(Despicable Me 2)
வெறுக்கத்தக்க மனிதரான க்ரூ, மூன்று பெண் குழந்தைகளின் பாசக்கார தந்தையாக மாறி விடுகிறார். அதுவும் சிறு வயதில் தன் தாயிடமிருந்து கிடைக்கப் பெற்ற அலட்சியமும் அசிரத்தையும், அவர் மனதிலூன்றி க்ரூவை நல்ல தகப்பனாக மாற்றி விட்டிருந்தது. அது மட்டுமின்றி, உலகின் தலை சிறந்த வில்லனாக வேண்டுமென்ற லட்சியத்தை எல்லாம் மூட்டை கட்டிவிட்டு, ஜாம் & ஜெல்லி செய்து விற்பவராக தொழிலையும் மாற்றி விடுகிறார்.
யாரோ ஒரு பிரகஸ்பதி, ஓர் ஆய்வுக்கூடத்தையே திருடி விடுகிறான். அவனைப் பிடிக்க, ‘பாம்பின் கால் பாம்பறியும்’ எனச் சொல்லி க்ரூவின் உதவியை நாடுகிறது ஏ.வி.எல். (Anti-Villian League). க்ரு வில்லனைக் கண்டுபிடிக்கும், முன் ஏ.வி.எல். அதிகாரியான லூசி வைல்ட் மீது காதலில் விழுந்து விடுகிறார். வில்லனைக் கண்டுபிடித்தாரா என்றும் அவரது காதல் என்னானது என்பதும்தான் படத்தின் முடிவு.
அந்த பிரகஸ்பதியின் பெயர் எல் மேக்கோ. அவரொரு மெக்ஸிகன் வில்லன். ஆனால் நம் க்ரூ அளவுக்கெல்லாம் வில்லத்தனம் நிரம்பியவர் இல்லை. தன் ஆகிருதியான உடலை மட்டுமே நம்புவர். க்ரூவை எதிர்க்கும் அளவு அவருக்கு வொர்த்தான வில்லனாக மாறியது எப்படியென்பது என்ற திருப்பம் சுவாரசியம்.
ஆனால், இப்படம் முதல் பாகத்தின் கதை போல் அவ்வளவாகக் கவரவில்லை. வில்லன், காதல் என தமிழ் ரசிகர்கள் மிகவும் தோய்ந்து போன கதைக்களமே அதற்குக் காரணம். திரைக்கதையிலும் போதிய சுவாரசியங்கள் இல்லை. எனினும் நம்மைக் காப்பாற்றுவது மினியன்ஸ்களே! காதலைச் சொல்ல தைரியம் வராத க்ரூ எரிச்சலில் ஃபோனை எரித்து உருக்கும்போது, தீயை அணைக்கிறேன் பேர்வழி என மினியன்ஸ் செய்யும் அட்டகாசத்தை ஓர் உதாரணமாகச் சொல்லலாம். எல்லாம் சரி யார் இந்த மினியன்ஸ்? எங்கிருந்து வந்தார்கள்? ஏன் க்ரூவிடம் வேலை செய்கிறார்கள்? என்ற கேள்விக்கு எல்லாம் முதல் பாகத்திலும் பதிலில்லை. மினியன்ஸ் என்று இவ்வருடம் வெளிவர உள்ள அதற்கான பதிலை அளிக்கிறதாம்.
டெஸ்பிக்கபிள் 1 போலவே, இப்படமும் வெளிவந்த வருடத்தில் (2013) அதிகம் வசூலான 10 படங்களுள் ஒன்று என்ற பெருமையைப் பெற்றுள்ளது.