நட்பைக் கொண்டாடும் நகைச்சுவைத் திரைப்படம்.
20 வருடங்களுக்குப் பின், ஃபேஸ்புக் மூலமாக தன் நண்பனைச் சந்திக்கிறான் கால்வின் ஜாய்னர். அடுத்த நாள் காலை சி.ஐ.ஏ. கால்வின் வீட்டு வாசலில் நிற்கிறது. அவன் சந்தித்த நண்பனான பாபி ஸ்டோன் ஒரு கொலை செய்து விட்டு, செயற்கைக் கோள் சம்பந்தமான குறியீட்டு இலக்கங்களை தீவிரவாதிகளிடம் விற்கப் பார்க்கும் மோசமான நபர் என சி.ஐ.ஏ.வால் கால்வினுக்குச் சொல்லப்படுகிறது. பாபியோ மீண்டும் கால்வினை அணுகி உதவி கேட்கிறான். கால்வின் சி.ஐ.ஏ. பக்கமா? நண்பன் பக்கமா? என்பதே படத்தின் கதை.
கதை ஓர் ஆக்ஷன் படத்துக்கான கருவைக் கொண்டிருந்தாலும், நகைச்சுவையையே பிரதானமாகக் கொண்டுள்ளது. ஸ்டேண்ட்-அப் காமெடியனான கெவின் ஹார்ட், கால்வின் கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்துகிறார். தான் வாழும் வாழ்க்கை மீதுள்ள விரக்தியைக் காட்டுவதாகட்டும், நண்பனின் தொல்லை தாங்க முடியாமல் கழட்டி விடப் பார்ப்பதாகட்டும், நண்பன் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படும் பொழுது துடிப்பதாகட்டும் கெவின் தான் படத்தைச் சுமக்கிறார். அவரின் முக பாவனைகளையும், உடல் மொழியையும் நம்பியே இயக்குநர் ராசன் மார்ஷல் தர்பர் இப்படத்தை இயக்கியிருப்பார் என்பது திண்ணம்.
பாபி ஸ்டோனாக வ்ரெஸ்ட்லிங் புகழ் ‘ராக்’ ட்வெயின் ஜான்சன் நடித்துள்ளார். அவரது உடம்பு காமெடிப் படச் சட்டகத்துக்குள் வரக் கொஞ்சம் சிரமப்படுகிறது. அதுவும் கெவின் ஹார்ட் போல் உச்ச நகைச்சுவை நடிகருக்கு ஈடு கொடுப்பது சவாலான காரியமே! ஆனால், ராக் அடிபட்ட மனிதரின் மன வேதனையை அழகாக காட்சிகளில் வெளிபடுத்தியுள்ளார். எது அவரை 20 வருடங்களாக உறுத்தியதோ, அதிலிருந்து வெளிவர அவர் படும்பாட்டை அழகாக தன் நடிப்பில் காட்டியுள்ளார்.
இவர்கள் இருவருக்குமான உயர வேற்றுமை, இவர்களைக் கச்சிதமான நகைச்சுவை ஜோடியாகத் திரையில் காட்டுகிறது. எதிரி அழிந்து, நாயகர்கள் உலகைத் தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றிய பின்னும் படம் சில நிமிடங்கள் நீள்கிறது. படம் ஒருவனை அவமானப்படுத்துவதில் இருந்து தொடங்கி, அதை அவன் எப்படி முடிக்கிறான் என்பதோடு முடிகிறது. ‘உருவு கொண்டு எள்ளாமை வேண்டும்!’ என்பதை வலியுறுத்துவதோடு, படம் பேசும் இன்னொரு விஷயம் விரக்தி மனநிலை. நல்ல வேலையில் இருந்தும், காதலித்தவளையே கரம் பிடித்திருந்தும், கால்வின் வாழ்வில் ஒரு பிடிப்பில்லாமல் தவிக்கிறார். கல்லூரியில், ‘தி கோல்டன் ஜெட்’ என்ற சாகசப் பெயரைப் பெற்றவர், கல்லூரிக் காலம் போல் பல்டி அடிக்க நினைத்து கீழே விழும் பொழுது திரையரங்கம் சிரிப்பொலியில் அதிர்கிறது. அத்தகைய ‘சிரிப்பொலி’ கணங்கள் படம் நெடுகே உள்ளது.