Shadow

சேதுபதி விமர்சனம்

Sethupathi Tamil Review

‘போலிஸ் வேலை தான் கெத்து. யாரையும் அடிக்கலாம்’ என்பான் நானும் ரெளடிதான் பாண்டி. அதே போலொரு ஆள் தான் சேதுபதியும். பொதுப்புத்தியில் உறைந்து விட்ட நியாய தர்மங்கள் மட்டுமே சரியென்று நம்பி, அதைப் பிடிவாதமாகக் கடைபிடிக்கும் நல்ல (!?) போலிஸ்.

அது எத்தகைய தர்மம் என்றால்? எய்தவனுக்கு நீதிமன்றம், எய்யப்படும் அடியாட்களுக்கு எவ்விதக் கேள்வியுமின்றி என்கவுண்ட்டர் என்பதே அது. அப்படியான தர்மத்தை வழுவாத நேர்மையான போலிஸ் சேதுபதி. பாதிக்கப்பட்டோரைக் கண்டால் மனம் இரங்கும் ஈரமனசுக்காரர். இப்படிப்பட்டவரை உரண்டைக்கு இழுத்து படாதபாடுபடுகிறார் Dr.வாத்தியார்.

வாத்தியாராக எழுத்தாளர் வேல ராமமூர்த்தி நடித்துள்ளார். தமிழ் சினிமா பலமுறை கண்டுவிட்ட மிகக் கொடுமையான வில்லன். கதாபாத்திரத்திற்கேற்ற தோரணையான நடிகரெனினும், அசுவாரசியமற்ற கதாபாத்திர வடிவமைப்பால் பொலிவிழுந்து போகிறார். ஒரு போலிஸ்காரரை எரித்துக் கொன்றுவிட்டு, தன் மகளைப் பார்த்து, ‘முடிந்தது’ என வாத்தியார் ஜாடை காட்டுவதும், அம்மகளும் பதற்றமின்றி நெற்றிப் பொட்டை அழிப்பதும் அடிவயிற்றில் ஒரு திகிலைக் கிளப்புகிறது. சக மனிதர் மீதான நம்பிக்கைகளைப் பொய்த்துப் போக வைக்கும் காட்சி அது. இன்னொரு காட்சியில், காவல் நிலையத்துக்குள் சாமி படங்களுக்குக் காட்டப்பட்ட கற்பூரத் தட்டைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு, ‘என் லிமிட்டுக்குள் வச்சு எரிச்சிருந்தா பரவாயில்லை’ என பற்றற்ற குரலில் பவ்வியமாகச் சொல்கிறார் இன்ஸ்பெக்டர் ஒருவர்.

சேதுபதியுடன் பணி புரியும் சக காவல்துறை அதிகாரி மூர்த்தியாக நடித்திருப்பவர் ஈர்க்கிறார். விஜய் சேதுபதியோ காவல்துறை அதிகாரி சேதுபதியாகக் கலக்குகிறார். ‘பிரமோஷனுக்காகலாம் வேலை செய்ய முடியாது’ என்ற கம்பீரம் அவருக்குக் கச்சிதமாய்ப் பொருந்துகிறது. ஆனால், அவ்வளவு பெட்ரோலை பேரலிலிருந்து கொட்டி, அந்த பேரலையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு, பெப்பரப்பேன்னு அமர்ந்து தீக்குச்சியை வீசும் அவரது புத்திசாலித்தனத்தைப் பார்க்கும் பொழுதுதான் ‘கெதக்’கென்று இருக்கிறது.

நிவாஸ் K.பிரசன்னாவின் பின்னணி இசையும், பாடல்களும் படத்தின் பெரும்பலம். தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாதின் படத்தொகுப்பும் சேதுபதியை நல்ல கமர்ஷியல் சினிமாவாக்கியள்ளது. படத் தலைப்பினைப் போடும் பொழுது வரும் போலிஸ்காரர்களின் கடின வாழ்வைச் சித்தரிக்கும் மாண்டேஜ் காட்சிகள் அதற்கோர் நல்ல உதாரணம். என்ன ட்ராஃபிக் போலிஸ், லஞ்சமாகத் தரப்பட்ட பணத்தைத் திருப்பித் தந்து அக்கறையோடு அனுப்பி வைப்பது மட்டும் நகைச்சுவையாகத் தெரிகிறது.

இயக்குநர் S.U.அருண் குமாரின் இரண்டாவது படமிது. ஒரு விஷயத்தில் ஆச்சரியப்படுத்துகிறார் அருண். முந்தைய படத்தில் பண்ணையாருக்கும், அவரது மனைவிக்கும் இடையேயான காதலைக் கவிதையாகக் காட்சிபடுத்தியிருப்பார். அப்படி, இப்படத்திலும் சேதுபதிக்கும் அவரது மனைவிக்குமான காதலைப் பதிந்துள்ளார். இதிலென்ன ஆச்சரியம் என்றால், தமிழ் சினிமாவின் 99.9% காதல் விடலைத்தனமானது. சேதுபதி மீசையை முறுக்கி என்கவுண்ட்டர் செய்யும் அழகைக் கண்டு ரம்யா நம்பீசன் காதலில் விழுகிறார் என்ற அபத்தங்கள் இல்லாமல், மணமானவர்களுக்கு இடையேயான ஊடலையும் காதலையும் பதிந்துள்ளார். அந்தக் குட்டிப் பசங்களுடன் சேதுபதியின் குடும்பத்தைப் பார்க்க மனம் நிறைவாக உள்ளது.