சாமானியர்களைச் சமூகம் எப்படி ஜோக்கராக்குகின்றது என்பதே படத்தின் கதை.
‘கோண மண்டை’யாக இருப்பதால் பிடிக்கலை எனச் சொல்லிய பின்னும், மல்லிகாவைப் பின் தொடர்ந்து கொண்டே இருக்கும் வழக்கமான தமிழ் சினிமா ஹீரோதான் மன்னர்மன்னன். ‘யாருகிட்டயும் பேசாமலும், தலை நிமிராமலும் இருக்கும் பெண்ணைப் பார்க்கலாமா?’ என்று மன்னர்மன்னனின் மச்சான் கேட்கிறார். படத்தின் கதை நடக்கும் களம் தருமபுரி. படம் முழு நீள(!?) அரசியல் நையாண்டிப் படம். தமிழகத்தில் அதிகரித்து வரும் ‘கெளரவக் கொலை’ குறித்த ஒரே ஒரு வசனம் கூட வராதது எதேச்சையானதாக இருக்கலாம். ஏனெனில் படம் சமகால அரசியல் அவலங்கள் அனைத்தையும் சகட்டுமேனிக்குப் பகடி செய்கிறது.
‘அவங்க கொடுக்கலைன்னா நாமலே எடுத்துக்கணும் பைய்யா. அதுதான் பவரு’ என மன்னர்மன்னனின் அரசியல் குருவாகக் கலக்கியுள்ளார் எழுத்தாளர் பவா செல்லத்துரை. படத்தின் ஆகப் பெரிய பலம் அதன் கதாபாத்திர வடிவமைப்புகளே! ட்ராஃபிக் ராமசாமியின் செயற்பாடுகளையும், எழுத்தாளர் ஜெயகாந்தனின் கம்பீரத்தையும் ஞாபகப்படுத்தும் ‘பெட்டிகேஸ்’ பொன்னூஞ்சல் பாத்திரத்தில் பேராசிரியர் மு.ராமசாமி அசத்தியுள்ளார். காம்ரேட் இசையாக காயத்ரி கிருஷ்ணா கவனத்தை ஈர்க்கிறார். பின் தொடர்பவனைக் கை பிடிப்பதோடு, கணவனை விருப்பத்திற்காக வேலையை விடும் மல்லிகாவாக வரும் ரம்யா பாண்டியன், அவரது முக பாவனைகளாலும், மேக்கப்பற்ற எளிய அழகாலும் ஈர்க்கிறார். குக்கூ போன்று, காதல் தோய்ந்த வரிகள் இல்லாவிட்டாலும், யுகபாரதியின் ‘ஜாஸ்மினு’ பாடல் வரிகள் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. எழுத்தாளர் ரமேஷ் வைத்யா எழுதிய ஹிந்தி வரிகள் கலந்த ‘செல்லம்மா’ பாடலை அற்புதமாக்கியுள்ளார் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன். ஒளிப்பதிவாளர் செழியன் வழக்கம் போல் தன் வேலையைத் திறம்படச் செய்துள்ளார்.
சுகாதாரத்தைப் பேண, கிராமங்களில் இலவசமாகக் கழிப்பறை கட்டும் அரசாங்கத்தின் ‘வாழ்ந்து பார்ப்போம்’ திட்டத்தித்தில் ஊழல் நடக்கிறது. அதனால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர் மன்னர் மன்னனும், அவரது மனைவி மல்லிகாவும். போராடிப் பார்க்கும் மன்னர்மன்னனை ஜோக்கராக்கி விடுகின்றனர். தன்னை ஜனாதிபதியாக பதவி பிரமானம் செய்து கொள்கிறார் மன்னர்மன்னன். மிஸ்டர் பிரஸிடென்ட்டாக குருசோமசுந்தரம் அதகளம் புரிந்துள்ளார். அவர் கண்ணை உருட்டுவதும், ‘எனக்கு கோவம் வந்துச்சி, பகத்சிங்க அவுத்துவிட்டுருவேன் பாத்துக்க’ என்று மிரட்டுவதும் அமர்க்களம்.
“சிறையில் நான் மொபைல் உபயோகிக்க மாட்டேன். நானே தவறான முன்னுதாரணம் ஆகிடுவேன்” எனச் சொல்லும் மக்களின் ஜனாதிபதி முன்னெடுக்கும் சில போராட்டங்கள் எல்லாம் மிக அபத்தமான ஆபத்தான முன்னுதாரணங்கள். விஷப் பாம்புகளோடு கண்ணாடிப் பெட்டியில் அமரப் பார்ப்பது, தன்னைத் தீயிட்டுக் கொள்வது போன்றவைகளைச் சொல்லலாம். பின்னால் நடப்பது, கரடி வேஷம் போட்டு காறி உமிழ்தல் என சில கவன ஈர்ப்புப் போராட்டங்கள் அட்டகாசம்.
அரசியல் பகடிப் படமாக ஜோக்கரின் முதல் பாதி கன கச்சிதம். மிக மிக அருமையான சோஷியல் சட்டயர் படமாக வந்திருக்க வேண்டியது. இரண்டாம் பாதி, குறிப்பாக முடிவு தரும் மன அயற்சியால், போராட்டங்களின் மீதான நம்பிக்கையை வலுவாக நீர்த்துப் போகச் செய்கிறது. ‘நமக்கெதுக்கு வம்பு?’ என்ற பொதுப்புத்தியை மேலும் வலுவாக்குகிறது படம். பாசிட்டிவான முடிவு, ‘வீதிக்கு இறங்கிப் போராட வா நண்பா’ என்ற அழைப்பு இல்லாமல் பலரைத் திரட்டியிருக்கும். அதிகாரத்தைப் பகடிக்கு உட்படுத்தி, அதன் மூலம் இயல்பாய் வர வேண்டிய உணர்வெழுச்சியையும், சமூகத்தின் மீது எழ வேண்டிய கேள்விகளையும் எழுப்பாமல், எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றியது போல் மேலும் பயத்தை உண்டு செய்வதை படம் தவிர்த்திருக்கலாம்.
படத்தில் ஓர் அற்புதமான குறியீட்டுக் காட்சி வருகிறது. இலவச கழிப்பறைத் திட்டத்தைப் பற்றி, அரசு அலுவலகத்தின் வெளியே நின்றவாறு ஓர் அதிகாரி, யாருக்கு எவ்வளவு கமிஷன் போகவேண்டும் என்பது போல் ஃபோனில் பேசிக் கொண்டிருப்பார். அந்த அலுவலகத்தின் அவலமான கழிப்பறையை இயக்குநர் ராஜூ முருகன் காட்டுவதோடு, ஓட்டை பக்கெட் மூலமாக தண்ணீர் வேகமாகப் போவதாகவும் காட்டியிருப்பார். திரையரங்கில், அந்தக் காட்சிக்குப் பலத்த கைதட்டல் (பெரும்பாலான காட்சிகளுக்கும்தான்!). தமிழ் சினிமாவின் மாற்றம் குறித்த பெருமிதமும் மகிழ்ச்சியும் ஒருங்கே எழுந்தது. ஆனாலும், படத்தின் முடிவில் பேராசிரியர் மு.ராமசாமி நேரடியாக கேமிராவைப் பார்த்துப் பேசும் பொழுது அப்பெருமிதம் காற்றோடு கலந்து விடுகிறது.
இப்படியொரு கருவை யோசித்தற்காகவே, இயக்குநர் ராஜூ முருகனுக்கு மனம் கனிந்த பாராட்டுக்கள். அமைச்சர்கள் ஹெலிகாப்டரை வழிபடுவது, நாக்கைத் துருத்துவது, ஏ/சியில் உண்ணாவிரதம், கலாய்க்கும் இணைய பிரபலங்களின் பெயர்கள், முப்பாட்டனின் மதம் என வசனங்களில் முருகேஷ் பாபுவோடு இணைந்து சரவெடி கொளுத்திப் போட்டுள்ளார் ராஜூ முருகன்.