உருவான படங்களைக் கூட சிறப்புக் காட்சியின்பொழுது திரை நட்ச்சத்திரங்களை வரவைத்து என்னுடன் சேர்த்து அவர்களையும் பார்க்க வைத்து நான் எவ்வளவு உறுதி படைத்த கல்நெஞ்சம் கண்டவன் என நிரூபிப்பதோடு சரி. ஆனால் தம்பி விஜயின் ஐம்பதாவது படமான சுறாவை நேற்று அண்ணா அறிவாலயத்தில் குறுந்தகடு மூலம் பார்த்து ரசித்தேன்.இது ஒன்று போதும் நான் தமிழ் மக்களின் மீது வைத்துள்ள பற்றை அவதூறு பேசிவரும் எதிர்க் கட்சிகள் புரிந்துகொள்ள.

முதலில் இது போன்றதொரு படத்தை தாயாரிக்க ஒப்புக்கொண்ட தம்பி சங்கிலி முருகனுக்கு என்னுடைய பாராட்டை நான் தெரிவித்துக் கொள்கிறேன். எஸ்.எ.சந்திரசேகர் என அழைக்கப்படுகிற திரைப்பட இயக்குனரும், இளையதளபதியின் தந்தையுமான அவர்தான் இந்த படத்தின் கதையைக்கேட்டு தேர்வு செய்ததாக நான் கேட்டறிந்து சொல்லொண்ணா துயரடைந்தேன்.அப்பொழுதே தெரிந்துவிட்டது எனக்கு இந்த படத்தின் தரம் என்னவென்று. காரணமிருக்கிறது அவர்தான் தம்பி விஜயை வழிநடத்தி வருகிறார்.

உடன்பிறப்புக்களான உங்களுடன், படத்தின் கதையை பகிர்வதில் நான் அளவிலா மகிழ்ச்சியடைகிறேன். யாழ் நகர் என்கிற மீனவ குப்பத்தில் வசிக்கும் சுறா என்கிற இளைஞன் அந்த பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற பாடுபடுகிறான். அதாவது அவனுக்கு மட்டும் வீடு கட்டிக் கொள்ளாமல் அந்த ஊரிலுள்ள அனைவருக்கும் வீடு கட்டிக் கொடுத்து விட்டுதான் இல்வாழ்க்கையில் ஈடுபடுவேன் என ஒரு சூளுரையுடன் வாழ்ந்து வருகிறான். அதனால் அவன் எதிர்கொள்ளும் தடைகள், சங்கடங்களை முறியடித்து எதிர்ப்புகளை பூமாலையாக்கி திருமண வாழ்வில் நுழைந்தானா, இல்லையா? என்பதுதான் சுறா என்கிற திரைக்கூழையின் கதை.

ஒருவகையில் நாம் ஒப்பிட்டுப் பார்த்தால் நம்முடைய அரசு கடந்த காலங்களில் செய்துள்ள சாதனைகளையும், இப்பொழுது செய்துக் கொண்டிருக்கும் மக்கள் நலப்பணிகளையும், வரும் காலங்களில் நான் மேற்கொள்ளவிருக்கிற சேவைகளையும், முன் கூட்டியே தெரிந்துக் கொண்டு சூசகமாக நம்மை பாராட்டியுள்ளனர்.

நம் தமிழக அரசைப் போலவே எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கவேண்டும் என, இந்த படத்தின் நாயகனும் ஏழை உடன் பிறப்புகளுக்காக போராடுகிறான். அதற்காக தீய வழியிலும் செல்கிறான். ஆனால் இறுதியில் அவன் எதிரிகளை மாய்த்து வெற்றி காண்கிறான் நம்மைபோலவே. நம் அரசு இப்பொழுது அறிவித்திருக்கும் திட்டமான குடிசையே இல்லாத மாநிலமாக மாற்றிட, தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைத்தான் தம்பி விஜய் படத்தில் செய்து அதில் நிறைவும் பெறுகிறார்.

தம்பி விஜய்  நடிப்பில் சொல்லிக் கொள்ளுமளவிற்கு எதுவும் செய்யவில்லை என்றாலும், மீனை சுத்தம் செய்து குழம்பு வைக்கிறார், பணக்கார வீட்டுப் பெண்ணாக வரும் செல்வி.தமன்னாவை அவரின் தற்கொலை முயற்சியிலிருந்து காப்பாற்றுகிறார். இதில் நகைப்பிற்குரிய செய்தி என்னவென்றால் செல்வி.தமன்னா தான் செல்லமாக வளர்க்கும் நாய்க்குட்டி தொலைந்ததற்காக தற்கொலை செய்ய முடிவெடுக்கிறார். இதிலிருந்தே தெரிகிறது அவருடைய இளகிய மனம். மேலும் தம்பி விஜய் நடனமாடுகிறேன் என கோவிலில் அங்கபிரதட்சனம் வருவது போலவும், ஐங்கரன் முன்பு தோப்புக் கரணம் போடுவது போலவும் ஆடுகின்றார். கெட்டவர்களான எதிரிகளிடம் சண்டை போடுகிறார். மக்கள் மனதை நெகிழவைக்க முயற்சித்து ஏதேதோ வசனம் பேசுகிறார் அண்ணாவின் பொன்மொழி வார்த்தைகள் உள்பட, ஆனால் அவைகள் யாவும் நம் நெஞ்சில்தான் ஒட்ட மறுக்கிறது செவிடன் காதில் ஓதிய சங்குக் கணக்காய் வீண் வேலை.

செல்வி.தமன்னா உடையில் வறுமையும், அழகில் செழுமையும், தன் இடையை காண்பிப்பதில் அவரது தாராள குணத்தையும் பிரதிபலிக்கிறார். தான் வளர்த்த இரமேஷ் என்கிற நாய்க் குட்டியின் பிரிவின் துயரால் ஒப்பனை செய்துக் கொண்டு, தற்கொலை செய்ய முயற்சிக்கிறார். இதிலிருந்து தெரிகிறது அவருடைய குணப்பாத்திரமும், மனநிலையும். ஆனால் இரண்டாம் சந்திப்பிலேயே தம்பி விஜய் மீது காதல் வயப்படுகிறார். தன்காதலை வெளிப்படுத்திய பிறகும் ஏற்க மறுப்பதால் அதற்கும் தற்கொலை செய்துகொள்வேன் என சொல்லுவதால், தம்பி விஜய் ஒரு காட்சியில் “லூசு” என்கிற பட்டத்தை அவருக்கு வழங்கியதை தக்க வைத்துக் கொள்கிறார். செல்வி.தமன்னாவின் முந்தைய படங்களின் ஓரிரு பாடல் காட்சிகளை நேரம் கிடைத்தபோது பார்த்திருக்கிறேன்.அதேபோல இந்தப் படத்திலும் நடனமாடுகிறார். ஆனால் நடிப்பு விஷயத்தில் அவர் விஜயிக்கு சளைத்தவர் இல்லை என்பதை மெய்ப்பித்து நம் மனதில் இடம் பிடிக்கிறார்.

தம்பி வடிவேலின் நகைச்சுவையை நான் வெகுவாக ரசித்து திளைப்பவன். ஆனால் இந்த படத்தில் என்னை ஏமாற்றியிருக்கிறார் என நான் சொல்வது மிகுந்த மனவேதனையை தருகிறதெனக்கு. தொந்தி பிதுங்கி வெளியே வரும் அளவிற்கு வண்ண வண்ணமான ஆடைகளை அணிந்து வருகிறார். உள்ளாடைகளான பனியனையும் அவ்வாறே அணிந்து வருகிறார். மக்களை சிரிக்க வைப்பதற்கு பதிலாக எரிச்சலூட்டி ஏமாற்றமடைய செய்துள்ளார். ஆனால் தம்பி விஜய் அந்த குறையை அவர் பாரமாக பாவித்து தன் தோளில் சுமந்து ஓரளவு ஒப்பேற்ற முயன்றிருக்கிறார். நடிப்பு,வசனம்,நடனம் போன்ற வாய்ப்பு கிடைத்த வழிகளில் எல்லாம். ஒரு காட்சியில் தம்பி வெண்ணிற ஆடைமூர்த்தியின் வேட்டி அவிழ்க்கப்படும் அதனால் அந்த காட்சி மாறத்தழும்பு போலவே ஒட்டிக் கொண்டுவிட்டது.

படத்தின் வில்லன் பாத்திரத்தில் வருபவர் அந்த பாத்திரத்தின் இயல்பை காட்ட முடியாமல் கவிழ்த்துவிட்டார், அந்த பாத்திரப் படைப்பை. தோற்ற அமைப்பு, முகபாவனை அறவே அவருக்கு கைகொடுக்கவில்லை. தன் நாசியின் துணைகொண்டு நாய் மோப்பம் பிடிப்பது போல தன்னிடத்தில் மறைந்திருக்கும், தன்னுடய தீய நடவடிகைககளை வெளிச்சத்திற்கு கொண்டுவர முயன்ற ஒருவரை கொலை செய்கிறார். மேலும் இரண்டு பேருக்கு தேநீரில் விஷம் கலந்து கொடுத்து வஞ்சகமாக கொலை புரிகிறார்.

நான் படத்தில் ரசித்தது, வோடஃபோன் விளம்பர படத்தில் வரும் நாய்க்குட்டியின் சகோதரனையோ, சகோதிரியையோ நடிக்க வைத்துள்ளனர் ரமேஷ் என்ற பாத்திரத்தில்.

தம்பி எஸ்.பி.ராஜகுமார் மீனவர்களின் வாழக்கை சூழலை திரைக்கு கொண்டுவர நினைத்ததற்கு என்னுடைய பாராட்டையும், வாழ்த்தையும் தெரிவிக்கும் அதேநேரத்தில் நீங்களும் படக் குழுவினரும் இதற்கு முன்பு மீனவர்கள் வாழும் பகுதியை பார்த்ததில்லையோ என ஒரு ஐயம் எழுகிறது. வைகைப்புயல் அறிமுகக் காட்சியில் பல்வேறு விதமான வண்ணத்தில் ஆடைகளை அவரும் அவருடன் சேர்ந்து வருபவர்களும் அணிந்திருப்பதும், படம் நெடுக அதேபோல தம்பி வடிவேலு தோன்றுவதும், இளையதளபதி விஜய் தான் மீனவன் எனக் காட்டிக்கொள்ள ரப்பர் காலணியை(செருப்பு) போட்டிருப்பதும், தேவை படும் பொழுது ஷூ போட்டுக் கொள்வதும், தம்பி விஜய் மட்டும் நல்லவிதமான ஆடைகளை அணிந்திருப்பது எந்த வகையில் நியாயம்? நீங்கள் எந்த காலத்தில் இருக்கிறீர்கள் மீனவ உடன் பிறப்புகளை இப்படித்தான் சித்தரிப்பதா?

இசை, பாடல், ஒளிப்பதிவு, படக்கோர்வை என தொழில்நுட்ப ரீதியிலும் இது பத்தோடு பதினொன்றாகத்தான் உள்ளது.

சுறா இன்னமும் கூட்டை தாண்டாத குஞ்சுப் புறா.

தம்பி விஜயிக்கு ஒரு அறிவுரை/கண்டனம்/அறிக்கை.. என் நண்பரும், முன்னாள் முதல்வருமான மக்கள் திலகம் திரு.எம்.ஜி.ஆர் முன்பு இருந்தார், இருக்கிறார், இருப்பார். சில முதிர்ச்சியடையாத முட்டாள் நடிகர்கள் அவரை பின்பற்றுகிறேன், அவரின் வழித்தோன்றல் என அவர் போல நடக்கிறேன், நடிக்கிறன் என்பது போலான மன்னிக்க முடியாத குற்றங்களை செய்து வருகிறார்கள்.அதனால் சட்டம் தன் கடமையை செய்யும்.

இதுபோன்ற படங்களையும் பார்த்து விமர்சனம் எழுதியதற்காக வரும் ஏழாம் தேதி கலைவாணர் அரங்கத்தில் “சுறா படத்தைப் பார்த்த சூரியனே” என்ற தலைப்பில் பாராட்டுவிழா நடத்த முடிவு செய்திருக்கிறார்களாம். அங்குச் சந்திப்போம் உடன்பிறப்பே. வருவாயா உன்னை எதிர்பார்த்திருப்பேன்.

அன்பு
மு.க

– சே.ராஜப்ரியன்