
எம்.ஏ., பி.எட். படித்த சுந்தரத்திற்கு ‘வெட்டோத்தி இல்ல’த்தை மட்டும் விட்டுவிட்டு அவனின் பெற்றோர் காலமாகின்றனர். அரசு வேலைக்கென்றே காத்திருக்கும் சுந்தரம், தன் வீட்டை வங்கி ஏலத்திற்கு விடாமல் இருப்பதைத் தடுக்க கடத்தல் தொழிலில் இறங்குகிறான். படித்தவனின் வாழ்க்கை எப்படித் திசை திரும்பியது என்பதுடன் படம் நிறைவுறுகிறது.
கரண் சலிப்படையாமல் மீண்டும் நாயகனாக தோன்றியுள்ளார். சுந்தரம் என்னும் பாத்திரத்திற்கு பொருந்துகிறார். முடிந்த வரை நல்லவனாக தம் பிடித்து பார்த்து விட்டு, கடத்தல் தொழிலில் இறங்குகிறார். படித்தவன் நினைத்தால் சுலபமாய் தவறு செய்யலாம் என்ற தமிழ்ப் படங்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுகிறார் கரன். லூர்து என்னும் பாத்திரத்தில் அழகாய் தோன்றி, நாயகனைத் துடுக்காய் காதலிக்கும் வேடத்தில் மீண்டும் அஞ்சலி. ஆனால் ஏனோ சலிப்பு மட்டும் தட்டவில்லை.
காவலரிடம் சிரித்துக் கொண்டே அடிபடும் பொழுதும், பணம் கிடைக்கும் என நம்பி ஏமாறும் பொழுதும், தோழனுக்கு ஏதாவது செய்யணும் என கலங்கும் பொழுதும், ‘கட்டிங் அடிக்கிறோம்; ரூம் போடுறோம்; யோசிக்கிறோம்’ என சொல்லும் பொழுதும் கரணின் நண்பராக வரும் சரவணன் (பருத்தி வீரன் ‘சித்தப்பூ’) அமர்க்களம் பண்ணுகிறார்.
எத்தனை கதாபாத்திரங்கள்? அத்தனைப் பாத்திரங்களுக்கும் ஒரு கதை. அந்தக் கதைக்குள் வஞ்சமும், பழி வாங்கும் எண்ணமும். கன்னியாகுமரியின்
ரத்த சரித்திரம் என்று கூட சொல்லலாம். சுமார் பத்துக் கொலைகள் கணக்கு நேராகும் வரை. லூர்தின் தந்தையான சிலுவையின் அண்ணனைக் கொல்கின்றனர். பன்னிரெண்டு வருடங்களுக்குப் பிறகு, சிலுவை அண்ணனின் கொலைக்கு மூவரைக் கொன்று பழித் தீர்க்கிறார். அதில் ஒருவரின் தம்பி சிலுவையைப் பழி வாங்குகிறான். பழிவாங்கும் அவன் இந்துவாக இருந்து கிறிஸ்துவனாக மாறி காவல்துறையில் சேர்பவன். இவர்கள் இடையில் சிக்கும் நாயகன் என்ன ஏதென்று தெரியாமாலேயே பகடை ஆகிறான். இந்தப் பழிவாங்கும் கணக்கைத் தொங்கலில் விடாமல், இயக்குனர் நீதிமானாக நின்று சிறுவன் ஒருவன் மூலம் கச்சிதமாக நீதியையும், நியாயத்தையும் காப்பாற்றி விடுகிறார். தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் சித்திரகுப்தனின் வேலைப் பளுவைக் குறைக்கின்றனர் என்றால் அது மிகையில்லை.